1ஆம் பத்து 6 ஆம் திருவாய்மொழி
2846
பரிவதி லீசனைப் பாடி
விரிவது மேவ லுறுவீர்.
பிரிவகை யின்றிநன் னீர்தூய்
புரிவது வும்புகை பூவே. (2) 1.6.1
2847
மதுவார் தண்ணந் துழாயான்
முதுவே தமுதல் வனுக்கு
எதுவே தென்பணி என்னா
ததுவே யாட்செய்யு மீடே. 1.6.2
2848
ஈடு மெடுப்புமி லீசன்
மாடு விடாதென் மனனே
பாடுமென் நாவலன் பாடல்
ஆடுமெ னங்கம ணங்கே. 1.6.3
2849
அணங்கென ஆடுமெ னங்கம்
வணங்கி வழிபடு மீசன்
பிணங்கி யமரர் பிதற்றும்
குணங்கெழு கொள்கையி னானே. 1.6.4
2850
கொள்கைகொ ளாமையி லாதான்
எள்கலி ராகமி லாதான்
விள்கைவிள் ளாமைவி ரும்பி
உள்கலந் தார்க்கோ ரமுதே. 1.6.5
2851
அமுதம் அமரகட் கீந்த
நிமிர்சுட ராழி நெடுமால்
அமுதிலு மாற்ற இனியன்
நிமிர்திரை நீள்கட லானே. 1.6.6
2852
நீள்கடல் சூழிலங் கைக்கோன்
தோள்கள் தலைதுணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் தலைக்க ழிமினே. 1.6.7
2853
கழிமின்தொண் டீர்கள் கழித்துத்
தொழுமின் அவனைத் தொழுதால்
வழிநின்ற வல்வினை மாள்வித்து
அழிவின்றி யாக்கம் தருமே. 1.6.8
2854
தரும அரும்பய னாய
திருமக ளார்தனிக் கேள்வர்,
பெருமை யுடைய பிரானார்,
இருமை வினைகடி வாரே. 1.6.9
2855
கடிவார் தீய வினைகள்
நொடியா ருமள வைக்கண்
கொடியா அடுபுள் ளுயர்த்த
வடிவார் மாதவ னாரே. 1.6.10
2856
மாதவன் பால்சட கோபன்
தீதவ மின்றி யுரைத்த
ஏதமி லாயிரத் திப்பத்து
ஓதவல் லார்பிற வாரே. 1.6.11