பூதத்தாழ்வார் அருளிச் செய்த இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார்

2222:
பொருளால் அமருலகம் புக்கியல லாகாது
அருளா லறமருளு மன்றே, – அருளாலே
மாமறையோர்க் கீந்த மணிவண்ணன் பாதமே,
நீமறவேல் நெஞ்சே. நினை. 41

2223:
நினைப்பன் திருமாலை நீண்டதோள் காண,
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார், – மனைப்பால்
பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்ப மெல்லாம்,
துறந்தார் தொழுதாரத் தோள். 42

2224:
தோளிரண் டெட்டேழும் மூன்று முடியனைத்தும்,
தாளிரண்டும் வீழச் சரந்துரந்தான், – தாளிரண்டும்,
ஆர்தொழுவார் பாதம் அவைதொழுவ தன்றே,என்
சீர்கெழுதோள் செய்யும் சிறப்பு? 43

2225:
சிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம்,
மறந்தாரை மானிடமா வையேன், அறம்தாங்கும்
மாதவனே யென்னும் மனம்படைத்து, மற்றவன்பேர்
ஓதுவதே நாவினா லுள்ளு. 44

2226:
உளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று,
தளர்தல் அதனருகும் சாரார், – அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,
பாதத்தான் பாதம் பயின்று. 45

2227:
பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், – பயின்ற
தணிதிகழும் சோலை யணிநீர் மலையே
மணிதிகழும் வண்தடக்கை மால். 46

2228:
மாலை யரியுருவன் பாத மலரணிந்து,
காலை தொழுதெழுமின் கைகோலி, – ஞாலம்
அளந்திடந் துண்டுமிழ்ந்த அண்ணலைமற் றல்லால்
உளங்கிடந்த வாற்றா லுணர்ந்து. 47

2229:
உணர்ந்தாய் மறைநான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள்தோள் மாலே. – மணந்தாய்போய்
வேயிருஞ் சாரல் வியலிரு ஞாலம்சூழ்,
மாயிருஞ் சோலை மலை. 48

2230:
மலையேழும் மாநிலங்க ளேழும் அதிர,
குலைசூழ் குரைகடல்க ளேழும், – முலைசூழ்ந்த
நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவனென்று,
அஞ்சாதென் னெஞ்சே. அழை. 49

2231:
அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன,
பிழைப்பில் பெரும்பெயரே பேசி, – இழைப்பரிய
ஆயவனே. யாதவனே. என்றவனை யார்முகப்பும்,
மாயவனே என்று மதித்து. 50

Leave a Reply