திருவாய்மொழி மூன்றாம் பத்து

நம்மாழ்வார்

 

 

3ஆம் பத்து 9 ஆம் திருவாய்மொழி

3101

சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ

என்னாவில் இன்கவி யானொருவர்க்கும் கொடுக்கிலேன்

தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து

என்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே. 3.9.1

 

3102

உளனாக வேயெண்ணித் தன்னையொன்றாகத்தன் செல்வத்தை

வளனா மதிக்குமிம் மானிடத்தைக்கவி பாடியென்

குளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே

உளனாய எந்தையை எந்தைபெம்மானை ஒழியவே? 3.9.2

 

3103

ஒழிவொன்றில் லாதபல் ஊழிதோறூழி நிலாவபோம்

வழியைத் தரும்நங்கள் வானவர் ஈசனை நிற்கப்போய்

கழிய மிகநல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்

இழியக் கருதியோர் மானிடம் பாடலென் னாவதே. 3.9.3

 

3104

என்னாவ தெத்தெனை நாளைக்குப் போதும் புலவீர்காள்

மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்?

மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்

தன்னாக வேகொண்டு சன்மம்செய்யாமையும் கொள்ளுமே. 3.9.4

 

3105

கொள்ளும் பயனில்லைக் குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை

வள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும் புலவீர்காள்

கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல் லாம்தரும் கோதில்என்

வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ. 3.9.5

 

3106

வம்மின் புலவீர்.நும் மெய்வருத்திக்கை செய் துய்ம்மினோ

இம்மன் னுலகில் செல்வரிப்போதில்லை நோக்கினோம்

நும்மின் கவிகொண்டு நும்நு_மிட்டாதெய்வம் ஏத்தினால்

செம்மின் சுடர்முடி என்திருமாலுக்குச் சேருமே. 3.9.6

 

3107

சேரும் கொடைபுகழ் எல்லையிலானைஓ ராயிரம்

பேரும் உடைய பிரானையல்லால்மற்று யான்கிலேன்

மாரி யனையகை மால்வரையொக்கும்திண் தோளென்று

பாரிலோர் பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள் வேயவே. 3.9.7

 

3108

வேயின் மலிபுரை தோளிபின்னைக்கு மணாளனை

ஆய பெரும்புகழ் எல்லையிலாதன பாடிப்போய்

காயம் கழித்துஅ வன் தாளிணைக்கீழ்ப்புகுங் காதலன்

மாய மனிசரை என்சொல்லவல்லேனென் வாய்கொண்டே? 3.9.8

 

3109

வாய்கொண்டு மானிடம் பாடவந்தகவி யேனல்லேன்

ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக் கேயுளன்

சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்

நீகண்டு கொள் என்று வீடும் தரும்நின்று நின்றே. 3.9.9

 

3110

நின்றுநின் றுபல நாளுய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய்

சென்றுசென் றாகிலும் கண்டுசன் மங்கழிப் பானெண்ணி

ஒன்றியொன் றியுல கம்படைத் தாங்கவி யாயினேற்கு

என்றுமென் றுமினி மற்றொரு வர்க்கவி யேற்குமே? 3.9.10

 

3111

ஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன்கண் ணன்தனக்கு

ஏற்கும் பெரும்புகழ் வண்குரு கூர்ச்சட கோபன் சொல்

ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத் துள்ளிவையும் ஓர்ப்பத்து

ஏற்கும் பெரும்புகழ் சொல்லவல்லார்க்கில்லை சன்மமே. 3.9.11

Leave a Reply