1ஆம் பத்து 3 ஆம் திருவாய்மொழி
2813
பத்துடை யடியவர்க் கெளியவன், பிறர்களுக் கரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உ ரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே. (2) 1.3.1
2814
எளிவரு மியல்வினன் நிலைவரம் பிலபல பிறப்பாய்,
ஒளிவரு முழுநலம் முதலில கேடில வீடாம்,
தெளிதரும் நிலைமைய தொழிவிலன் முழுவதும், மிறையோன்,
அளிவரு மருளினோ டகத்தனன், புறத்தன னமைந்தே. 1.3.2
2815
அமைவுடை யறநெறி முழுவது முயர்வற வுயர்ந்த,
அமைவுடை முதல்கெடல் ஒடிவிடை யறநில மதுவாம்,
அமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம,f
அமைவுடை நாரணன் மாயையை யறிபவர் யாரே? 1.3.3
2816
யாருமோர் நிலைமைய னெனவறி வரிய வெம்பெருமான்,
யாருமோர் நிலைமைய னெனவறி வெளியவெம் பெருமான்,
பேருமோ ராயிரம் பிறபல வுடையவெம் பெருமான்,
பேருமோ ருருவமு முளதில்லை யிலதில்லை பிணக்கே. 1.3.4
2817
பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த,
கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்,
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு,
உணக்குமின் பசையற அவனுடை, யுணர்வுகொண் டுணர்ந்தே. 1.3.5
2818
உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந்நிலைமை,
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலையுணர்வரி துயிர்காள்,
உணர்ந்துணர்ந் துரைத்துரைத் தரியய னரனென்னுமிவரை,
உணர்ந்துணர்ந் துரைத்துரைத் திறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே. 1.3.6
2819
ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற,
நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னு மிவரை,
ஒன்றநும் மனத்துவைத் துள்ளிநும் இருபசை யறுத்து,
நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே. 1.3.7
2820
நாளு நின் றடு நமபழ மையங் கொடுவினையுடனே
மாளும், ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி,
நாளூநந் திருவுடை யடிகள்தம் நலங்கழல் வணங்கி,
மாளுமோ ரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே. 1.3.8
2821
வலத்தனன் திரிபுர மெரித்தவ னிடம்பெறத் துந்தித்
தலத்து, எழு திசைமுகன் படைத்தநல் லுலகமும் தானும்
புலப்பட பின்னும்தன் உலகத்தி லகத்தனன் தானே
சொலப்புகில் இவைபின்னும் வயிற்றுள இவையவன் துயக்கே. 1.3.9
2822
துயக்கறு மதியில்நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்,
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்,
புயற்கரு நிறத்தனன் பெருநிலங் கடந்தநல் லடிப்போது ,
அயர்ப்பில னலற்றுவன் தழுவுவன் வணங்குவ னமர்ந்தே. 1.3.10
2823
அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை,
அமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற் றேவல்கள்,
அமர்சுவை யாயிரத் தவற்றினு ளிவைபத்தும் வல்லார்
அமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே. (2) 1.3.11