திருவிருத்தம்

நம்மாழ்வார்

2528: கடல் ஓசைக்கு ஆற்றாத தலைவி இரங்கல்

மலைகொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாயப்பிரான்.
அலைகண்டு கொண்ட அமுதம்கொள் ளாது கடல்,பரதர்
விலைகொண்டு தந்தசங் கம்இவை வேரித் துழாய்துணையாத்
துலைகொண்டு தாயம் கிளர்ந்து,கொள் வானொத் தழைக்கின்றதே. 51

2529: கால மயக்கு

அழைக்கும் கருங்கடல் வெண்திரைக் கைகொண்டு போய்,அலர்வாய்
மழைக்கண் மடந்தை அரவணை யேற,மண் மாதர்விண்வாய்
அழைத்துப் புலம்பி முலைமலை மேல்நின்றும் ஆறுகளாய்
மழைக்கண்ண நீர்,திரு மால்கொடி யானென்று வார்கின்றதே. 52

2530: கட்டுவிச்சி கூறல்

வாரா யினமுலை யாளிவள் வானோர் தலைமகனாம்,
சேரா யினதெய்வ நன்னோ யிது,தெய்வத் தண்ணந்துழாய்த்
தாரா யினும்தழை யாயினும் தண்கொம்ப தாயினும்கீழ்
வேரா யினும்,நின்ற மண்ணாயி னும்கொண்டு வீசுமினே. 53

2531: வண்டு விடு தூது

வீசும் சிறகால் பறத்திர்,விண் ணாடுநுங் கட்கெளிது
பேசும் படியன்ன பேசியும் போவது, நெய்தொடுவுண்
டேசும் படியன்ன செய்யுமெம் மீசர்விண் ணோர்பிரானார்
மாசின் மலரடிக் கீழ்,எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே 54

2532: நலம் பாராட்டு

வண்டுக ளோ வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ,
உண்டுகளித்துழல் வீர்க்கொன் றுரைக்கியம், ஏனமொன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும், மலருள வோநும் வியலிடத்தே? 55

2533: தலைவன் இரவிடைக் கலந்தமையைத் தலைவி தோழிக்கு உரைத்தல்

வியலிட முண்ட பிரானாவிடுத்த திருவருளால்,
உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம் தோழி,ஓர் தண்தென்றல்வந்
தயலிடை யாரும் அறிந்திலர் அம்பூந் துழாயினின்தேன்
புயலுடை நீர்மையி னால்,தட விற்றென் புலன்கலனே. 56

2534: தலைவன் பாங்கனுக்குக் கழற்றெதிர்மறுத்தல்

புலக்குண் டலப்புண்ட ரீகத்த போர்க்கொண்டை, வல்லியொன்றால்
விலக்குண் டுலாகின்று வேல்விழிக் கின்றன, கண்ணன் கையால்
மலக்குண் டமுதம் சுரந்த மறிகடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்றுகண் டார்,எம்மை யாரும் கழறலரே. 57

2535: தோழி தலைவன் பெருமையை உரைத்துத் தலைவியை ஆற்றுதல்

கழல்தலம் ஒன்றே நிலமுழு தாயிற்று, ஒருகழல்போய்
நிழல்தர எல்லா விசும்பும் நிறைந்தது, நீண்ட அண்டத்து
உழறலர் ஞானச் சுடர்விளக் காயுயர்ந் தோரையில்லா
அழறலர் தாமரைக் கண்ணன், என் னோவிங் களக்கின்றதே? 58

2536: இரவு நீடுதற்கு ஆறாத தலைவியைப் பற்றிச் செவிலி இரங்குதல்

அளப்பருந் தன்மைய ஊழியங் கங்குல்,அந் தண்ணந்துழாய்க்கு
உளப்பெருங் காதலில் நீளிய வாயுள, ஓங்குமுந்நீர்
வளப்பெரு நாடன் மதுசூ தனனென்னும் வல்வினையேன்
தளப்பெரு நீண்முறு வல்,செய்ய வாய தடமுலையே. 59

2537: தலைமகள் இளமைக்குச் செவிலி இரங்கல்

முலையோ முழுமுற்றும் போந்தில, மொய்பூங் குழல்குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும், கடல்மண்ணெல்லாம்
விலையோ எனமிளி ருங்கண் ணிவள்பர மே.பெருமான்
மலையோ திருவேங் கடமென்று கற்கின்றா வாசகமே? (2) 60

Leave a Reply