திருவாய்மொழி மூன்றாம் பத்து

நம்மாழ்வார்

 

 

3ஆம் பத்து 10 ஆம் திருவாய்மொழி

3112

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச்

சங்கொடு சக்கரம்வில்

ஒண்மை யுடைய வுலக்கையொள் வாள்தண்டு

கொண்டுபுள் ளூர்ந்துஉலகில்

வன்மை யுடைய அரக்கர் அசுரரை

மாளப் படைபொருத

நன்மை யுடையவன் சீர்ப்பர வப்பெற்ற

நானோர் குறைவிலனே. (2) 3.10.1

 

3113

குறைவில் தடங்கடல் கோளர வேறித்தன்

கோலச்செந் தாமரைக்கண்

உறைபவன் போலவோர் யோகு புணர்ந்த

ஒளிமணி வண்ணன் கண்ணன்

கறையணி மூக்குடைப் புள்ளிக் கடாவி

அசுரரைக் காய்ந்தவம்மான்

நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்

யானொரு முட்டிலனே. 3.10.2

 

3114

முட்டில்பல் போகத் தொருதனி நாயகன்

மூவுல குக்குரிய

கட்டியைத் தேனை அமுதைநன் பாலைக்

கனியைக் கரும்புதன்னை

மட்டவிழ் தண்ணந்து ழாய்முடி யானை

வணங்கி அவன்திறத்துப்

பட்டபின் னைஇறை யாகிலும் யானென்

மனத்துப் பரிவிலனே. 3.10.3

 

3115

பரிவின்றி வாணனைக் காத்தும் என் றன்று

படையொடும் வந்தெதிர்ந்த

திரிபுரம் செற்றவ னும்மக னும்பின்னும்

அங்கியும் போர்தொலைய

பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை

ஆயனைப் பொற்சக்கரத்

தரியினை அச்சுத னைப்பற்றி யானிறை

யேனும் இடரிலனே. 3.10.4

 

3116

இடரின்றி யேயொரு நாளொரு போழ்திலெல்

லாவுல கும்கழிய

படர்ப்புகழ்ப் பார்த்தனும் வைதிக னுமுடன்

ஏறத்திண் தேர்க்கடவி

சுடரொளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில்

வைதிகன் பிள்ளைகளை

உடலொடும் கொண்டு கொடுத்தவ னைப்பற்றி

ஒன்றும் துயரிலனே. 3.10.5

 

3117

துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி

நின்ற வண்ணம் நிற்கவே

துயரில் மலியும் மனிசர் பிறவியில்

தோன்றிக்கண் காணவந்து

துயரங்கள் செய்து நன் தெய்வ நிலையுலகில்

புக வுய்க்குமம்மான்

துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற

யானோர்து ன்பமிலனே. 3.10.6

 

3118

துன்பமும் இன்பமு மாகிய செய்வினை

யாயுல கங்களுமாய்

இன்பமில் வெந்நர காகி இனியநல்

வான் சுவர்க் கங்களுமாய்

மன்பல் லுயிர்களு மாகிப் பலபல

மாய மயக்குகளால்

இன்புரும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற்

றேதுமல் லலிலனே. 3.10.7

 

3119

அல்லலில் இன்பம் அளவிறந் தெங்கும்

அழகமர் சூழொளியன்

அல்லி மலர்மகள் போக மயக்குகள்

ஆகியும் நிற்குமம்மான்

எல்லையில் ஞானத்தன் ஞானமஃதேகொண்டெல்

லாக்கரு மங்களும்செய்

எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி

யானோர்துக் கமிலனே. 3.10.8

 

3120

துக்கமில் ஞானச் சுடரொளி மூர்த்தி

துழாயலங் கல்பெருமான்

மிக்கபன் மாயங்க ளால்விகிர் தம்செய்து

வேண்டும் உருவுகொண்டு

நக்கபி ரானோ டயன்முத லாகஎல்

லாரும் எவையும்தன்னுள்

ஒக்கவொ டுங்கவி ழுங்கவல் லானைப்பெற்

றொன்றும் தளர்விலனே. 3.10.9

 

3121

தளர்வின்றி யேயென்றும் எங்கும் பரந்த

தனிமுதல் ஞானமொன்றாய்

அளவுடை யைம்புலன் களறி யாவகை

யாலரு வாகிநிற்கும்

வளரொளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள்

ஐந்தை யிருசுடரை

கிளரொளி மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி

யானென்றும் கேடிலனே. 3.10.10

 

3122

கேடில்வி ழுப்புகழ்க் கேசவ னைக்குரு

கூர்ச்சட கோபன் சொன்ன

பாடலோ ராயிரத் துளிவை பத்தும்

பயிற்றவல் லார்கட்குஅவன்

நாடும் நகரமும் நன்குடன் காண

நலனிடை யூர்தி பண்ணி

வீடும்பெ றுத்தித்தன் மூவுல குக்கும்

தருமொரு நாயகமே. (2) 3.10.11

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *