11. தாமுகக்கும்

ஆண்டாள்

 

11ஆம் திருமொழி

தாமுகக்கும்

பதினோராவது பதிகம், திருவரங்கநாதனுக்கு என்றே ஆண்டாள் பாடியது.

பெரியாழ்வாரை ஆசார்யராகப் பற்றி கண்ணபிரானை அடையலாம் என்ற உறுதியோடு இருந்தாள் ஆண்டாள். ஆயினும் கண்ணபிரான் முகம் காட்டவில்லை. அதனால் அவள் நோவுப்பட்டாள். இவள் இருக்கும் நிலையைக் கண்டு, தாய்மார், தோழிமார் முதலானவர்கள் இவளைக் காண வந்து திரண்டு நிற்கிறார்கள். அப்போது அவள், ஓஎழில் மிகுந்த மனையில் வாழ்ந்து வரும் அன்பு பூண்டவர்களே! என் அரங்கன் எனக்கு அமுதம் போன்ற இனியவன். அவன் குழல் அழகன், வாய் அழகன், கண்ணழகன், கொப்பூழ் மேல் எழுந்த தாமரை அன்ன அழகன். என்னவனான அவன், என்னுடைய கை வளையல்களைத் தாமே கழன்றுவிழும்படியாக என்னை மெலிவுறும்படி ஆக்கிவிட்டான். அவன் நம்மை வைத்த நிலையைப் பார்த்தீர்களா  என்று வெறுப்புற்றுச் சொல்லித் தவிக்கிறாள். பின், நம்மைப் போன்ற எத்தனையோ அன்பர்களுக்கு உதவினவன், பெரியாழ்வார் பெற்றெடுத்த எமக்கும் கட்டாயம் உதவாமல் இருக்க மாட்டான் என்று மனம் தேறுகிறாள். அதை இந்தப் பதினோராம் திருமொழியான தாமுகக்குக் தம் கையில் சங்கமே போலாவோ பாசுரங்களில் பேசுகிறாள்.

607:

 

தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ,

யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்,

தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்,

ஆமுகத்தை நோக்காரால் அம்மனே. அம்மனே. (2) 1

 

ஆபரணங்கள் அணிந்துள்ள மாதர்களே… விருப்பத்துடன் நான் போட்டிருக்கும் கைவளைகள், திருமால் தரித்துக் கொண்டுள்ள தம் கைச்சங்குக்கு ஒவ்வாதோ? தீ உமிழும் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள அரங்கநாதன் என் முகத்தைப் பார்த்து அருளவில்லையே! ஐயோ…. என் நிலை என்னாவது அந்தோ..?

 

608:

எழிலுடைய வம்மனைமீர். என்னரங்கத் தின்னமுதர்,

குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில்

எழுகமலப் பூவழக ரெம்மானார், என்னுடைய

கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே. 2

 

அழகு மிகக் கொண்ட தாய்மார்களே… திருவரங்கன் எனக்கு அமுதம் போன்ற இனியவர். அவர் அழகான கேசம் கொண்டவர், வாய் அழகர், கண் அழகு பொருந்தியவர், கொப்பூழில் இருந்து எழுந்த கொடியில் பிறந்த தாமரை மலர் அழகர். அழகுகளின் சிகரமாகத் திகழும் என் தலைவரான அவர், என் கைவளையல்கள் தானே கழன்று விழும்படியாக என்னை விரகதாபத்தில் தவித்து, உடல் மெலிந்து உருகும்படி செய்துவிட்டாரே!

 

609:

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்,

அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான்,

செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார்,

எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே. (2) 3

 

பொங்குகின்ற கடலாலே சூழப்பட்ட இந்தப் பூவுலகும் பரமபதமும் எந்தக் குறைபாடும் இன்றி அரசாளும் எம்பெருமான், தன் செங்கோலை வழுவாது செலுத்துபவராகத் திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ளார். அவர், என்னுடைய திண்மையான கோல் வளையையும் கொண்டு, என் துன்பத்தைத் தீர்ப்பவர் ஆகாரே?

 

610:

மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்,

பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற,

பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்,

இச்சை யுடையரே லித்தெருவே போதாரே ? 4

 

மேல் மாடிகள், மாடங்கள், மதிள்கள் உள்ள திருவரங்கத்தில் எழுந்தருளிய அழகில் சிறந்த தேவரான நம்பெருமாள், மஹாபலியின் முன்னே வாமனனாகச் சென்று, தண்ணீரைக் கையில் ஏந்தி, பிட்சை பெற்ற குறையைத் தீர்ப்பதற்காக என் கை வளையல்களை விரும்பினாரோ? அவர் இந்தத் தெருவின் வழியே எழுந்தருளுவாரா?

