ஆண்டாளின் திவ்ய சரிதம்

ஆண்டாள்

திருப்பாவை

இனி ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்களில் ஆண்டாள் சொல்ல விழைவதை நாம் கொஞ்சம் அறிய விழைவோம்.

ஆண்டாள், திருப்பாவையின் முதல் பாசுரமான மார்கழித் திங்கள் என்னும் பாசுரத்திலே யசோதை இளம்சிங்கமான கண்ணபிரானே நமக்கு உபாயம் என்பதாலே, இந்த நோன்பைக் காரணமாக வைத்து கிருஷ்ணானுபவம் பெற வாருங்கள் என திருவாய்ப்பாடிப் பெண்களை அழைக்கிறாள்.

வையத்து வாழ்வீர்காள், பாசுரத்திலே ஆண்டாள் சொல்வது… பாற்கடலில் பையத்துயின்ற பரமனின் திருவடிகளைப் பாடுவதும், சாதுக்களுக்கு அவர்கள் வேண்டும் அளவு பொருட்களையும், பிட்சையையும் கொடுப்பதும் நோன்பு நோற்பவர்கள் செய்யக்கூடிய செயல்கள்… நெய், பால் போன்றவற்றை அமுது செய்தல், கண்களில் மையிட்டுக் கொள்ளல், பூக்கள் சூடிக் கொள்ளல், பெரியோர்கள் செய்யக் கூடாதென விலக்கியவற்றை செய்தல், தவறான சொற்களை சொல்லுதல் போன்றவை நோன்பு நோற்பவர்கள் செய்யக் கூடாத காரியங்கள் என்பது ஆண்டாள் அருளிச் செய்வது.

ஓங்கி உலகளந்த பாசுரத்தில், தங்கள் நோன்பினாலே இவ்வுலகத்துக்குக் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை அடுக்குகிறாள் ஆண்டாள். நாட்டுக்கு ஒரு குறையும் இல்லாமல் மாதம் மும்மாரி மழை பெய்யும், அதனால் உயர்ந்து பருத்த செந்நெற்பயிர்களின் அளவுக்கு கயல்மீன்கள் துள்ளும், அழகிய வண்டுகள் குவளை மலர்களில் கண் உறங்கும், பசுக்கள் குடங்கள் நிறைய பால் சொறியும்… இப்படிப்பட்ட அளவில்லாத செல்வங்கள் நிறையும் என்கிறாள்.

ஆழிமழைக் கண்ணா பாசுரத்தில், மழைக்குத் தலைவனான வருண தேவனை அழைத்து, கடலில் புகுந்து கடல் நீரை முகந்து மேகமாகி, ஊழி முதல்வன் உருவம் போலே கறுத்து, ராமபிரானின் சார்ங்கமெனும் வில்லில் இருந்து புறப்படும் பாணங்களைப் போலே, உலகத்தார் அனைவரும் வாழும்படியாகவும் நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராடும்படியாகவும் மழையைப் பொழியச் செய்வாயாக என்று வேண்டுகிறார்கள் கோபியர்கள்.

அப்போது அப்பெண்களிலே ஒருத்தி, நாம் இப்படி நோன்பு நோற்க ஆரம்பித்திருக்கிறோம். நம் செய்த பாவங்களால் இந்த நோன்பு இடையூறு ஏதுமில்லாமல் நிறைவேற வேண்டுமே என்று கவலையோடு கேட்கிறாள். அதற்கு வடமதுரை மைந்தனை யமுனைத் துறைவனை தூய்மையுடன் நல்ல மலர்கள் தூவி வணங்கி, வாயாரப் பாடி, மனத்தாலே தியானித்தால், எல்லாப் பாவங்களும் தீயிலிட்ட தூசிபோல் அழிந்து போகும் என்று பதில் சொல்கிறாள் ஆண்டாள் இந்த ஐந்தாவது பாசுரமான, மாயனை மன்னு பாசுரத்திலே!

இப்படி, முதல் ஐந்து பாசுரங்களாலே கிருஷ்ணானுபவம் கிடைப்பதற்கு வேண்டியதைச் சொன்னவர்கள், அடுத்த பத்து பாசுரங்களில் அத்தகைய அனுபவத்தைப் பெறுவதற்காக தோழிகளை எழுப்புகிறார்கள்.

