ஆண்டாளின் திவ்ய சரிதம்

ஆண்டாள்

பெரியாழ்வார் வடபெருங்கோயிலுடையானுக்கு பூமாலை கட்டி அழகு பார்க்கும் நந்தவனக் கைங்கர்யத்தையே வேள்வியாகச் செய்துவந்தார் அல்லவா? அப்படி அழகாகப் பூத்துக் குலுங்கும் பூக்களை அரங்கனுக்குப் படைப்பதற்காக மாலை கட்டிச் செல்வார். அவ்வமயம், இவருடைய மூக்கினால் அந்தப் பூக்களின் வாசனையை அறியாமல் நுகர்ந்துவிடும் வாய்ப்பும் இருந்தது. அப்படி, தான் நுகர்ந்து பார்த்த பூவின் வாசனையையா அந்த அரங்கனும் நுகர்வது என்ற எண்ணம் அவர் மனத்தில் தோன்றியது. தன் எச்சில் அந்தப் பூக்களில் படாதவண்ணம் இருக்க முகத்திலே மூக்கை மறைத்தாற்போல் துணியைக் கட்டிக் கொண்டு அந்தப் பூக்களைப் பறித்து மாலை கட்டுவாராம். அவ்வளவு தூரம் அரங்கனுக்குப் படைக்கும் பூவில் தூய்மையைக் கடைப்பிடித்த பெரியாழ்வாருக்கு ஒரு சோதனை ஏற்பட்டது.

 

இங்கே பெரியாழ்வார் கட்டி வைத்த மாலைகளையே கண்கொட்டாமல் பார்த்துவந்த கோதைக்கு, அதன் அழகும் கம்பீரமும் பெரிதும் கவர்ந்தன. அதைக்காட்டிலும், இந்தப் பூவைச் சூடிக்கொள்ளும் அரங்கன் என்ன அழகாகத் தோற்றமளிப்பான் என்கிற எண்ணமும் அவள் மனத்தே உதித்தது. புத்தம் புதிதாகப் பூத்த பூக்களின் புதுமை வாடிவிடுவதற்குள்ளே அதே மணத்தோடு அதை அழகு பார்க்க விரும்பினாள். தன்னையே அந்த அரங்கனாக உருவகப்படுத்திக் கொண்டாள்.

அவளுள் இப்போது அரங்கன். தூய்மை போற்றிய பெரியாழ்வாரின் அந்தப் பூக்குடலையிலிருந்து பூமாலையைக் கையில் எடுத்தாள். தன் கழுத்தில் சூடி இப்போது அதன் அழகை ரசித்தாள். கண்ணாடி எதிரே இருந்தது. அதன் அருகில் சென்றாள். அந்தக் கண்ணாடி முன்னே மாலை சூடிய வண்ணமாய் அவள் நின்றிருந்தாள். ஆனால் அந்தக் கண்ணாடியிலோ அரங்கன் மாலை சூடி அவளுடன் கள்ளச் சிரிப்பு பூத்தவனாய்த் தோற்றமளித்தான். பின்னர் அந்த மாலையை அப்படியே கழற்றி, பெரியாழ்வார் கோயிலுக்கு எடுத்துச் செல்லும் அந்தப் பூக்குடலையினுள் வைத்துவிடுவாள்.

நாள்தோறும் இந்த நாடகம் நடந்து வந்தது. கோதை சூடிக் களைந்த மாலைகளை அரங்கனும் மிகுந்த உவப்போடு சூடி வந்தான். பெரியாழ்வாரும் வழக்கம்போலவே தன் பணியைச் செய்து கொண்டிருந்தார்….

ஒரு நாள்…. பெரியாழ்வார் பூக்குடலை ஏந்தி அரங்கன் சன்னிதிக்குச் சென்றார். பூக்குடலையிலிருந்து மாலையை வெளியே எடுத்தார். மாலையைப் பார்த்த அக்கணம் அவருக்கு மனத்தில் தூக்கிவாரிப் போட்டது. காரணம் அந்த மாலையில் நீளமான தலைமுடி ஒன்று அவர் கண்ணை உறுத்திக் கொண்டிருந்தது. அவ்வளவுதான் துக்கம் மேலிட இல்லத்துக்கு ஓடினார். இவ்வளவு தூய்மையாக இருந்தும் எப்படி இத் தலைமுடி அரங்கன் சூடும் மாலையில் வந்தது?

