திருவாய்மொழி எட்டாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

8ஆம் பத்து 7ஆம் திருவாய்மொழி

3629

இருத்தும் வியந்தென்னைத் தன்பொன் னடிக்கீழென்று,

அருத்தித் தெனைத்தோர் பலநாள் அழைத்தேற்கு,

பொருத்த முடைவா மனன்தான் புகுந்து,என்தன்

கருத்தை யுறவீற் றிருந்தான் கண்டுகொண்டே. (2) 8.7.1

 

3630

இருந்தான் கண்டுகொண் டெனதேழை நெஞ்சாளும்,

திருந்தாத வோரைவ ரைத்தேய்ந் தறமன்னி,

பெருந்தாள் களிற்றுக் கருள்செய்த பெருமான்,

தருந்தான் அருள்தான் இனியான் அறியேனே. 8.7.2

 

3631

அருள்தா னினியான் அறியேன் அவனென்னுள்,

இருள்தான் அறவீற் றிருந்தான் இதுவல்லால்,

பொருள்தா னெனில்மூ வுலகும் பொருளல்ல,

மருள்தானீ தோ?மாய மயக்கு மயக்கே. 8.7.3

 

3632

மாய மயக்குமயக் கானென்னை வஞ்சித்து,

ஆயன் அமரர்க் கரியே றெனதம்மான்,

தூய சுடர்ச்சோதி தனதென்னுள் வைத்தான்,

தேயம் திகழும்தன் திருவருள் செய்தே. 8.7.4

 

3633

திகழுந்தன் திருவருள் செய்துல கத்தார்,

புகழும் புகழ்தா னதுகாட்டித் தந்து,என்னுள்

திகழும் மணிக்குன்ற மொன்றே யொத்துநின்றான்,

புகழும் புகழ்மற் றெனக்குமோர் பொருளே? 8.7.5

 

3634

பொருள்மற் றெனக்குமோர் பொருள்தன்னில் சீர்க்கத்

தருமேல்,பின் யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்?,

கருமா ணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்,

திருமார்பு கால்கண்கை செவ்வாய் உந்தியானே. 8.7.6

 

3635

செவ்வாயுந்தி வெண்பல் சுடர்க்குழை, தன்னோடு

எவ்வாய்ச் சுடரும் தம்மில்முன் வளாய்க்கொள்ள,

செவ்வாய் முறுவலோ டெனதுள்ளத் திருந்த,

அவ்வா யன்றியான் அறியேன்மற் றருளே. 8.7.7

 

3636

அறியேன்மற் றருளென்னை யாளும் பிரானார்,

வெறிதே யருள்செய்வர் செய்வார்கட் குகந்து,

சிறியே னுடைச்சிந்தை யுள்மூ வுலகும்,தம்

நெறியா வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரே. 8.7.8

 

3637

வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரும் யவரும்,

வயிற்றிற்கொண்டு நின்றொரு மூவுல கும்,தம்

வயிற்றிற்கொண்டு நின்றவண் ணம்நின்ற மாலை,

வயிற்றிற்கொண்டு மன்னவைத் தேன்மதி யாலே. 8.7.9

 

3638

வைத்தேன் மதியா லெனதுள்ளத் தகத்தே,

எய்த்தே யொழிவேனல் லேனென்றும் எப்பொதும்,

மொய்த்தேய் திரைமோது தண்பாற் கடலுளால்,

பைத்தேய் சுடர்ப்பாம் பணைநம் பரனையே. 8.7.10

 

3639

சுடர்ப்பாம் பணைநம் பரனைத் திருமாலை,

அடிச்சேர் வகைவண் குருகூர்ச் சடகோபன்,

முடிப்பான் சொன்னவா யிரத்திப்பத் தும்சன்மம்

விடதேய்ந் தறநோக்கும் தன்கண்கள் சிவந்தே. (2) 8.7.11

Leave a Reply