பெருமாள் திருமொழி

குலசேகராழ்வார்

2ஆம் திருமொழி

சந்தக் கலி விருத்தம்


658:
தேட்டரும்திறல் தேனினைத்தென் னரங்கனைத்திரு மாதுவாழ்
வாட்டமில்வன மாலைமார்வனை வாழ்த்திமால்கொள்சிந் தையராய்
ஆட்டமேவி யலந்தழைத்தயர் வெய்தும்மெய்யடி யார்கள்தம்
ஈட்டம்கண்டிடக் கூடுமேலது காணும்கண்பய னாவதே (2) 2.1

659:
தோடுலாமலர் மங்கைதோளிணை தேய்ந்ததும்சுடர் வாளியால்
நீடுமாமரம் செற்றதும்நிரை மேய்த்துமிவை யேநினைந்து
ஆடிப்பாடி அரங்கவோஎன்ற ழைக்கும்தொண்ட ரடிப்பொடி
ஆடனாம்பெறில் கங்கைநீர்குடைந் தாடும்வேட்கையென் னாவதே 2.2

660:
ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் கீண்டதும்முன்னி ராமனாய்
மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே
ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட ரங்கன்கோயில் திருமுற்றம்
சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ் சேறெஞ்சென்னிக் கணிவனே 2.3

661:
தோய்த்ததண்தயிர் வெண்ணெய்பாலுடன் உண்டலும்உடன் றாய்ச்சிகண்டு
ஆர்த்ததோளுடை யெம்பிரானென்ன ரங்கனுக்கடி யார்களாய்
நாத்தழும்பெழ நாரணாவென்ற ழைத்துமெய்தழும் பத்தொழு
தேத்தி,இன்புறும் தொண்டர்சேவடி ஏத்திவாழ்த்துமென் நெஞ்சமே 2.4

662:
பொய்சிலைக்குர லேற்றெருத்தமி றுத்துபோரர வீர்த்தகோன்
செய்சிலைச்சுடர் சூழொளித்திண்ண மாமதிள்தென்ன ரங்கனாம்
மெய்சிலைக்கரு மேகமொன்றுதம் நெஞ்சில்நின்று திகழப்போய்
மெய்சிலிர்ப்பவர் தம்மையேநினைந் தென்மனம்மெய்சி லிர்க்குமே 2.5

663:
ஆதியந்தம னந்தமற்புதம் ஆனவானவர் தம்பிரான்
பாதமாமலர் சூடும்பத்தியி லாதபாவிக ளுய்ந்திட
தீதில்நன்னெரி காட்டியெங்கும் திரிந்தரங்கனெம் மானுக்கே
காதல்செய்தொண்டர்க் கெப்பிறப்பிலும் காதல்செய்யுமென் னெஞ்சமே 2.6

664:
காரினம்புரை மேனிநல்கதிர் முத்தவெண்ணகைச் செய்யவாய்
ஆரமார்வ னரங்கனென்னும் அரும்பெருஞ்சுட ரொன்றினை
சேரும்நெஞ்சின ராகிச்சேர்ந்துக சிந்திழிந்தகண் ணீர்களால்
வாரநிற்பவர் தாளிணைக்கொரு வாரமாகுமென் னெஞ்சமே 2.7

665:
மாலையுற்றக டல்கிடந்தவன் வண்டுகிண்டுந றுந்துழாய்
மாலையுற்றவ ரைப்பெருந்திரு மார்வனைமலர்க் கண்ணனை
மாலையுற்றெழுந் தடிப்பாடித்தி ரிந்தரங்கனெம் மானுக்கே
மாலையுற்றிடும் தொண்டர்வாழ்வுக்கு மாலையுற்றதென் நெஞ்சமே 2.8

666:
மொய்த்துக்கண்பனி சோரமெய்கள்சி லிர்ப்பஏங்கி யிளைத்துநின்று
எய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழுந் தாடிப்பாடியி றைஞ்சி,என்
அத்தனச்ச னரங்கனுக்கடி யார்களாகி அவனுக்கே
பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார்முற்றும் பித்தரே 2.9

667:
அல்லிமாமலர் மங்கைநாதன் அரங்கன்மெய்யடி யார்கள்தம்
எல்லையிலடி மைத்திறத்தினில் என்றுமேவு மனத்தனாம்
கொல்லிகாவலன் கூடல்நாயகன் கோழிக்கோன்குல சேகரன்
சொல்லினின்தமிழ் மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்க ளாவரே (2) 2.10

 

Leave a Reply