புள்ளும் சிலம்பினகான் பாசுரத்தில், பகவத் விஷயத்தின் சுவை அறிந்திருந்தும் அதை மறந்து உறங்கிக் கிடக்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

கீழ்வானம் வெள்ளென்று பாசுரத்தில், கண்ணனால் விரும்பப்பட்டவளான ஒருத்தியையும் மா வாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால், ஆவாவென்று ஆராய்ந்து பார்த்து எழுந்து வா, கோதுகலம் உடைய பாவையே, நீ பாடிப் பறை கொண்டு எழுந்து ஓடிவா, என்று எழுப்புகிறார்கள்.

தூமணிமாடத்து பாசுரத்திலே, உடமையைக் கொண்டு போவது உடையவனுக்கே உள்ள கடமையல்லவா, என்று தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும் பாவையே உடனே எழுந்து வா என்று கண்மூடிக் கிடக்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே! தேற்றமாய் வந்து தாழிட்ட கதவைத் திறந்து எழுந்துவா என்று கண்ணனுடைய அண்டை வீட்டில் இருப்பவளும், எல்லோரும் கண்ணபிரானைக் கன்டு மயங்கி நிற்க, அக்கண்ணனே மயங்கும்படியான மகிமை உடையவளுமான ஒருத்தியை அருங்கலமே என்று அழைத்து எழுப்புகிறார்கள், நோற்றுச் சுவர்க்கம் பாசுரத்தில்!

கற்றுக் கறவை பாசுரத்திலே, கண்ணனைப் போல நற்குடிப் பிறப்புடையவளாய் ஊராரால் கொண்டாடப்படுபவளாக இருப்பவளுமான ஒருத்தியை கோவலர்தம் பொற்கொடியே என்று அழைத்து எழுப்புகிறார்கள்.

ராமபிரானை விட்டு கண நேரமும் பிரியாது கைங்கர்யம் செய்யும் லட்சுமணனைப்போல் கண்ணனின் கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருப்பவனான நற்செல்வனின் தங்கையை எழுப்புகிறார்கள் – கனைத்திளங் கற்றெருமை பாசுரத்தில்…

புள்ளின் வாய் கீண்டானை பாசுரத்தில், நாமே மிகச் சிறந்த கண்ணழகியாக இருக்கும்போது, அந்தக் கண்ணன்தான் நம்மைத் தேடி வரவேண்டுமேயொழிய, நாம் அவன் இடம் தேடிச் செல்ல வேண்டியதில்லை என்று செருக்கோடு கண்மூடிப் படுத்திருக்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

இப்படி இவர்கள் செயல்களுக்கெல்லாம் முன் நிற்பவளாகச் சொல்லி, எல்லோரையும் தானே முதல் ஆளாகச் சென்று எழுப்பி அழைத்து வருவதாகச் சொல்லி வைத்து, ஆனால் அதை மறந்து உறங்குபவளை நாணாதாய்! நாவுடையாய்! என்று கூறி எழுப்புகிறார்கள் உங்கள் புழக்கடை பாசுரத்தில்.

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ பாசுரத்தில், எல்லாப் பெண்களையும் கூட்டத்தோடு காண ஆசைப்பட்டு படுத்திருக்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

இவ்வாறாக எல்லாப் பெண்களையும் எழுப்பி விடுகிறார்கள். பின்னர் எல்லாப் பெண்களுமாகக் கூடி, ஸ்ரீநந்தகோபருடைய திருமாளிகை வாசலுக்குச் சென்று நிற்கிறார்கள். வாசல் கதவு அடைத்திருப்பது கண்டு, கோயில் காப்பானையும், திருவாசல் காக்கும் முதலிகளையும், நேய நிலைக்கதவம் நீக்குமாறு வேண்டுகிறார்கள், நாயகனாய் நின்ற பாசுரத்தில்!

இவர்கள் வேண்டுதலுக்கு செவிசாய்த்த அவர்களும் கதவைத் திறந்து இவர்களை உள்ளே அனுமதிக்கிறார்கள். இவர்கள் உள்ளே போய் நந்தகோபரையும், யசோதைப் பிராட்டியையும், கண்ணபிரானையும், பலராமனையும் துயில் எழுப்புகிறார்கள் அம்பரமே தண்ணீரே பாசுரத்தில்.

