திருவாய்மொழி ஐந்தாம் பத்து

நம்மாழ்வார்

 

 

5ஆம் பத்து 3ஆம் திருவாய்மொழி

3255

மாசறு சோதியென் செய்ய வாய்மணிக் குன்றத்தை

ஆசறு சீலனை யாதி மூர்த்தியை நாடியே,

பாசற வெய்தி யறிவிழந் தெனைநா ளையம்?,

ஏசறு மூரவர் கவ்வை தோழீ. என்செய்யுமே? (2) 5.3.1

 

3256

என்செய்யு மூரவர் கவ்வை தோழீ. இனிநம்மை,

என்செய்ய தாமரைக் கண்ண னென்னை நிறைகொண்டான்,

முன்செய்ய மாமை யிழந்து மேனி மெலிவெய்தி,

என்செய்ய வாயும் கருங்கண் ணும்பயப் பூர்ந்தவே. 5.3.2

 

3257

ஊர்ந்த சகடம் உதைத்தபாதத்தன், பேய்முலை

சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறைகொண்டான்,

பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடன்றியோர் சொல்லிலேன்,

தீர்ந்தவென் தோழீ. என்செய்யு மூரவர் கவ்வையே? 5.3.3

 

3258

ஊரவர் கவ்வை யெருவிட்டன்னைசொல் நீர்மடுத்து,

ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்,

பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த,

காரமர் மேனிநங் கண்ணன் தோழீ. கடியனே. 5.3.4

 

3259

கடியன் கொடியன் நெடியமாலுல கங்கொண்ட

அடியன், அறிவரு மேனிமாயத்தன், ஆகிலும்

கொடியவென் னெஞ்சம் அவனென்றே கிடக்கு மெல்லே,

துடிகொ ளிடைமடத் தோழீ. அன்னையென் செய்யுமே? 5.3.5

 

3260

அன்னையென் செய்யிலென் ஊரென் சொல்லிலென் தோழிமீர்,

என்னை யினியுமக் காசை யில்லை யகப்பட்டேன்,

முன்னை யமரர் முதல்வன் வண்துவ ராபதி

மன்னன், மணிவண் ணன்வாசுதேவன் வலையுளே. 5.3.6

 

3261

வலையுள் அகப்பட்டுத் தென்னைநன்நெஞ்சம் கூவிக்கொண்டு,

அலைகடல் பள்ளி யம்மானைஆழிப் பிரான்தன்னை

கலைகொள் அகலல்குல் தோழீநம்கண்க ளால்கண்டு

தலையில் வணங்க மாங்கொலோதையலார் முன்பே? 5.3.7

 

3262

பேய்முலை யுண்டு சகடம் பாய்ந்து மருதிடைப்

போய்முதல் சாய்த்து, புள்வாய் பிளந்து களிறட்ட,

தூமுறு வல்தொண்டை, வாய்ப்பிரானையெந் நாள்கொலோ,

யாமுறு கின்றது தோழீ. அன்னையர் நாணவே? 5.3.8

 

3263

நாணும் நிறையும் கவர்ந்தென்னை நன்னெஞ்சம் கூவிக்கொண்டு,

சேணுயர் வானத் திருக்கும் தேவ பிரான்தன்னை,

ஆணையென் தோழீ. உலகுதோறலர் தூற்றி,ஆம்

கோணைகள் செய்துகுதிரியாய் மடலூர்துமே. 5.3.9

 

3264

யாமட லூர்ந்தும் எம்மாழியங்கைப் பிரானுடை,

தூமடல் தண்ணம் துழாய்மலர் கொண்டு சூடுவோம்,

யாமட மின்றித் தெருவு தோறயல் தையலார்,

நாமடங் கப்பழி தூற்றி நாடும் இரைக்கவே. 5.3.10

 

3265

இரைக்கும் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான்தன்னை,

விரைக்கொள் பொழில்குரு கூர்ச்சட கோபன் சொன்ன,

நிரைக்கொளந் தாதி யோரா யிரத்து ளிப்பத்தும்,

உரைக்கவல் லார்க்கு வைகுந்த மாகும்தம் மூரெல்லாம். (2) 5.3.11

Leave a Reply