 

611:

பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று,

எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்,

நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்,

இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே. 5

 

அழகில் சிறந்த வாமனனாக வந்து, தன் பொன்னான கையில் நீர் ஏற்று, உலகங்கள் அனைத்தையும் அளந்து தனதாக்கிக் கொண்ட எம்பெருமான், நல்லவர்கள் வாழும் குளிர்ந்த திருவரங்கத்தில் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டுள்ளார். அந்தப் பெரிய பெருமாள், கைப்பொருள் எதுவும் இல்லாத அடியேன் உடம்பைக் கொள்ளை கொள்வாரோ?

 

612:

கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார், காவிரிநீர்

செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார்,

எப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது, நான்மறையின்

சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே. 6

 

வயல்களில் காவிரி நீர் ஓடிப்பாயும் வளம் உடைய திருவரங்கச் செல்வனார், அடியார்களாகிய யாவருக்கும் எளியவராக, தன் முனைப்புடைய உயர்ந்தவர்க்கு எட்டாதவராக நான்கு வேதப் பொருள்களாக விளங்குபவர். முன்பே அடியேனின் கைப்பொருளகளைக் கொண்டதால், இப்போது உடலாகிய பொருளையும் கொண்டாரே!

 

613:

 

உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து,

பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்,

திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார்,

எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே. 7

 

திண்மையான மதிள் சூழ்ந்த திருவரங்கச் செல்வனார், ராமனாக அவதரித்தபோது, சீதாப்பிராட்டியில் திருமேனியில் கட்டுண்டு, உண்ணாமல் உறங்காமல் ஒலிக்கும் கடலில் அணைகட்டி தாம் பட்ட எளிமை எல்லாம் எண்ணாமல், என் பிரிவுத் துயரைத் தமக்குப் பெருமையாக எண்ணுகிறாரோ?

 

614:

பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு, பண்டொருநாள்

மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்,

தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்,

பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே. (2) 8

 

மிகப் பழைமையான காலத்தில் ஒருநாள், பாசி படர்ந்து கிடந்த பூ மாதாவுக்காக, அழுக்கு உடம்புடன் தண்ணீர் ஒழுகுகின்ற வெட்கமற்ற வராஹத்தின் வடிவம் கொண்ட திருமால், திருவரங்கத்தில் ஒளி வீசும்படியாக பிரகாசமாகத் திகழ்கின்றார். இவர், உன்னைப் பிரியேன்… என்று முன்பு ஒருமுறை சொன்னதை மறந்து, பிழைக்க முடியவில்லை.

 

615:

கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்,

திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து,

அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த,

பெண்ணாளன் பேணுமூர் பேரு மரங்கமே. 9

 

ருக்மிணியைக் கரம் பிடிப்பதற்காக, திண்ணமாக எண்ணித் திருமண ஏற்பாடுகளைச் செய்து முடித்த சிசுபாலன், ஒளி இழந்து மேலே பார்த்துத் தளர்ந்த நேரத்தில், தன் கையை ருக்மிணியே பிடிக்குமாறு செய்த கண்ணன், பெண்களைக் காக்கும் பெண்ணாளன் அன்றோ? இந்தப் பெருமான் எழுந்தருளி உள்ள திவ்ய தேசப் பெயரும் திருவரங்கம் ஆயிற்றே!

 

616:

செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த,

மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்,

தம்மை யுகப்பாரைத் தாமுகப்ப ரென்னும்சொல்,

தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே . (2) 10

 

மனம், மொழி, செயல் ஆகிய மூன்றும் ஒன்றுபட்ட செம்மையை உடைய திருவரங்கநாதர், வாயால் அருளிய உண்மைத் தத்துவமான சரம சுலோகச் செய்தியை பெரியாழ்வார் கேட்டு அறிந்து, அதிலேயே ஊன்றி இருப்பார். தம்மை விரும்பியவர்களைத் தாமும் விரும்புபவர் என்னும் உலக மொழி பொய்யாகாதே! இது பொய்யானால் இனி இதை சாதகம் செய்வது யாரோ? எனவே, நீரே இந்த வாக்கைப் பொய்யாக்காமல், என்னை உகக்க வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *