திருவாய்மொழி இரண்டாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

2ஆம் பத்து 4ஆம் திருவாய்மொழி

2934

ஆடியாடி யகம்கரைந்து இசை

பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி எங்கும்

நாடிநாடி நரசிங்காவென்று

வாடிவாடு மிவ்வாணுதலெ. 2.4.1

 

2935

வாணுதலிம்மடவரல் உம்மைக்

காணுமாசையுள் நைகின்றாள் விறல்

வாணனாயிரந்தோள்துணித்தீர் உம்மைக்

காண நீரிரக்கமிலீரே. 2.4.2

 

2936

இரக்கமனத்தோ டெரியணை

அரக்குமெழுகு மொக்குமிவள்

இரக்கமெழி ரிதற்கென்செய்கேன்

அரக்கனிலங்கை செற்றீருக்கே. 2.4.3

 

2937

இலங்கைசெற்றவனே என்னும் பின்னும்

வலங்கொள்புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்

மலங்கவெவ்வுயிர்க்கும் கண்ணீர்மிகக்

கலங்கிக்கைதொழும் நின்றிவளே. 2.4.4

 

2938

இவளிராப்பகல் வாய்வெரீஇ தன

குவளையொண்கண்ணநீர் கொண்டாள் வண்டு

திவளும்தண்ணந் துழாய்கொடீர் என

தவளவண்ணர் தகவுகளே. 2.4.5

 

2939

தகவுடையவனே யென்னும் பின்னும்

மிகவிரும்பும்பிரான் என்னும் என

தகவுயிர்க்கமுதே என்னும் உள்ளம்

உகவுருகி நின்றுள்ளுளே. 2.4.6

 

2940

உள்ளுளாவி யுலர்ந்துலர்ந்து என

வள்ளலேகண்ணனேயென்னும் பின்னும்

வெள்ளநீர்க்கிடந்தாய்என்னும் என்

கள்விதான்பட்ட வஞ்சனையே. 2.4.7

 

2941

வஞ்சனே என்னும் கைதொழும் தன்

நெஞ்சம்வே வநெடிதுயிர்க்கும் விறல்

கஞ்சனைவஞ்சனை செய்தீர் உம்மைத்

தஞ்சமென்றிவள் பட்டனவே. 2.4.8

 

2942

பட்டபோதெழு போதறியாள் விரை

மட்டலர்தண்துழாய் என்னும் சுடர்

வட்டவாய்நுதி நேமியீர் நும

திட்டமென்கொ லிவ்வேழைக்கே. 2.4.9

 

2943

ஏழைபேதை யிராப்பகல் தன

கேழிலொண்கண்ணநீர் கொண்டாள் கிளர்

வாழ்வைவேவ விலங்கை செற்றீர் இவள்

மாழைநோக்கொன்றும் வாட்டேன்மினே. 2.4.10

 

2944

வாட்டமில்புகழ் வாமனனை இசை

கூட்டிவண்சடகோபன் சொல் அமை

பாட்டோ ராயிரத்திப் பத்தால் அடி

குட்டலாகு மந்தாமமே. 2.4.11

Leave a Reply