ராகு கேதுவால் தோஷமா? பெரிய திருவடியைத் துதியுங்கள்!

ஆன்மிக கட்டுரைகள் ஜோதிடம்

karudan - 6
karudan - 2

கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திர நாளில் என்கிறது புராணம்!

இந்த நன்னாளில், கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்கும்!

ஆடி சுவாதி நட்சத்திர நாளில் தான் ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீபெரும்புதூர், நாச்சியார்கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் போன்ற அனைத்து வைஷ்ணவ ஸ்தலங்களிலும் கருட ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் நீங்கும்.
கருடாழ்வார் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால் ராகுவின் தன்மையும் பெற்றிருக்கிறார்.

சுவாதி நட்சத்திரம் சுக்கிரனின் வீடாகிய துலா ராசியில் அமைந்திருப்பதால் சுக்கிரனின் அதிதேவதையாகிய ஸ்ரீ மஹாலட்சுமியின் அம்சமாகவும் விளங்குகிறார். சுக்கிர ஸ்தலமாகிய ஸ்ரீ ரங்கத்தில் பெரிய திருவடியாகி பெரிய கருடனாகவும் அமிர்த கலச கருடனாகவும் அருள்புரிவது குறிப்பிடத்தக்கது.

ராகுவின் சாரம் பெற்ற திருவாதிரை, ஸ்வாதி, சதயம் நட்சத்திரங்களிலும், கேதுவின் சாரம் பெற்ற அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களிலும் ராசி அல்லது லக்னம் அமைய பெற்றவர்கள் இன்று கருடனை தரிசித்து பலனடையலாம்.
ஜெனன ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவை திரிகோணங்களான லக்னம், பூர்வ புன்னியம், பாக்கியம் மற்றும் பித்ரு ஸ்தானங்களில் ராகு, கேது அமைய பெற்றவர்களுக்கு இன்றைய கருட தரிசனம் அபரிமிதமான பலன்களைக் கொடுக்கும்.

ராகுவை ஆத்ம காரகனாக கொண்டவர்களுக்கும் சூரியன் மற்றும் சந்திரனுடன் ராகு, கேது சேர்க்கை பெற்றவர்களுக்கும் கருட தரிசனம் வாழ்நாள் முழுவதும் பலன்களைத் தரும்.
கால ஸர்ப தோஷத்தில் பிறந்தவர்கள் தவறாமல் ஆலயங்களுக்குச் சென்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

பெண் ஜாதகங்களில் கணவனை குறிக்கும் செவ்வாயோடு ராகு சேர்க்கை பெற்றவர்களுக்கு கருட தரிசனம் மேற்கொண்டால் நல்ல காலம் பிறக்கும்.
கோசார ராகு, கேதுவினால் பில்லி சூனியம் போன்ற அபிசார தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோய் ஏற்பட்டவர்கள் கருட தரிசனம் மேற்கொள்ளலாம்.

ஜெனன ஜாதகத்திலோ அல்லது கோசாரத்திலோ புதன், கேது சேர்க்கை பெற்று தைரிய குறைவினால் பகைவர்களிடம் பயந்து நடுங்குபவர்களுக்கு கருட தரிசனம் பலன் தரும்.

கருட சேவை:
பக்தர்களைக் காப்பதற்காக திருமால் கருடவாகனத்தில் எழுந்தருளுவார். கஜேந்திரனைக் காக்க கருட வாகனத்தில் அதிவேகமாக வந்த நிகழ்வு மூலம் இதை அறியலாம். இதனை “ஆனை துயரம் தீரப்புள்ளூர்ந்து நின்றாழி தொட்டானை’ என்கிறார் திருமங்கையாழ்வார்.

கருட சேவையின் போது காக்க நீ வருவாயே கருடனேறி, என்று பக்தர்கள் பாடுவர்.

ஆசித் எனப்படும் சப்பரத்தின்மேல் சித் எனப்படும் கருடன் வீற்றிருந்து, ஈஸ்வரனாகிய எம்பெருமானைச் சுமந்து வந்து பக்தர்களுக்கு தரிசனமளித்து, சச்சிதானந்தத்தை வழங்குவதே கருட சேவையாகும்.

garuden - 3

கருட சேவையை பெரிய திருவடி சேவை என்றும் கூறுவர். காஞ்சி, திருமலை, திருநாங்கூர், திருவரங்கம், நாச்சியார் கோயில், நவதிருப்பதிகள், திருநாராயணபுரம் போன்ற தலங்களின் கருட சேவைகள் குறிப்பிடத்தக்கனவாகும்.

கருட வியூகம்:

கருடன் பறக்கின்ற நிலையில் படைகளை நிறுத்திப் போரிட்டால் எதிரியின் படைகளைப் பாழ்படுத்தி வெற்றி பெறலாமென்று போர் முறை கூறுகின்றது. இதனை அறிந்த பாண்டவர்கள் ஒருநாள் கருட வியூகம் அமைத்துப் போரிட்டு கெளரவர்களை வென்றனர் என்று மகாபாரதம் கூறுகின்றது.

kal karuden - 4

கருட மந்திரம் :

“குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச
விஷ்ணு வாகன நமஸ்துப்யம் பட்சி ராஜாயதே நம’

என்னும் கருடமந்திரம் விஷத்தைப் போக்கும் மந்திரங்களுள் தலை சிறந்ததாகும்.

கருடாழ்வானின் பகவத் தொண்டு:

ஸ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு பகவத் தொண்டு செய்யும் நித்திய சூரிகளான மூவரில் அனந்தன், விஷ்வக்சேனர்களுடன் கருடாழ்வானும் ஒருவன். ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிரிடாசலம் என்ற விமானத்தை திருமலைக்குக் கொண்டுவந்து அதில் திருவேங்கடவனை எழுந்தருளச் செய்தான். அதுவே கருடாத்ரி என்பதாகும்.

எம்பெருமான் திருக்கோயில்களில் கருவறைக்கு எதிரே கைகூப்பி எம்பெருமானைச் சேவித்த வண்ணம் இருக்கும் கருடபகவானை முதலில் சேவித்து, துவாரபாலகர்களை வணங்கி அனுமதி பெற்று பின்னரே பெருமாளைச் சேவிக்க வேண்டும என்பது நெறிமுறையாகும்.

கருடனும் அஹோபிலமும்:
கருடன், அஹோபிலத்தில் கடுந்தவம் புரிந்து பிரகலாதனுக்கு காட்சியளித்ததைப் போல் தனக்கும் காட்சியளிக்க வேண்டுமென்று ஸ்ரீ நரசிம்மரை வேண்டினான். நரசிம்மரும், கருடன் வேண்டுக்கோளுக்கிணங்கி ஜ்வாலா நரசிம்மராகக் காட்சி கொடுத்தருளினார்.

karuden - 5

கருட புராணம்:
ஸ்ரீமந் நாராயணன் கருடபகவானுக்கு உபதேசம் செய்ததால் இது கருடபுராணம் என்று வழங்கப்படுகிறது. உலக மக்கள் முதலான அனைத்து உயிர்களும் தாங்கள் செய்யும் தீவினைக்களுக்குரிய பலனை உயிர் பிரிந்தபின் அனுபவிப்பர்.

எந்த பாவங்களுக்கு என்னென்ன தண்டனை என்பதை கருட புராணம் கூறுகிறது. இந்நூலினைப் படித்தால் தவறு செய்ய அஞ்சி நல்வழிப்படுவர்.

ராகு கேதுவால் தோஷமா? பெரிய திருவடியைத் துதியுங்கள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply