திருவாய்மொழி மூன்றாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

3ஆம் பத்து 6 ஆம் திருவாய்மொழி

3068

செய்ய தாமரைக் கண்ண னாயுல

கேழு முண்ட அவன்கண்டீர்

வையம் வானம் மனிசர் தெய்வம்

மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்

செய்ய சூழ்சுடர் ஞான மாய்வெளிப்

பட்டி வைபடைத் தான்பின்னும்

மொய்கொள் சோதியொ டாயி னானொரு

மூவ ராகிய மூர்த்தியே. (2) 3.6.1

 

3069

மூவ ராகிய மூர்த்தி யைமுதல்

மூவர்க் குமுதல் வன்றன்னை

சாவ முள்ளன நீக்கு வானைத்

தடங்க டல்கிடந் தான்தன்னைத்

தேவ தேவனைத் தென்னி லங்கை

எரியெ ழச்செற்ற வில்லியை

பாவ நாசனைப் பங்க யத்தடங்

கண்ண னைப்பர வுமினோ. 3.6.2

 

3070

பரவி வானவ ரேத்த நின்ற

பரம னைப்பரஞ் சோதியை

குரவை கோத்த குழக னைமணி

வண்ண னைக்குடக் கூத்தனை

அரவ மேறி யலைக டலம

ரும்து யில்கொண்ட அண்ணலை

இரவும் நன்பக லும்வி டாதென்றும்

ஏத்து தல்மனம் வைம்மினோ. 3.6.3

 

3071

வைம்மின் நும்மனத் தென்று யானுரைக்

கின்ற மாயவன் சீர்மையை

எம்ம னோர்க ளுரைப்ப தென்? அது

நிற்க நாfடொறும் வானவர்

தம்மை யாளும் அவனும் நான்முக

னும்ச டைமுடி அண்ணலும்

செம்மை யாலவன் பாத பங்கயம்

சிந்தித் தேத்தி திரிவரே. 3.6.4

 

3072

திரியும் கற்றொ டகல்வி சும்பு

திணிந்த மண்கிடந் தகடல்

எரியும் தீயொ டிருசு டர்தெய்வம்

மற்றும் மற்றும் முற்றுமாய்

கரிய மேனியன் செய்ய தாமரைக்

கண்ணன் கண்ணன்விண் ணோரிறை

சுரியும் பல்கருங் குஞ்சி யெங்கள்

சுடர்மு டியண்ணல் தோற்றமே. 3.6.5

 

3073

தோற்றக் கேடவை யில்ல வனுடை

யான வனொரு மூர்த்தியாய்

சீற்றத் தோடருள் பெற்ற வனடிக்

கீழ்ப்பு கநின்ற செங்கண்மால்

நாற்றத் தோற்றச் சுவையொ லிஊ றல்

ஆகி நின்றஎம் வானவர்

ஏற்றை யேயன்றி மற்றொ ருவரை

யானி லேனெழு மைக்குமே. 3.6.6

 

3074

எழுமைக் குமென தாவிக் கின்னமு

தத்தி னைஎன தாருயிர்

கெழுமி யகதிர்ச் சோதி யைமணி

வண்ண னைக்குடக் கூத்தனை

விழுமி யவம ரர்மு நிவர்வி

ழுங்கும் கன்னல் கனியினை

தொழுமின் தூயம னத்த ராயிறை

யும்நில் லாதுய ரங்களே. 3.6.7

 

3075

துயர மேதரு துன்ப இன்ப

வினைக ளாய்அ வை அல்லனாய்

உயர நின்றதோர் சோதி யாயுல

கேழு முண்டுமிழ்ந் தான்தன்னை

அயர வாங்கு நமன்த மர்க்கரு

நஞ்சி னையச்சு தன்தன்னை

தயர தற்கும கனறன் னையன்றி

மற்றி லேன்தஞ்ச மாகவே. 3.6.8

 

3076

தஞ்ச மாகிய தந்தை தாயொடு

தானு மாயவை அல்லனாய்

எஞ்ச லிலம ரர்க்கு லமுதல்

மூவர் தம்முள்ளு மாதியை

அஞ்சி நீருல கத்துள் ளீர்கள்.

அவனி வனென்று கூழேன்மின்

நெஞ்சி னால்நினைப் பான்ய வனவன்

ஆகும் நீள்கடல் வண்ணனே. 3.6.9

 

3077

கடல்வண் ணன்கண்ணன் விண்ண வர்க்கரு

மாணிக் கமென தாருயிர்

படவ ரவின ணைக்கி டந்த

பரஞ்சு டர்ப்பண்டு நூற்றுவர்

அடவ ரும்படை மங்க ஐவர்க்கட்

காகி வெஞ்சமத்து அன்றுதேர்

கடவி யபெரு மான்க னைகழல்

காண்ப தென்றுகொல் கண்களே? 3.6.10

 

3078

கண்கள் காண்டற் கரிய னாய்க்கருத்

துக்கு நன்றுமெ ளியனாய்

மண்கொள் ஞாலத்து யிர்க்கெல் லாமருள்

செய்யும் வானவ ரீசனை

பண்கொள் சோலை வழுதி நாடன்

குருகைக் கோன்சட கோபன்சொல்

பண்கொள் ஆயிரத் திப்பத் தால்பத்த

ராகக் கூடும் பயலுமினே. (2) 3.6.11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *