பெருமாள் திருமொழி

குலசேகராழ்வார்

8ஆம் திருமொழி


தரவு கொச்சகக் கலிப்பா


719:
மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ (2) 8.1

720:
புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே
திண்டிறலாள் தாடகைதன் உரமுருவச் சிலைவளைத்தய்
கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே
எண்டிசையு மாளுடையாய் இராகவனே தாலேலோ 8.2

721:
கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய்
தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே
எங்கள்குல தின்னமுதே இராகவனே தாலேலோ 8.3

722:
தாமரைமே லயனவனைப் படைத்தவனே தசரதன்றன்
மாமதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள்
காமரங்க ளிசைபாடும் கணபுரத்தென் கருமணியே
ஏமருவும் சிலைவலவா இராகவனே தாலேலோ 8.4

723:
பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி
ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே
சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே
தாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ 8.5

724:
சுற்றமெல்லாம் பின்தொடரத் தொல்கான மடைந்தவனே
அற்றவர்கட் கருமருந்தே அயோத்திநகர்க் கதிபதியே
கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே
சிற்றவைதன் சொல்கொண்ட சீராமா தாலேலோ 8.6

725:
ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே
வாலியைகொன் றரசிளைய வானரத்துக் களித்தவனே
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே
ஆலிநகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ 8.7

726:
மலையதனா லணைகட்டி மதிளிலங்கை யழித்தவனே
அலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே
கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே
சிலைவலவா சேவகனே சீராம தாலேலோ 8.8

727:
தளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்றன் குலமதலாய்
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே
களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே
இளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ 8.9

728:
தேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே
காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே
ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ (2) 8.10

729:
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொல்நவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே (2) 8.11

Leave a Reply