3ஆம் பத்து 3 ஆம் திருவாய்மொழி
3035
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்
தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து
எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே (2) 3.3.1
3036
எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து
அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே. 3.3.2
3037
அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க்கரு மாணிக்கம்
தெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து
எண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே. 3.3.3
3038
ஈசன் வானவர்க் கென்பனென் றால்அது
தேச மோதிரு வேங்கடத் தானுக்கு?
நீச னென்நிறை வொன்றுமி லேன்என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே. 3.3.4
3039
சோதி யாகியெல் லாவுல கும்தொழும்
ஆதி மூர்த்தியென் றாலள வாகுமோ?
வேதி யர்முழு வேதத் தமுதத்தை
தீதில் சீர்த்திரு வேங்கடத் தானையே. 3.3.5
3040
வேங்க டங்கள்மெய்ம் மேல்வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார்
வேங்க டத்துறை வார்க்கு நமவென்ன
லாங்க டமைஅ துசுமந் தார்க்கட்கே. 3.3.6
3041
சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு
சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே. 3.3.7
3042
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே. (2) 3.3.8
3043
ஓயு மூப்புப் பிறப்பிறப் புப்பிணி
வீயு மாறுசெய் வான்திரு வேங்கடத்
தாயன் நாண்மல ராமடித் தாமரை
வாயுள் ளும்மனத் துள்ளும்வைப் பார்கட்கே. 3.3.9
3044
வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று
எய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணை யான்திரு வேங்கடம்
மொய்த்த சோலைமொய் பூந்தடம் தாழ்வரே. 3.3.10
3045
தாள்ப ரப்பிமண் வதாவிய ஈசனை
நீள்பொ ழில்குரு கூர்ச்சட கோபன்சொல்
கேழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே. (2) 3.3.11