ஆண்டாளின் திவ்ய சரிதம்

ஆண்டாள்

நாச்சியார் திருமொழி

திருப்பாவையில் ஆண்டாள், கண்ணனே உபாயம் என்றும், அவன் மனத்துக்குப் பிடித்தமான அடிமை செய்வதே தாம் வேண்டும் பறை என்றும், தன் உறுதியை அறுதியிட்டுக் கூறினாள். ஆயினும் தன்னுடைய விருப்பப்படி அவனைப் பெற முடியவில்லை. ஆகவே அவனைப் பெற்றே தீரவேண்டும் என்ற வைராக்கிய ஆசை ஏற்பட்டவளாய், சித்தம் கலங்கி, பிரிந்தவர்களை ஒன்றுசேர்க்கும் இயல்புடைய காமதேவனை, அனங்கதேவா! வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே, என்று வேண்டுகிறாள், நாச்சியார் திருமொழியின் முதல் பத்து பாசுரங்களான தையொரு திங்களில்.

மனித வடிவாக அவதரித்த கண்ணனே, எங்கள் மாமியான யசோதை தீம்பு செய்யும் உன்னை மகனாகப் பெற்றதால், நாங்கள் உன் குறும்பால் துன்புறுதலும் தப்புமோ? பங்குனி மாதம் ஆதலால், காமன் வரும் காலம் என்று பாதையை அலங்கரித்து வைத்தோம். நீ எங்கள் சிறுவீடு சிதைக்காதே என்று இந்தப் பெண்கள், சிற்றில் சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுகிறார்கள். இதைக் கண்டு மனம் பொறுக்க முடியாத கண்ணபிரான் விரைந்து வந்து அவன் முகம் காட்ட, ஆண்டாள் ஊடல் கொண்டவளாய் முகம் காட்டாது இருந்ததையும், அவன் இவள் கை பற்றி, மெய் தீண்டி அணைத்ததையும், இதைப் பார்ப்பவர்கள் என்னதான் பேசமாட்டார்கள் என்றும் பேசுகிறாள் இரண்டாம் திருமொழியான நாமமாயிரத்தில்.

இரண்டாம் பத்தான நாமமாயிரத்தில் கூறியபடி, அவனுடனான இணைப்பும் பிணைப்பும் தொடர்ந்ததால், இந்தப் பெண்களுக்கு ஆனந்தம் அதிகரித்து, அதன் காரணத்தால் இவளுக்கு உயிர்த் தியாகம் ஏற்படக் கூடுமோ என்று அஞ்சிய உறவினர்கள், கண்ணனையும், இவர்களையும் பிரித்து நிலவறைகளில் அடைத்து வைத்தனர். ஆனால், அந்தப் பிரிவாற்றாமையாலும் இவர்களுக்கு உயிர்போக்கல் நிலை ஏற்படும் சூழல் உண்டாகியது. அந்நிலை கண்ட உறவினர்கள், பெண்கள் நல்ல கணவனைப் பெறுவதற்காகச் செய்யும் பனி நீராடுதல் எனும் நோன்பைச் செய்வதற்காக இவர்களை வெளியில் விட்டனர். இவர்களும் கண்ணனோடு சேர்ந்தும் பிரிந்தும் படும் வருத்தங்களைத் தவிர்ப்பதற்காக அவன் அறியாதபடி ஒரு பொய்கைக்குச் சென்றனர். தங்கள் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு விரகதாபம் தணியும்படி அப்பொய்கையில் நீராடினர். அப்போது அங்கு வந்த கண்ணன் இவர்களின் ஆடைகளை எடுத்துக் கொண்டு கரையில் இருந்த குருந்த மரத்தில் ஏறி அமர்ந்தான். இவர்களும் குளித்துக் கரையேறியவுடன் ஆடை ஆபரணங்களைக் காணாமல் தவித்தனர். பின்னர் ஒருவாறு கண்ணனை மரத்தின் மேல் கண்டு அவனிடம் தங்கள் ஆடை ஆபரணங்களைத் தந்துவிடுமாறு இரந்து கேட்டனர்; வாழ்த்திக் கேட்டனர்; கோபமாய்ச் சீறியும் கேட்டனர். பலவிதமாகக் கெஞ்சிக் கேட்டனர். கடைசியில் மனமிரங்கிய அவனும் அவர்களுக்கு ஆடை ஆபரணங்களைக் கொடுத்து அருளினான் – என்பதை மூன்றாம் திருமொழியான கோழியழைப்பதன் முன்னம் என்ற பத்துப் பாசுரங்களாலே அருள்கிறாள்.

ஆயினும் கண்ணபிரானோடு இருந்த இந்தக் கூட்டு பிரிவிலே முடிந்தது. அந்தப் பிரிவாற்றாமை மனத்தில் பொங்க, மறுபடியும் கண்ணன் கூடவல்லானோ? என்று கூடல் இழைத்தல் பேசுகிறாள். என்னை அடையத் தீர்ந்த முடிவுடன் அவதரித்த கண்ணன், இங்கு வருவானாகில், கூடலே நீ கூடிடு என்று கூடலை உருவகப்படுத்தி அதனோடு பேசுகிறாள் தெள்ளியாரில் என்ற நான்காம் திருமொழியில்.

உயிரற்றதான கூடல் எந்த மறுமொழியும் கூறாதிருந்தது. அதனால் உயிருள்ள ஏதேனும் ஒன்றை கண்ணன் வரக் கூவவேண்டும் என்று எண்ணியபோது ஆண்டாளுக்குக் குயிலின் நினைவு வந்தது. எனவே அவள் குயிலைப் பார்த்து, சோலைப் பொந்துகளில் வாசம் செய்யும் குயிலே, திருமாமகள் கேள்வனை விரும்பியதால், என் கைவளைகள் கழன்றுபோகும்படி உடல் தளர்ந்து மெலிந்து தாபத்தால் உருகுகிறேன். இது தகுமோ? எனவே எம்பெருமான் வரும்படி அவன் திருப்பெயர்கள் பல சொல்லிக் கூவ வேணும் என்று பிரார்த்திக்கிறாள் மன்னு பெரும் புகழ் மாதவன் என்ற ஐந்தாம் திருமொழியில்.

கண்ணன் வரவேணுமாகக் குயிலும் கூவியது. ஆயினும் அவன் வராதிருந்தான். வருத்தம் மிகக் கொண்டாள் கோதை. அதனால் இவளை உயிர் தரித்திருக்கச் செய்ய வேண்டும் என்று எண்ணிய கண்ணன், இவள் விரும்பியவாறே ஒன்றும் குறைவிலாதபடி கனவிலே வந்து பாணிக்கிரகணம் வரை செய்துகொண்டான். கனவிலே ஆண்டாள் கண்ணபிரானை மணந்துகொண்ட அனுபவத்தைத் தோழிக்குச் சொல்லுகிறாள் வாரணமாயிரம் என்ற ஆறாம் திருமொழியில்!

கனவிலே கண்ணனோடு ஏற்பட்ட உறவும் நீட்டிக்கப் பெறவில்லை. கவலையாலே அவள் முகம் துவண்டது. எப்போதும் அவனோடு சேர்ந்திருக்கும்படியான அனுபவத்தைப் பெறவேணுமே! அந்த அனுபவத்தைக் கேட்கவாவது வேணுமே! என்ன செய்வது? கோதைக்கு அவன் திருப்பவள வாய் வைத்து கர்ஜிக்கும்

பாஞ்சஜன்யத்தின் நினைவு வந்தது. எப்போதும் அவன் கைகளிலே ஒட்டி உறவாடும் அந்த சங்கு அடைந்த பெரும் பேற்றை எண்ணியெண்ணி உகக்கிறாள் ஆண்டாள். அவன் பவள உதடுகளில் வாசனையை நுகர்ந்த சங்கே அந்த அனுபவத்தை எங்களுக்கும் கூறேன் என்று, பகவதனுபவம் இருக்கும்படியைப் பலவாறு கேட்கிறாள் கற்பூரம் நாறுமோ என்ற ஏழாம் திருமொழியில்.