மறுநாள் அவருக்கு விடை கிடைத்துவிட்டது. அவரின் பெண்பிள்ளை கோதை, அரங்கனுக்கு வைத்த மாலையைத் தான் சூடி, பின் அரங்கன் சூடுவதற்காக பூக்குடலையில் வைத்ததை பின்னிருந்து கண்டுகொண்டார். அடுத்த கணம், எல்லையில்லாக் கோபம் அவருக்கு மூண்டது. தன் செல்ல மகள் கோதையை கோப வார்த்தைகளால் கடிந்து கொண்டார். அவ்வளவுதான்! அன்று அரங்கனின் அலங்காரத்துக்காக அவனுக்கு அணிவிக்கவேண்டிய மாலைகள் அலங்கோலமாகத் தரையில் கிடந்தன.

பொழுது அப்படியே சென்றது. இரவும் வந்தது. துயரத்தின் உச்சத்தில் உறங்கிப் போனார் பெரியாழ்வார். கனவிலே காட்சி தந்தான் அரங்கன். தமக்கு மாலை வராத காரணத்தைக் கேட்டான். ஆழ்வாரும், தன் செல்ல மகளின் சிறுமைச் செய்கையைச் சொல்லி ஆறாத்துயர் கொண்டார். அரங்கன் அவரைத் தேற்றினான். நீர் அளிக்கும் மாலைகளைக் காட்டிலும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளே தமக்கு மிகவும் உகப்பானது என்பதைச் சொல்லி, கோதை நாச்சியாரின் பிறப்பினைப் புரியவைத்தார்.

கனவு நீங்கி, காலை கண்விழித்த ஆழ்வாருக்கு உண்மை புரிந்தது. செல்லப் பெண்ணைக் கோபித்ததற்காக வருத்தப்பட்ட ஆழ்வார், மறுநாள் பூத்தொடுத்து அந்த மாலைகளை கேட்காமலேயே அவள் கையில் கொடுத்து அணியச் சொன்னார். பின்னர் அதை வாங்கிக்கொண்டு அரங்கனின் சந்நிதி நோக்கி விரைந்தார். தந்தையின் செயலால் விழி அகல விரித்து விசித்திரப் பார்வையோடு நின்றிந்தாள் கோதை.

விஷ்ணுசித்தர் தமக்கு மகளாக வாய்த்துள்ள கோதை, மலர்மங்கையின் அவதாரம் எனக் கண்டார். அவளுக்கு, ஆண்டாள் என்றும், மாதவனுக்குரிய மலர் மாலையைத் தாம் சூடிப் பார்த்து, பின்பு அரங்கனுக்குக் கொடுத்தது காரணமாக, சூடிக்கொடுத்த நாச்சியார் என்றும் பெயரிட்டு அழைத்துவந்தார்.

நாட்கள் சென்றன. இறை அறிவும் பக்தியும் உடன் வளர்த்து வந்த ஆண்டாள், தமக்கு ஏற்ற காதலனாகக் கருதிய கடல்வண்ணன் மேல் விருப்பம் மிகக் கொண்டவளானாள். அவன் மீதான காதல் அதிகரித்தது. இனி அவனை ஒரு நொடிப் பொழுதும் பிரிந்திருக்க முடியாது என்னும் கருத்துடன், கண்ணனுடைய பிரிவை ஆற்றாத ஆயர் மங்கையர் போலத் தாமும் நோன்பு நோற்று உயிர் தரிக்க மாட்டாதிருந்தாள். இத்தகைய தன் எண்ணத்தை திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற திவ்வியப் பிரபந்தங்களின் மூலமாக அந்தக் கண்ணனிடத்தே விண்ணப்பம் செய்து வந்தாள்.

 

Leave a Reply