6ஆம் பத்து 10ஆம் திருவாய்மொழி
3442
உலகம் உண்ட பெருவாயா. உலப்பில் கீர்த்தி யம்மானே,
நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி. நெடியாய். அடியே னாருயிரே,
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே,
குலதொல் லடியேன் உன்பாதம் கூடு மாறு கூறாயே. 6.10.1
3443
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடுவல் லசுரர் குலமெல்லாம்
சீறா எறியும் திருநேமி வலவா. தெய்வக் கோமானே,
சேறார் சுனைத்தா மரைசெந்தீ மலரும் திருவேங் கடத்தானே,
ஆறா அன்பில் அடியேனுன் அடிசேர் வண்ணம் அருளாயே. 6.10.2
3444
வண்ண மருள்கொள் அணிமேக வண்ணா. மாய அம்மானே,
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே. இமையோர் அதிபதியே,
தெண்ணல் அருவி மணிபொன்முத் தலைக்கும் திருவேங் கடத்தானே,
அண்ணலே.உன் அடிசேர அடியேற் காவா வென்னாயே. 6.10.3
3445
ஆவா வென்னா துலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல்,
தீவாய் வாளி மழைபொழிந்த சிலையா. திருமா மகள்கேள்வா,
தேவா சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்து மாறு புணராயே. 6.10.4
3446
புணரா நின்ற மரமேழன் றெய்த வொருவில் வலவாவோ,
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ,
திணரார் மேகம் எனக்களிறு சேரும் திருவேங் கடத்தானே,
திணரார் சார்ங்கத் துன்பாதம் சேர்வ தடியே னெந்நாளே? 6.10.5
3447
எந்நா ளேநாம் மண்ணளந்த இணைத்தா மரைகள் காண்பதற்கெ ன்று,
எந்நா ளும்நின் றிமையோர்கள் ஏத்தி யிறைஞ்சி யினமினமாய்,
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங் கடத்தானே,
மெய்ந்நா னெய்தி யெந்நாளுன் அடிக்கண் அடியேன் மேவுவதே? 6.10.6
3448
அடியேன் மேவி யமர்கின்ற அமுதே. இமையோர் அதிபதியே,
கொடியா அடுபுள் ளுடையானே. கோலக் கனிவாய்ப் பெருமானே,
செடியார் வினைகள் தீர்மருந்தே. திருவேங் கடத்தெம் பெருமானே,
நொடியார் பொழுதும் உன்பாதம் காண நோலா தாற்றேனே. 6.10.7
3449
நோலா தாற்றேன் நுன்பாதம் காண வென்று நுண்ணுணர்வில்,
நீலார் கண்டத் தம்மானும் நிறைநான் முகனு மிந்திரனும்,
சேலேய் கண்ணார் பலர்சூழ விரும்பும் திருவேங் கடத்தானே,
மாலாய் மயக்கி யடியேன்பால் வந்தாய் போல வாராயே. 6.10.8
3450
வந்தாய் போலே வாராதாய். வாரா தாய்போல் வருவானே,
செந்தா மரைக்கண் செங்கனிவாய் நால்தோ ளமுதே. எனதுயிரே,
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே,
அந்தோ. அடியேன் உன்பாதம் அகல கில்லேன் இறையுமே. 6.10.9
3451
அகல கில்லேன் இறையும் என் றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய். உலகமூன் றுடையாய். என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே. 6.10.10
3452
அடிக்கீ ழமர்ந்து புகுந்தடியீர். வாழ்மின் என்றென் றருள்கொடுக்கும்
படிக்கே ழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்,
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவைபத்தும்,
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே. 6.10.11
1 thought on “திருவாய்மொழி ஆறாம் பத்து”