நந்தகோபர் முதலானவர்களை எழுப்பியும், பலராமனையும் கண்ணனையும் எழுப்பியும் அவன் எழுந்திருக்காதது கண்டு புருஷகாரபூதையான நப்பின்னைப் பிராட்டியை முன்னிடாமையாலே பேசாமலே இருக்கிறான் என்று அறிந்து, நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் என்று நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகிறார்கள் உந்து மதகளிற்றன் பாசுரத்தில்.

செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய், திறந்தால் மகிழ்வோம் என்று இவர்கள் வேண்டியவுடன், நம்பின்னைப் பிராட்டி கதவு திறக்க எண்ணி துயில் கலைந்து எழுந்தாள். நாமல்லவா நம் பிரியமானவர்களுக்கு கதவு திறந்து விட வேண்டும் என்று நினைத்த கண்ணன், அவள் கதவைத் திறக்க முடியாதபடி அணைத்துக் கொண்டான். இதை அறிந்த பெண்கள், குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் உறங்கும் மலர்மார்பா, வாய்திறவாய், மைத் தடங்கண்ணினாய் உன் மணாளனை துயில் எழ ஒட்டாயோ? என்று நப்பின்னையையும் கேட்டவாறே கண்ணனைத் துயில் எழுப்புகிறார்கள் – குத்து விளக்கெரிய பாசுரத்தில்!

கணநேரமும் கண்ணனை எழ சம்மதியாமலும், ஒரு சிறிதும் அவனைப் பிரிந்திருப்பதைப் பொறுக்கமாட்டாமலும் இருப்பது உன் இயற்கையான குணத்துக்குத் தகுந்ததன்று என்று நப்பின்னைப் பிராட்டியை இவர்கள் கோபிக்கிறார்கள். அவளும், தக்க நேரம் பார்த்து விண்ணப்பிக்கலாம் என்று சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். நாம் கோபித்துக்கொண்டதால்தான் பிராட்டி பேசாமல் இருக்கிறாள் என்று நினைத்து, கண்ணனை எழுப்ப, அவன் வாய் திறவாமையாலே, பிராட்டியை நாம் பேசின பேச்சைக் கேட்டு கண்ணன் திருவுள்ளம் கலங்கினானோ என்று எண்ணி அவளுடைய பெருமைகளைப் பேசி, அவளிடம் தங்கள் விருப்பத்தை மீண்டும் விண்ணப்பிக்கிறார்கள், முப்பத்து மூவர் பாசுரத்தில்.

இவர்களால் இங்ஙனம் எழுப்பப்பட்ட நப்பின்னைப் பிராட்டி, என்னைச் சரணடைந்த பின் உங்களுக்கு ஒரு குறைவும் உண்டாகக் கூடுமோ? ஆகையால் நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன். நாம் எல்லோருமே கூடிக் கண்ணனை எழுப்புவோம் என்று கூறி அவர்கள் அனைவருமே கூடி கண்ணனை எழுப்புகிறார்கள் ஏற்ற கலங்கள் பாசுரத்தில்.

உலகில் மிகப் பெரும் தேசங்களை ஆட்சிசெய்யும் அரசர்களும்கூட, தங்களுடைய அகங்காரம் கரைந்து, உன் பள்ளிக் கட்டிலின் கீழே திரளாகக் கூடியிருக்கிறார்கள். அதைப் போலே, நாங்களும் அகதிகளாக வந்துள்ளோம், உன் தாமரைக் கண்கள் எங்கள் மீது பதியும் வண்ணம், சிறிது எங்கள் மேலும் விழிக்க மாட்டாயா? என வேண்டுகிறார்கள் அங்கண்மா ஞாலத்து அரசர் பாசுரத்தில்!

இப்படி இவர்கள் நெஞ்சுருக நெக்குருக விண்ணப்பித்துக் கொண்டவுடன், அதைக் கேட்ட கண்ணன், பிராட்டியை அண்டினவர்களான இவர்களை இவ்வளவு பாடு படுத்திவிட்டோ மே! என்று தன்னைத் தானே நொந்து கொண்டான். பின்னர் இவர்களுக்கு நல்ல வார்த்தைகள் சொன்னான். இவர்களும் கண்ணனின் நடையழகைக் காண எண்ணி, சீரிய சிங்கமெனப் புறப்பட்டு, மேன்மை மிகுந்த சிங்காசனத்தில் இருந்து எம் குறையை விசாரித்து அருள வேண்டும் என்கிறார்கள், மாரிமலை முழைஞ்சில் பாசுரத்தில்.

கண்ணனும் அவர்களின் வேண்டுகோளை ஏற்றான். சீரிய சிங்காசனம் நோக்கி நடக்க ஆரம்பித்தான். அந்த நடையழகிலே இவர்கள் தம்மை மறந்தார்கள். உலகமளந்த அவன் திருவடிகளுக்கும், இலங்கையை அழித்த அவன் பலத்துக்கும், சகடாசுரன் அழியும்படி உதைத்த அவன் புகழுக்கும், கோவர்த்தனக் குன்றை குடையாக எடுத்த அவனுடைய குணத்துக்கும், அவனுடைய பகை கெடுக்கும் வேலுக்கும் அவர்கள் மங்களாசாசனம் செய்தார்கள். பின், நாங்கள் உன்னிடம் பறை கொள்வதற்காக வந்தோம்; எங்கள் மீது இரக்கம் காட்டவேணும் என்று வேண்டுகிறார்கள் அன்றிவ்வுலகம் பாசுரத்தில்.

மங்களாசாசனம் செய்யும் நீங்கள், பறைகொள்ளுதற்காக வந்ததாகச் சொல்கிறீர்களே; இரண்டும் பொருத்தமானதாக இல்லையே! என்று கண்ணன் கேட்கிறான். பறை என்பது ஒரு காரணமே! உண்மையில் உன்னிடம் உன்னையே யாசித்து வந்தவர்கள் நாங்கள் என்று இவர்கள் உரைக்கிறார்கள்… ஒருத்தி மகனாய்ப் பிறந்து பாசுரத்தில்.

சரி! என்னை வேண்டும் நீங்கள், ஏன் பறையை வேண்ட வேண்டும்? என்று கண்ணன் கேட்கிறான். அதற்கு இவர்கள், உன்னைக் காண்பதற்கு வாய்ப்பாக ஒரு நோன்பை நோற்கச் சொன்னார்கள். அந்த நோன்புக்கு மார்கழி நீராட்டம் என்கிற அனுஷ்டானத்தை முன்னோர்கள் செய்திருக்கிறார்கள். அந்நீராட்டத்தை முடிக்க வேண்டுமாயின், சங்கங்கள், பெரும் பறைகள், பல்லாண்டை இசைப்பவர்கள், கோல விளக்காகிய மங்கல தீபங்கள், கொடிகள், விதானங்கள் ஆகியன தந்தருள வேண்டும் எனப் பிரார்த்திக்கிறார்கள் மாலே மணிவண்ணா பாசுரத்தில்.

மார்கழி நீராட்ட நோன்புக்காக அவர்கள் கேட்ட எல்லாவற்றையும் கண்ணபிரான் கொடுக்கிறான். பின்னர், உங்களுக்கு வேண்டியது இவ்வளவுதானே, போதுமா? என்று வினவினான். அதற்கு இவர்கள், நோன்புக்கு வேண்டுபவை இவையே, அது போதும்…நோன்பு நோற்ற பிறகு உன்னிடம் பரிசாக சிலவற்றைப் பெற விரும்புகிறோம் என்று கூறினார்கள். அது என்ன? என்று அவனும் கேட்க, நீயும் பிராட்டியும் ஆபரணங்களாகிய சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ ஆகியவற்றையும், ஆடைகளையும் அணிந்து கொண்டு வரவேண்டும். அதன் பின் உங்களுடன் ஒன்றாக அமர்ந்து, மூட நெய் பெய்து முழங்கை வழிவார பால் அமுது செய்ய வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தைச் சொல்கிறார்கள், கூடாரை வெல்லும்சீர் பாசுரத்தில்.

கண்ணனும் அவர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கிறான். பின் மனத்தில் இப்படி நினைத்தான்…ஊருக்கு வேண்டிய பறையை நம்மிடமிருந்து பெற்றுவிட்டார்கள். இனி தங்களுக்கான பறையை (அதாவது, தம்மைத்தான்) கேட்கப் போகிறார்கள் என்பதை அறிந்துகொள்கிறான். பிறகு, நீங்கள் விரும்பும் பறையைப் பெற ஏதாவது சாதனங்களை அனுஷ்டானம் செய்ததுண்டா? எந்த சாதனங்களையும் அனுஷ்டிக்காமல் என்னைப் பெற முடியாது என்னும் அர்த்தம் உங்களுக்குத் தெரிந்திருக்குமே என்று இவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள், நாங்கள் எந்த சாதனமும் செய்ய அருகதையற்ற அஞ்ஞானிகளல்லவா? பசுக்களின் பின்னே சென்று காடுகளை அடைந்து உண்டு திரிவோம். அறிவொன்றும் இல்லாத எங்கள் ஆயர் குலத்தில் உன்னைப் பிறக்கப் பெறுவதற்கு ஏற்ற புண்ணியங்கள் செய்தவர்களாக இருக்கிறோம். எம்பிரானே! உன்னோடு எங்களுக்குள்ள உறவு ஒழிக்க ஒழியாது. அன்பினாலே கட்டுண்டோ ம். அந்த அன்பினால் உன்னை ஏதாவது விபரீதமாகச் சொல்லியிருந்தாலும் பொறுத்துக்கொள்… இந்த அன்பால் நாங்கள் விரும்பும் பறையை எங்களுக்கு அளித்தருள வேண்டும் என்கிறார்கள் கறவைகள் பின்சென்று பாசுரத்தில்.

இப்படி இத்தனை பாசுரங்களில் தாங்கள் வேண்டி வந்திருக்கும் பறையை சிற்றஞ் சிறுகாலே பாசுரத்தில் விவரிக்கிறார்கள்… காலம் உள்ளளவும் கடவோம், உனக்கு மாத்திரமே நாங்கள் அடிமை செய்வோம், இதர விஷய விருப்பங்களைத் தவிர்த்தருள வேண்டும் என்கிறார்கள். இவ்வாறு தாங்கள் பறை என்று சொல்லுவது கண்ணனின் திருவடிகளில் செய்யும் கைங்கர்யமே என்று முடிவாக நிர்ணயிக்கிறார்கள். அந்தக் கைங்கர்யமும் அவன் உகப்புக்காகவே செய்யப்படுகிறதேயொழிய தங்களுடைய ஆனந்தத்துக்காக அன்று என்னும் அரும்பொருளை அறிவிக்கிறார்கள், சிற்றஞ்சிறுகாலே பாசுரத்தில்.

கடல் கடைந்த அந்த மாதவனைக் கேசவனை, சந்திரனைப் போன்ற அழகிய சேயிழையாரான இவர்கள் சென்று இறைஞ்சி பறை கேட்டார்கள். நீயே உபாயம் என்றும், உன் உகப்புக்கு எப்பிறப்பிலும் உனக்கு அடிமை செய்வதே எங்களுக்கு நீ தரும் பறையாகும் என்றும் இவர்கள் உரைத்ததைக் கேட்ட கண்ணபிரான், நீங்கள் வேண்டிக் கேட்ட குற்றேவல்களைக் (அந்தரங்கக் கைங்கர்யங்களை) கொள்கிறேன் நான் என்று உகந்து அருளினான். அதற்கு இவர்கள், கண்ணனே, இவ்வாறு நாங்கள் ஆய்ப்பாடியிலே உன்னை வணங்கி பறையைப் பெற்ற வைபவத்தை விளக்கி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்த பட்டர்பிரான் திருமகளான அழகிய ஆண்டாள் அருளிச்செய்த சங்கத்தமிழ் மாலையாகிய திருப்பாவையின் முப்பது பாசுரங்களும் தப்பாமல் ஓதுபவர்கள், செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலாகிய கண்ணபிரானால் எல்லாவிடத்திலும் அவனுடைய திருவருளைப் பெற்று இன்புறுவர்கள் என்று வங்கக் கடல் கடைந்த பாசுரத்தோடு திருப்பாவையை நிறைவு செய்கின்றாள் ஆண்டாள்.

Leave a Reply