திருவாய்மொழி நான்காம் பத்து

நம்மாழ்வார்

திருவாய்மொழி நான்காம் பத்து

4ஆம் பத்து 1 ஆம் திருவாய்மொழி

3123

ஒருநா யகமாய் ஓடவுலகுட னாண்டவர்

கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்

பெருநாடு காண இம்மையிலேபிச்சை தாம்கொள்வர்

திருநாரணன்தாள் காலம் பெறச்சிந்தித் துய்ம்மினோ. 4.1.1

 

3124

உய்ம்மின் திறைகொணர்ந் தென்றுலகாண்டவர் இம்மையே

தம்மின் சுவைமட வாரைப்பிறர் கொள்ளத் தாம்விட்டு

வெம்மி னொளிவெயில் கானகம்போய்க்குமை தின்பர்கள்

செம்மின் முடித்திரு மாலைவிரைந்தடி சேர்மினோ. 4.1.2

 

3125

அடிசேர் முடியின ராகியரசர்கள் தாம்தொழ

இடிசேர் முரசங்கள் முற்றத்தியம்ப இருந்தவர்

பொடிசேர் துகளாய்ப் போவர்களாதலின் நொக்கென

கடிசேர் துழாய்முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ. 4.1.3

 

3126

நினைப்பான் புகில்கடல் எக்கலின் நுண்மண லிற்பலர்

எனைத்தோ ருகங்களும் இவ்வுல காண்டு கழிந்தவர்

மனைப்பால் மருங்கற மாய்தலல்லால்மற்றுக் கண்டிலம்

பனைத்தாள் மதகளி றட்டவன் பாதம் பணிமினோ. 4.1.4

 

3127

பணிமின் திருவருள் என்னும்அஞ்சீதப் பைம்பூம்பள்ளி

அணிமென் குழலார் இன்பக்கலவி அமுதுண்டார்

துணிமுன்பு நாலப்பல் லேழையர் தாமிழிப் பச்செல்வர்

மணிமின்னு மேனிநம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ. 4.1.5

 

3128

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து

ஆழ்ந்தாரென் றல்லால் அன்று முதலின் றறுதியா

வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென் பதில்லை நிற்குறில்

ஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ. 4.1.6

 

3129

ஆமின் சுவையவை ஆறொடடிசிலுண் டார்ந்தபின்

தூமென் மொழிமட வாரிரக்கப்பின்னும் துற்றுவார்

ஈமின் எமக்கொரு துற் றென்றிடறுவ ராதலின்

கோமின் துழாய்முடி ஆதியஞ்சோதி குணங்களே. 4.1.7

 

3130

குணங்கொள் நிறைபுகழ் மன்னர்க்கொடைக்கடன் பூண்டிருந்து

இணங்கி யுலகுட னாக்கிலும் ஆங்கவ னையில்லார்

மணங்கொண்ட கோபத்து மன்னியு மீள்வர்கள் மீள்வில்லை

பணங்கொள் அரவணை யான்திரு நாமம் படிமினோ. 4.1.8

 

3131

படிமன்னு பல்கலன் பற்றோடறுத்துஐம் புலன்வென்று

செடிமன்னு காயம்செற்றார்களு மாங்கவ னையில்லார்

குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியுமீள்வர்கள் மீள்வில்லை

கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. 4.1.9

 

3132

குறுக மிகவுணர் வத்தொடு நோக்கியெல் லாம்விட்ட

இறுக லிறப்பென்னும் ஞானிக்கும் அப்பய னில்லையேல்

சிறுக நினைவதோர் பாசமுண்டாம்பின்னும் வீடில்லை

மறுபகலில் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடஃதே. 4.1.10

 

3133

அஃதே உய்யப் புகுமாறென்று கண்ணன் கழல்கள்மேல்

கொய்பூம் பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் குற்றேவல்

செய்கோலத் தாயிரம் சீர்த்தொடைப்பாடல் இவைபத்தும்

அஃகாமற் கற்பவர் ஆழ்துயர் போயுய்யற் பாலரே. (2) 4.1.11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *