திருவாய்மொழி இரண்டாம் பத்து

நம்மாழ்வார்

 

 

2ஆம் பத்து 9ஆம் திருவாய்மொழி

2991

எம்மாவீட்டுத் திறமும்செப்பம் நின்

செம்மாபாதபற்புத் தலைசேர்த்தொல்லை

கைம்மாதுன்பம் கடிந்தபிரானே

அம்மாவடியென் வேண்டுவதீதே. 2.9.1

 

2992

இதேயானுன்னைக் கொள்வதெஞ்ஞான்றும் என்

மைதோய்சோதி மணிவண்ணவெந்தாய்

எய்தாநின்கழல் யானெய்த ஞானக்

கைதா காலக்கழிவுசெய்யேலே. 2.9.2

 

2993

செய்யேல்தீவினையென் றருள்செய்யும் என்

கையார்ச்சக்கரக் கண்ணபிரானே

ஐயார்க்கண்டமடைக்கிலும் நின்கழல்

எய்யாதேத்த அருள்செய்யெனக்கே. 2.9.3

 

2994

எனக்கேயாட்செய் யெக்காலத்துமென்று என்

மனக்கேவந் திடைவீடின்றிமன்னி

தனக்கேயாக வெனைக்கொள்ளுமீதே

எனக்கேகண்ணனை யான்கொள்சிறப்பே. 2.9.4

 

2995

சிறப்பில்வீடு சுவர்க்கம்நரகம்

இறப்பிலெய்துகவெய்தற்க யானும்

பிறப்பில் பல்பிறவிப்பெருமானை

மறப்பொன்றின்றி யென்றும்மகிழ்வேனே. 2.9.5

 

2996

மகிழ்கொள்தெய்வ முலோகம் அலோகம்

மகிழ்கொள்சோதி மலர்ந்தவம்மானே

மகிழ்கொள்சிந்தை சொல்செய்கைகொண்டு என்றும்

மகிழ்வுற்றுன்னை வணங்கவாராயே. 2.9.6

 

2997

வாராயுன் திருப்பாதமலர்க்கீழ்

பேராதேயான் வந்தடையும்படி

தாராதாய் உன்னையென்னுள்வைப்பிலென்றும்

ஆராதாய் எனக்கென்றுமெக்காலே. 2.9.7

 

2998

எக்காலத்தெந்தையா யென்னுள்மன்னில் மற்

றெக்காலத்திலும் யாதொன்றும்வேண்டேன்

மிக்கார்வேத விமலர்விழுங்கும் என்

அக்காரக்கனியே உன்னையானே. 2.9.8

 

2999

யானேயென்னை அறியகிலாதே

யானேயென்தனதே யென்றிருந்தேன்

யானேநீயென் னுடைமையும்நீயே

வானேயேத்து மெம்வானவரேறே. 2.9.9

 

3000

ஏறேலேழும்வென் றேர்க்கொளிலங்கையை

நீறேசெய்த நெடுஞ்சுடர்ச்சோதி

தேறேலென்னையுன் பொன்னடிச்சேர்த்தொல்லை

வேறேபோக எஞ்ஞான்றும்விடலே. 2.9.10

 

3001

விடலில்சக்கரத் தண்ணலை மேவல்

விடலில்வண்குருகூர்ச் சடகோபன்சொல்

கெடலிலாயிரத்துள் ளிவைபத்தும்

கெடலில்வீடுசெய்யும் கிளர்வார்க்கே. 2.9.11

Leave a Reply