ஆண்டாளின் திவ்ய சரிதம்

ஆண்டாள்

மணப் பருவத்தே வந்து நின்ற இந்தப் பெண்ணைப் பார்த்து, தந்தையாரான பெரியாழ்வார் அவளுடைய மண வினை பற்றி பேசத் தொடங்கினார். ஆண்டாளோ, மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று உறுதியாக உரைத்தாள்.அவ்வளவில் பட்டர்பிரான், பின் என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்க, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளும், யான் பெருமாளுக்கே உரியவளாக இருக்கின்றேன் என்றுரைத்தாள்.

 

பின்னர் கோதை, தம் தந்தையாகிய பட்டர்பிரானிடம், நூற்றெட்டுத் திருப்பதிகளிலும் எழுந்தருளி சேவை சாதிக்கும் இறைவனின் பெருமைகளை விளங்க எடுத்துக் கூறியருள வேண்டும் என்று வேண்டினாள். அவரும் அவ்வாறே விரித்துக் கூறி வந்தார். அப்படிக் கேட்டு வருகையில், வடமதுரையில் எழுந்தருளும் கண்ணபிரானது வரலாற்றைக் கேட்ட அவ்வளவிலே மயிர் சிலிர்ப்பும், திருவேங்கடமுடையானது பெருமையை செவிமடுத்தபோது முகமலர்ச்சியும், திருமாலிருஞ்சோலை மலையழகரின் வடிவழகை அறிந்த மாத்திரத்தில் மனமகிழ்ச்சியும் பெற்றாள்.

அடுத்து திருவரங்கன் பெருமை செவியில் பட்ட அம்மாத்திரமே அளவற்ற இன்பம் மனத்தே அலைமோத நின்றாள். அவர்களுள் அரங்கநாதனிடம் மனத்தைச் செலுத்தி, அவனுக்கே தம்மை மணமகளாக நிச்சயித்து, அவனையே எண்ணியிருந்தாள் கோதை.

கோதை நாச்சியார் தம் ஆற்றாமையைத் தணித்துக் கொள்ள எண்ணி வில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், அப்பதியிலிருந்த பெண்களையும் தம்மையும் ஆயர்குல மங்கையராகவும், வடபெருங்கோயிலை நந்தகோபன் மனையாகவும், அப்பெருமானைக் கண்ணனாகவும் கருதி, திருப்பாவையைப் பாடியருளினாள். அதன் தொடர்ச்சியாக பின் பதினான்கு திருமொழிகளைப் பாடினார். இதற்கு நாச்சியார் திருமொழி என்று பெயர் ஏற்பட்டது.

கோதை நாச்சியாரின் நிலை கண்டு வருந்திய ஆழ்வாரும், நம்பெருமாள் இவளைக் கடிமணம் புரிதல் கைகூடுமோ? என்று எண்ணியவாறு இருந்தார். ஒரு நாள், திருவரங்கன் ஆழ்வாரது கனவில் எழுந்தருளி, நும் திருமகளைக் கோயிலுக்கு அழைத்து வாரும். அவளை யாம் ஏற்போம் என்று திருவாய் மலர்ந்தருளினான். அதே நேரம், கோயில் பணியாளர்கள் கனவிலும் தோன்றி, நீவிர் குடை, கவரி, வாத்தியங்கள் முதலியன பல சிறப்புகளுடன் சென்று, பட்டர்பிரானுடன் கோதையை நம் பக்கலில் அழைத்து வருவீராக என்று பணித்தான். மேலும் பாண்டிய நாட்டு மன்னனாகிய வல்லபதேவன் கனவிலும் தோன்றி, நீ அடியார் குழாத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று, பட்டர்பிரான் மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் திருவரங்கத்துக்கு அழைத்து வருவாயாக என்றருளினான்.

மன்னன் வல்லபதேவனும் ஏவலாளரைக் கொண்டு, விடியற்காலைக்குள் ஸ்ரீவில்லிபுத்துரையும் திருவரங்கத்தையும் இணைக்கும் வழியெங்கும் தண்ணீர் தெளித்தும், பூம்பந்தலிட்டும், தோரணம் கட்டியும், வாழை, கமுகு நாட்டியும் நன்கு அலங்கரித்து வைத்தான். பின், நால்வகை சேனைகளோடும் ஆழ்வார் பக்கலில் வந்து சேர்ந்தான். அரங்கன் தன் கனவில் கூறியவற்றை ஆழ்வாருக்கு உணர்த்தினான். கோயில் பரிவார மாந்தரும் பட்டநாதரை வணங்கி, இரவு தம் கனவில் திருவரங்கப் பிரான் காட்சி அளித்துச் சொன்ன செய்திகளை அறிவித்தனர்.

பட்டர்பிரான் இறைவனது அன்பை வியந்து போற்றினார். பின்னர் மறையவர் பலர் புண்ணிய நதிகளிலிருந்தும் நீர் கொண்டு வந்தார்கள். கோதையின் தோழிகள் அந்நீரினால் கோதையை நீராட்டி, பொன்னாடை உடுத்தி, பலவாறு ஒப்பனை செய்தனர். தோழியர் புடைசூழ கோதை தமக்கென அமைந்த பல்லக்கில் ஏறினார். எல்லோரும் பின்தொடர்ந்தார்கள்.

இப்படி எல்லோரும் திருவரங்கம் நோக்கிச் சென்ற காலத்தே, பலரும், ஆண்டாள் வந்தாள்! சூடிக்கொடுத்த சுடர்க்கொடி வந்தாள்! கோதை வந்தாள்! திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்! பட்டர்பிரான் புதல்வி வந்தாள்! வேயர் குல விளக்கு வந்தாள்! என்று அந்தப் பல்லக்கின் முன்னே கட்டியம் கூறிச் சென்றனர். அரசன், பெரியாழ்வார் முதலானோருடன் கோதையின் குழாம் திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தது.

பெரிய பெருமாளின் முன் மண்டபத்தை அடைந்தாள் ஆண்டாள். இதுகாறும் காணுதற்காகத் தவமாய்த் தவமிருந்த அந்தப் பெருமாளைக் கண் குளிரக் கண்டாள். அகிலத்தையே வசீகரிக்கும் அந்த அரங்கனின் அழகு, ஆண்டாளைக் கவர்ந்ததில் வியப்பொன்றும் இல்லையே! சூடிக்கொடுத்த நாச்சியாரின் சிலம்பு ஆர்த்தது. சீரார் வளையொலித்தது. கயல்போல் மிளிரும் கடைக்கண் பிறழ, அன்ன மென்னடை நடந்து அரங்கன் அருகில் சென்றாள். அமரரும் காணுதற்கு அரிய அரங்கனின் அருங்கண்ணைக் கண்ட அந்நொடியில், அவள் இன்பக் கடலில் ஆழ்ந்தாள். உலகளந்த உத்தமன், சீதைக்காக நடையாய் நடந்து காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்த அந்த ராமன், அரங்கனாய்ப் படுத்திருக்கும் அந்நிலையில், அவளுக்கு ஓர் எண்ணம் உதித்தது. சீதாபிராட்டியாகத் தான் கொடுஞ்சிறையில் தவித்தபோது, இந்த ராமன்தானே தனக்காக கல்லும் முள்ளும் பாதங்களில் தைக்க, கால் நோக நடந்து வந்து நம்மை மீட்டான். அவன் இப்போது சயனித்திருக்கிறான். அவன் கால் நோவு போக்க நாம் அவன் திருவடியை வருடி, கைமாறு செய்வோமே எனக் கருதினாள். அவனைச் சுற்றியிருந்த நாகபரியங்கத்தை மிதித்தேறினாள். நம்பெருமான் திருமேனியில் ஒன்றிப் போன அப்போதே அவள் அவன்கண் மறைந்து போனாள். அவனைவிட்டு என்றும் பிரியாதிருக்கும் வரம் கேட்டவளாயிற்றே! அரங்கன் அதை நிறைவேற்றி வைத்தான்.

காணுதற்கரிய இக்காட்சி கண்டு பிரமித்துப் போய் இருந்தார்கள் ஆழ்வாரும் மற்றவர்களும். அரங்கன் ஆட்கொண்ட அந்த ஆண்டாள் அரங்கனையே ஆண்ட அதிசயத்தைக் கண்டு எல்லோரும் பக்திப் பரவசத்தில் திளைத்திருந்தனர். அவர்களின் வியப்பை மேலும் அதிகரிக்கும் வண்ணம் திருவரங்கன் அர்ச்சக முகமாக ஆழ்வாரை அருகில் அழைத்தான். கடல் மன்னனைப் போல் நீரும் நமக்கு மாமனாராகிவிட்டீர் என்று முகமன் கூறி, தீர்த்தம், திருப்பரிவட்டம், மாலை, திருச்சடகோபம் முதலியன வழங்கச் செய்தான்.

எல்லாம் பெற்றுக்கொண்டு, சொன்னவண்ணம் தன் மகளை ஏற்றுக்கொண்ட மகிழ்வில் பெரியாழ்வாரும் வில்லிபுத்தூர் திரும்பினார். முன் போல இறைவனுக்கு நந்தவனக் கைங்கர்யம் கைக்கொண்டு, எண்பத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்து, இறைமையின் இருப்பிடம் அடைந்தார்.

(உய்யக்கொண்டார் அருளிச் செய்தவை)

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்

பன்னு திருப்பாவைப் பல்பதியம் — இன்னிசையால்

பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை

சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.

சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே! தொல்பாவை

பாடி அருளவல்ல பல்வளையாய்! — நாடிநீ

வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்

நாம்கடவா வண்ணமே நல்கு.

– இந்த வெண்பாக்களை திருப்பாவை சொல்வதற்கு முன்னே வைணவர்கள் சொல்வது வழக்கம். இவை ஆண்டாளின் ஏற்றத்தைச் சொல்லும் வெண்பாக்கள்.

Leave a Reply