திருவாய்மொழி இரண்டாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

 

 

2ஆம் பத்து 10ஆம் திருவாய்மொழி

3002

கிளரொளியிளமை கெடுவதன்முன்னம்

வளரொளிமாயோன் மருவியகோயில்

வளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை

தளர்விலராகில் சார்வதுசதிரே. 2.10.1

 

3003

சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது

அதிர்க்குரல்சங்கத் தழகர்தம்கோயில்

மதிதவழ்குடுமி மாலிருஞ்சோலை

பதியதுவேத்தி யெழுவதுபயனே. 2.10.2

 

3004

பயனல்லசெய்து பயனில்லைநெஞ்சே

புயல்மழைவண்ணர் புரிந்துறைகோயில்

மயல்மிகுபொழில்சூழ் மாலிருஞ்சோலை

அயன்மலையடைவததுகருமமே. 2.10.3

 

3005

கருமவன்பாசம் கழித்துழன்றுய்யவே

பெருமலையெடுத்தான் பீடுறைகோயில்

வருமழைதவழும் மாலிருஞ்சோலை

திருமலையதுவே யடைவதுதிறமே. 2.10.4

 

3006

திறமுடைவலத்தால் தீவினைபெருக்காது

அறமுயல் ஆழிப் படையவன்கோயில்

மறுவில்வண்சுனைசூழ் மாலிருஞ்சோலை

புறமலைசாரப் போவதுகிறியே. 2.10.5

 

3007

கிறியெனநினைமின் கீழ்மைசெய்யாதே

உறியமர்வெண்ணெ யுண்டவன் கோயில்

மறியொடுபிணைசேர் மாலிருஞ்சோலை

நெறிபட அதுவே நினைவதுநலமே. 2.10.6

 

3008

நலமெனநினைமின் நரகழுந்தாதே

நிலமுனமிடந்தான் நீடுறைகோயில்

மலமறுமதிசேர் மாலிருஞ்சோலை

வலமுறையெய்தி மருவுதல்வலமே. 2.10.7

 

3009

வலம்செய்துவைகல் வலங்கழியாதே

வலம்செய்யும்ஆய மாயவன் கோயில்

வலம்செய்யும்வானோர் மாலிருஞ்சோலை

வலம்செய்துநாளும் மருவுதல்வழக்கே. 2.10.8

 

3010

வழக்கெனநினைமின் வல்வினைமூழ்காது

அழக்கொடியட்டா னமர்பெருங்கோயில்

மழக்களிற்றினஞ்சேர் மாலிருஞ்சோலை

தொழுக்கருதுவதே துணிவதுசூதே. 2.10.9

 

3011

சூதென்றுகளவும் சூதும்செய்யாதே

வேதமுன்விரித்தான் விரும்பியகோயில்

மாதுறுமயில்சேர் மாலிருஞ்சோலை

போதவிழ்மலையே புகுவதுபொருளே. 2.10.10

 

3012

பொருளேன்றிவ்வுலகம் படைத்தவன்புகழ்மேல்

மருளில்வண்குருகூர் வண்சடகோபன்

தெருள்கொள்ளச்சொன்ன வோராயிரத்துளிப்பத்து

அருளுடையவன்தா ளணைவிக்கும்முடித்தே. 2.10.11

 

 

Leave a Reply