அடுத்து, அவள் கண்களுக்குப் பட்டவை மேகங்கள். திருமலை திருப்பதியில் அவன் திருக்கோயில் முகடு தொட்டுத் தழுவி வரும் மேகங்கள் அவன் திருமேனி உரசும் பேறு பெற்றன. அந்த அனுபவத்தைத்தான் விளிக்கின்றாள். தன் நிலையைச் சொல்லி அந்தத் திருவேங்கடமுடையானுக்குத் தூது விட்டாள். எனக்குக் கதியாக உள்ள அவன், தன்னை ஒரு காப்பானாகவே கருதவில்லையோ! இவன் ஒரு பெண்பிள்ளையைத் தவிக்க விட்டு வதைத்தான் என்ற பேச்சு எழுந்தால், உலகோர் மதிக்க மாட்டார்களே! என்று எட்டாம் திருமொழியான விண் நீல மேலாப்பு விரித்தால் போல் பாசுரங்களில் மேகவிடு தூது பேசுகிறாள்.

மேகங்களும் தூது செல்லவில்லை. அவை நின்ற இடத்திலேயே நின்று மழை பொழியச் செய்தன. அதனாலே மழைக் காலத்தில் உண்டாகும் வளப்பம் பூமியில் மிகுந்தது. திருமாலிருஞ்சோலை மலையில் முல்லைகள், காயா முதலிய மலர்கள், கனிகள், வண்டினங்கள், பூஞ்சுனைகள் முதலானவை உண்டாகி இயற்கை பூத்துச் சிரித்தது. ஆனால் கண்ணனைப் பிரிந்த ஆண்டாளோ துயரால் வாடினாள். அதைக்கண்டு பூத்துச் சிரித்திருந்த மலர்கள் எல்லாம் இவளைப் பார்த்து ஏளனம் செய்தன. எம்பெருமானின் வரவுக்காக இவள் கட்டி வைத்திருந்த பொன்மாலைகள் வாடிப்போய் நிற்கின்றன. அதனோடு தானும் வாட்டமுற்று, பயனற்றுக் கிடப்பதாக, ஒன்பதாம் திருமொழியான சிந்துரச் செம்பொடிப்போல் பாசுரங்களில் தெரிவிக்கிறாள்.

இவ்வாறு மன வருத்தம் மிகக் கொண்டவளாய், நமக்கு உயிர்தரிக்க வேறு வழி உண்டோ ? என ஆராய்ந்து கொண்டிருந்தாள். அப்போது அவள் நினைவுக்கு வந்தார் பெரியாழ்வார். பெரியாழ்வார் பெண்பிள்ளையாகத் தான் பிறந்ததை எண்ணிப் பார்த்தாள். ஆழ்வார் அழைத்தவுடனே கூடல் நகரின் அன்று கருடாரூடனாகக் காட்சிதந்த அவன் செயலையும் மனத்தில் கொண்டாள். மற்றவை எல்லாம் தப்பினாலும் பெரியாழ்வாரோடு நமக்குண்டான உறவு தப்பாது. அவனுக்கான சுதந்திரத்தையும் மாற்றி, நம்மை அவன் திருவடிகளில் சேர்த்துவிடும் தன்மை பெரியாழ்வாரின் பக்திக்கு உண்டு. எனவே அவரையே நாம் ஆசார்யராக அடைவோம் என்று உறுதி பூண்ட தன்மையைப் பேசுகிறாள் பத்தாம் திருமொழியான கார்கோடற் பூக்காள் பாசுரங்களில்.

இத்தகைய உறுதியோடு அவள் இருந்தாள். ஆயினும் கண்ணபிரான் முகம் காட்டவில்லை. அதனால் அவள் நோவுப்பட்டாள். இவள் இருக்கும் நிலையைக் கண்டு, தாய்மார், தோழிமார் முதலானவர்கள் இவளைக் காண வந்து திரண்டு நிற்கிறார்கள். அப்போது அவள், எழில் மிகக் கொண்ட மனையில் வாழ்ந்து வரும் அன்பு பூண்டவர்களே! என் அரங்கன் எனக்கு அமுதம் போன்ற இனியவன். அவன் குழல் அழகன், வாய் அழகன், கண்ணழகன், கொப்பூழ் மேல் எழுந்த தாமரை அன்ன அழகன். என்னவனான அவன் என்னுடைய கழல் வளைகளைத் தாமே கழன்றுவிடும் படியாக என்னை ஆக்கிவிட்டான். அவன் நம்மை வைத்த நிலையைப் பார்த்தீர்களா என்று வெறுத்து வார்த்தை சொல்லித் தவிக்கிறாள். பின், நம்மைப் போன்ற சிலருக்கு உதவினவன், பெரியாழ்வார் பெற்றெடுத்த எமக்கும் கட்டாயம் உதவாமல் இருக்க மாட்டான் என்று மனம் தேறியவளாகப் பேசுகிறாள் பதினோராம் திருமொழியான தாமுகக்குக் தம்கையில் சங்கமே போலாவோ பாசுரங்களில்.

இப்படி உறுதி பூண்டிருந்தும் அவன் வரவில்லை. நடக்கவும் இயலாத நிலையை அடைந்து சோர்ந்திருந்தாள் அவள். அருகில் இருப்பாரைப் பார்த்து மானம் கெட்டவளாய், உடல் நிறம் மாற, மனம் தளர்ச்சியடைய, வாய் வெளுத்து, உணவு வெறுத்து, உள் மெலிந்து போனேன். இவை நீங்க வேண்டுமாயின், கண்ணனிடத்தே என்னைக் கொண்டுபோய் விடுங்கள் என்கிறாள் பன்னிரண்டாம் திருமொழியான மற்று இருந்தீர்கட்கு அறியலாகா என்ற பாசுரங்களில்.

இப்படி இவளின் வேண்டுகோளை ஏற்று அவன் இருக்கும் இடத்திலே இவளைக் கொண்டு சேர்க்க அவர்களால் இயலவில்லை. எனவே, அவனோடு தொடர்புள்ள ஏதாவதொன்றை, கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றைக் கொண்டு வந்து என்னைத் தொடச்செய்து, என்னை உயிர் தரிக்கச் செய்யுங்கள் என்று பிரார்த்திக்கிறாள் பதிமூன்றாம் திருமொழியான கண்ணன் என்னும் கருந்தெய்வம் பாசுரங்களில்…

இப்படி மெலிந்து கதறுகிற ஆண்டாளுக்கு பரம பக்தியை விளைவிக்கச் செய்வதற்காகவே, கண்ணன் முகம் காட்டாமல் இருந்தான். அதனால் இவளின் ஆற்றாமை கரை புரண்டு, அவனைப் பெறாமல் உயிர் தரித்திருக்க இயலாத நிலை ஏற்பட்டது. அப்போது அவள் கண்ணனைக் கண்டீரோ என்று கேட்கிறாள். பட்டிமேய்ந்து ஓர் காரேறு என்னும் பதினான்காம் திருமொழியில், ஒவ்வொரு பாசுரத்தின் முதல் இரண்டு அடிகளிலும் கண்டீரே என்று கேட்கிறவர்கள் பேச்சாகவும், பின்பாதியில் கண்டோம் என்று பதில் சொல்கிறவர்கள் பேச்சாகவும், முறையே தமக்குப் பிறந்த பரம பக்தியையும், பெற்ற பேரின்பத்தையும் இருவர் பேச்சாகப் பேசி, கண்ணனை பிருந்தாவனத்திலே தாம் கண்ட விதத்தைக் கூறி, நாச்சியார் திருமொழியாகிய இப்பிரபந்தத்தை நிறைவு செய்கிறாள் கோதை நாச்சியார்.

ஆண்டாள் வாழி திருநாமம்

திருவாடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

ஒருநூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே

உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே

மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே

வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே{jcomments on}

Leave a Reply