திருவாய்மொழி மூன்றாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

3ஆம் பத்து 4 ஆம் திருவாய்மொழி

3046

புகழுநல் ஒருவன் என்கோ.

பொருவில்சீர்ப் பூமி யென்கோ

திகழும்தண் பரவை என்கோ.

தீயென்கோ. வாயு என்கோ

நிகழும்ஆ காச மென்கோ.

நீள்சுடர் இரண்டும் என்கோ

இகழ்விலிவ் வனைத்தும் என்கோ

கண்ணனைக் கூவுமாறே. (2) 3.4.1

 

3047

கூவுமா றறிய மாட்டேன்

குன்றங்கள் அனைத்தும் என்கோ

மேவுசீர் மாரி என்கோ.

விளங்குதா ரகைகள் என்கோ

நாவியல் கலைகள் என்கோ.

ஞானநல் லாவி என்கோ

பாவுசீர்க் கண்ணன் எம்மான்

பங்கயக் கண்ண னையே. 3.4.2

 

3048

பங்கையக் கண்ணன் என்கோ.

பவளச்செவ் வாயன் என்கோ

அங்கதிர் அடியன் என்கோ.

அஞ்சன வண்ணன் என்கோ

செங்கதிர் முடியன் என்கோ.

திருமறு மார்வன் என்கோ

சங்குசக் கரத்தன் என்கோ.

சாதிமா ணிக்கத் தையே. 3.4.3

 

3049

சாதிமா ணிக்கம் என்கோ.

சவிகோள்பொன் முத்தம் என்கோ

சாதிநல் வயிரம் என்கோ

தவிவில்சீர் விளக்கம் என்கோ

ஆதியஞ் சோதி என்கோ.

ஆதியம் புருடன் என்கோ

ஆதுமில் காலத் தெந்தை

அச்சுதன் அமல னையே. 3.4.4

 

3050

அச்சுதன் அமலன் என்கோ

அடியவர் வினைகெடுக்கும்

நச்சுமா மருந்தம் என்கோ.

நலங்கடல் அமுதம் என்கோ

அச்சுவைக் கட்டி என்கோ.

அறுசுவை அடிசில் என்கோ

நெய்ச்சுவைத் தேறல் என்கோ.

கனியென்கோ. பாலென் கேனோ. 3.4.5

 

3051

பாலென்கோ. நான்கு வேதப்

பயனென்கோ சமய நீதி

நூலென்கோ. நுடங்கு கேள்வி

இசையென்கோ. இவற்றுள் நல்ல

மேலென்கோ வினையின் மிக்க

பயனென்கோ கண்ணன் என்கோ.

மாலென்கோ. மாயன் என்கோ

வானவர் ஆதி யையே. 3.4.6

 

3052

வானவர் ஆதி என்கோ.

வானவர் தெய்வம் என்கோ

வானவர் போகம் என்கோ.

வானவர் முற்றும் என்கோ

ஊனமில் செல்வம் என்கோ.

ஊனமில் சுவர்க்கம் என்கோ

ஊனமில் மோக்கம் என்கோ.

ஒளிமணி வண்ண னையே. 3.4.7

 

3053

ஒளிமணி வண்ணன் என்கோ.

ஒருவனென் றேத்த நின்ற

நளிர்மதிச் சடையன் என்கோ.

நான்முகக் கடவுள் என்கோ

அளிமகிழ்ந் துலகமெல்லாம்

படைத்தவை ஏத்த நின்ற

களிமலர்த் துளவ னெம்மான்

கண்ணனை மாய னையே. 3.4.8

 

3054

கண்ணனை மாயன் றன்னைக்

கடல்கடைந் தமுதங் கொண்ட

அண்ணலை அச்சு தன்னை

அனந்தனை அனந்தன் தன்மேல்

நண்ணிநன் குறைகின் றானை

ஞாலமுண் டுமிழ்ந்த மாலை

எண்ணுமா றறிய மாட்டேன்

யாவையும் யவரும் தானே. 3.4.9

 

3055

யாவையும் யவரும் தானாய்

அவரவர் சமயந் தோறும்

தோய்விலன் புலனைந் துக்கும்

சொலப்படான் உணர்வின் மூர்த்தி

ஆவிசேர் உயிரின் உள்ளால்

அதுமோர் பற்றி லாத

பாவனை அதனைக் கூடில்

அவனையும் கூட லாமே. 3.4.10

 

3056

கூடிவண் டறையும் தண்தார்க்

கொண்டல்போல் வண்ணன் றன்னை

மாடலர் பொழில்கு ருகூர்

வண்சட கோபன் சொன்ன

பாடலோர் ஆயி ரத்துள்

இவையுமோர் பத்தும் வல்லார்

வீடில போக மெய்தி

விரும்புவர் அமரர் மொய்த்தே (2) 3.4.11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *