திருவாய்மொழி இரண்டாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

 

2ஆம் பத்து 5ஆம் திருவாய்மொழி

2945

அந்தாமத்தன்புசெய் தென்னாவிசேரம்மானுக்கு

அந்தாமவாழ்முடிசங் காழிநூலாரமுள

செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாய்செங்கமலம்

செந்தாமரையடிக்கள் செம்பொன்திருவுடம்பே. 2.5.1

 

2946

திருவுடம்புவான்சுடர் செந்தாமரைகண்கைகமலம்

திருவிடமேமார்வ மயனிடமேகொப்பூழ்

ஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ

ஒருவிடமொன்றின்றி யென்னுள்கலந்தானுக்கே. 2.5.2

 

2947

என்னுள்கலந்தவன் செங்கனிவாய்செங்கமலம்

மின்னும்சுடர்மலைக்குக் கண்பாதம்கைகமலம்

மன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள

தன்னுள்கலவாத தெப்பொருளும்தானிலையே. 2.5.3

 

2948

எப்பொருளும்தானாய் மரகதக்குன்றமொக்கும்

அப்பொழுதைத்தாமரைப்பூக் கண்பாதம்கைகமலம்

எப்பொழுதும்நாள்திங்க ளாண்டூழியூழிதொறும்

அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே. 2.5.4

 

2949

ஆராவமுதமா யல்லாவியுள்கலந்த

காரார்க்கருமுகில்போ லென்னம்மான்கண்ணனுக்கு

நேராவாய்செம்பவளம் கண்பாதம்கைகமலம்

பேராரநீண்முடிநாண் பின்னுமிழைபலவே. 2.5.5

 

2950

பலபலவேயாபரணம் பேரும்பலபலவே

பலபலவேசோதிவடிவு பண்பெண்ணில்

பலபலகண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம்

பலபலவேஞானமும் பாம்பணைமேலாற்கேயோ. 2.5.6

 

2951

பாம்பணைமேல்பாற்கடலுள் பள்ளியமர்ந்ததுவும்

காம்பணைதோள்பின்னைக்கா எறுடனேழ்செற்றதுவும்

தேம்பணையசோலை மராமரமேழெய்ததுவும்

பூம்பிணையதண்துழாய்ப் பொன்முடியம்போரேறே. 2.5.7

 

2952

பொன்முடியம்போரேற்றை யெம்மானைநால்தடந்தோள்

தன்முடிவொன்றில்லாத தண்டுழாய்மாலையனை

என்முடிவுகாணாதே யென்னுள்கலந்தானை

சொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்சொல்லீரே. 2.5.8

 

2953

சொல்லீரென்னம்மானை யென்னாவியாவிதனை

எல்லையில்சீரென் கருமாணிக்கச்சுடரை

நல்லவமுதம்பெற்றற்கரிய வீடுமாய்

அல்லிமலர்விரையொத் தாணல்லன்பெண்ணல்லனே. 2.5.9

 

2954

ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்

காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்

பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்

கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே. 2.5.10

 

2955

கூறுதலொன்றாராக் குடக்கூத்தவம்மானை

கூறுதலேமேவிக் குருகூர்ச்சடகோபன்

கூறினவந்தாதி யோராயிரத்துளிப்பத்தும்

கூறுதல்வல்லாருளரேல் கூடுவர்வைகுந்தமே. 2.5.11

Leave a Reply