திருவாய்மொழி எட்டாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

8ஆம் பத்து 2ஆம் திருவாய்மொழி

3574

நங்கள் வரிவளை யாயங் காளோ. நம்முடை ஏதலர் முன்பு நாணி,

நுங்கட் கியானொன்று ரைக்கும் மாற்றம் நோக்குகின் றேனெங்கும் காண மாட்டேன்,

சங்கம் சரிந்தன சாயி ழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன்,

வெங்கண் பறவையின் பாக னெங்கோன் வேங்கட வாணணை வேண்டிச் சென்றே. (2) 8.2.1

 

3575

வேண்டிச்சென் றொன்று பெறுகிற் பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட் கேலும்,

ஈண்டிது ரைக்கும் படியை யந்தோ. காண்கின்றி லேனிட ராட்டி யேன்நான்,

காண்தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன்நங்கள் கோனைக் கண்டால்,

ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின் றேனே. 8.2.2

 

3576

காலம் இளைக்கிலல் லால்வி னையேன் நானிளைக் கின்றிலன் கண்டு கொண்மின்,

ஞாலம் அறியப் பழிசு மந்தேன் நன்னுத லீர்.இனி நாணித் தானென், நீல

மலர்நெடுஞ் சோதி சூழ்ந்த நீண்ட முகில்வண்ணன் கண்ணன் கொண்ட,

கோல வளையொடு மாமை கொள்வான் எத்தனை காலம்கூ டச்சென்றே? 8.2.3

 

3577

கூடச்சென் றேனினி என்கொ டுக்கேன்? கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்,

பாடற் றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிச ழிந்தேன்,

மாடக் கொடிமதிள் தென்கு ளந்தை வண்குட பால்நின்ற மாயக் கூத்தன்,

ஆடல் பறவை உயர்த்த வெல்போர் ஆழி வலவினை யாதரித்தே. 8.2.4

 

3578

ஆழி வலவினை ஆதரிப்பும் ஆங்கவன் நம்மில் வரவும் எல்லாம்,

தோழியர் காள்.நம் முடைய மேதான்? சொல்லுவ தோவிங் கரியதுதான்,

ஊழிதோ றூழி ஒருவ னாக நன்குணர் வார்க்கும் உணர லாகா,

சூழ லுடைய சுடர்கொ ளாதித் தொல்லையஞ் சோதி நினைக்குங் காலே. 8.2.5

 

3579

தொல்லையஞ் சோதி நினைக்குங் காலென் சொல்லள வன்றிமை யோர்த மக்கும்,

எல்லையி லாதன கூழ்ப்புச் செய்யும் அத்திறம் நிற்கவெம் மாமை கொண்டான்,

அல்லி மலர்த்தண் டுழாயும் தாரான் ஆர்க்கிடு கோவினிப் பூசல் சொல்லீர்,

வல்லி வளவயல் சூழ்கு டந்தை மாமலர்க் கண்வளர் கின்ற மாலே. 8.2.6

 

3580

மாலரி கேசவன் நார ணஞ்சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றென்று,

ஒல மிடவென்னைப் பண்ணி விட்டிட் டொன்று முருவும் சுவடும் காட்டான்,

ஏல மலர்குழல் அன்னை மீர்காள். என்னுடைத் தோழியர் காள்.என் செய்கேன்?

காலம் பலசென்றும் காண்ப தாணை உங்களோ டெங்க ளிடையில் லையே. 8.2.7

 

3581

இடையில் லையான் வளர்த்த கிளிகாள். பூவைகள் காள்.குயில் காள்.ம யில்காள்,

உடையநம் மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழியவொட் டாது கொண்டான்,

அடையும் வைகுந்த மும்பாற் கடலும் அஞ்சன வெற்பும் அவைநணிய,

கடையறப் பாசங்கள் விட்ட பின்னை அன்றி யவனவை காண்கொ டானே. 8.2.8

 

3582

காண்கொடுப் பானல்ல னார்க்கும் தன்னைக் கைசெயப் பாலதோர் மாயந் தன்னால்,

மாண்குறல் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த,

சேண்சுடர்த் தோள்கள் பலத ழைத்த தேவ பிராற்கென் நிரைவினோடு,

நாண்கொடுத் தேனினி யென்கொடுக்கேன் என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள். 8.2.9

 

3583

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள். யானினச் செய்வதென்? என்நெஞ் சென்னை,

நின்னிடை யேனல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இருகைக் கொண்டு,

பன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற் றோடு பான்மதி ஏந்தியொர் கோல நீல,

நன்னெடுங் குன்றம் வருவ தொப்பான் நாண்fம லர்ப்பா தமடைந் ததுவே. 8.2.10

 

3584

பாதம் அடைவதன் பாசத் தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு,

கோதில் புகழ்க்கண் ணன்தன் னடிமேல் வண்குரு கூர்ச்சட கோபன் சொன்ன,

தீதிலந்தாதியோ ராயி ரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்,

ஆதுமோர் தீதில ராகி யிங்கும் அங்குமெல் லாமமை வார்கள் தாமே. (2) 8.2.11

Leave a Reply