ஆண்டாள் அருளிய திருப்பாவை

ஆண்டாள்

(காம்போதி ராகம் – ஆதி தாளம்)


ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப*
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்*
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்*
ஊற்றம் உடையாய் பெரியாய்!* உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்*
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்*
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே*
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய். (21) (494)

(பைரவி ராகம் – ஆதி தாளம்)


அம் கண் மா ஞாலத்து அரசர்* அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே*
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்*
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே*
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ*
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்*
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்*
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய். (22) (495)

 

(அடாணா ராகம் – ஆதி தாளம்)


மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்*
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து*
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி*
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு*
போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா* உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி* கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து* யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். (23) (496)

 

(பியாகடை ராகம் – ஆதி தாளம்)


அன்று இவ் உலகம் அளந்தாய்! அடி போற்றி*
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய்! திறல் போற்றி*
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி*
கன்று குணில் ஆவெறிந்தாய்! கழல் போற்றி*
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி*
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி*
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்*
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய் (24) (497)

(சங்கராபரண ராகம் – ஆதி தாளம்)


ஒருத்தி மகனாய்ப் பிறந்து* ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர*
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த*
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்*
நெருப்பென்ன நின்ற நெடுமாலே!* உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்*
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி*
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் (25) (498)

 

(ஆரபி ராகம் – ஆதி தாளம்)


மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்*
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்*
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன*
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே*
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே*
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே*
கோல விளக்கே கொடியே விதானமே*
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய் (26) (499)

 

(ஆனந்த பைரவி ராகம் – ஆதி தாளம்)


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!* உன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்*
நாடு புகழும் பரிசினால் நன்றாக*
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே*
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்*
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு*
மூட நெய் பெய்து முழங்கை வழி வார*
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். (27) (500)

(தன்யாசி ராகம் – ஆதி தாளம்)


கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்*
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து* உன்தன்னைப்
பிறவிபெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்*
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா!* உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது*
அறியாத பிள்ளைகளோம் அன்பினால்* உன்தன்னை
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே*
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய் (28) (501)

 

(கல்யாணி ராகம் – ஆதி தாளம்)


சிற்றம் சிறு காலே வந்து உன்னைச் சேவித்து* உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து* நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது*
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா*
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்* உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்*
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் (29) (502)

 

(சுருட்டி ராகம் – ரூபக தாளம்)


வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை*
திங்கள் திருமுகத்துச் சேய் இழையார் சென்று இறைஞ்சி*
அங்கப் பறை கொண்ட ஆற்றை* அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன*
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே*
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்*
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்*
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். (30) (503)

(திருப்பாவை முற்றும்)

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் – நீதியால்
நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர் (1)
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் – கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு. (2)

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கற்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே!
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Leave a Reply