திருவாய்மொழி பத்தாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

10ஆம் பத்து 4ஆம் திருவாய்மொழி

3816

சார்வேதவ நெறிக்குத் தாமோதரன் தாள்தள்,

கார்மேக வண்ணன் கமல நயனத்தன்,

நீர்வானம் மண்ணெரிகா லாய்நின்ற நேமியான்,

பேர்வா னவர்கள் பிதற்றும் பெருமையனே. (2) 10.4.1

 

3817

பெருமையனே வானத் திமையோர்க்கும் காண்டற்

கருமையனே ஆகத் தணையாதார்க்கு என்றும்

திருமெய் யுறைகின்ற செங்கண்மால் நாளும்

இருமை வினைகடிந்திங்கு என்னையாள் கின்றானே. 10.4.2

 

3818

ஆள்கின்றா னாழியான் ஆரால் குறைவுடையம்?

மீள்கின்ற தில்லைப் பிறவித் துயர்கடிந்தோம்,

வாள்கெண்டையொண்கண் மடப்பின்னை தன் கேள்வன்,

தாள்கண்டு கொண்டு என் தலைமேல் புனைந்தேனே. 10.4.3

 

3819

தலைமேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்

இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க

மலைமேல்தான் நின்றென் மனத்து ளிருந்தானை

நிலைபேர்க்க லாகாமை நிச்சித் திருந்தேனே. 10.4.4

 

3820

நிச்சித் திருந்தேனென் நெஞ்சம் கழியாமை

கைச்சக் கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன்

மெச்சப் படான்பிறர்க்கு மெய்போலும் பொய்வல்லன்

நச்சப் படும்நமக்கு நாகத் தணையானே. 10.4.5

 

3821

நாகத் தணையானை நாள்தோறும் ஞானத்தால்

ஆகத் தணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை

மாகத் திள மதியம் சேரும் சடையானை

பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே. 10.4.6

 

3822

பணிநெஞ்சே. நாளும் பரம பரம்பரனை

பிணியொன்றும் சாரா பிறவி கெடுத்தாளும்

மணிநின்ற சோதி மதுசூதன் என்னம்மான்

அணிநின்ற செம்பொன் அடலாழி யானே. 10.4.7

 

3823

ஆழியா னாழி யமரர்க்கும் அப்பாலான் ஊழியா

னூழி படைத்தான் நிரைமேய்த்தான்

பாழியந் தோளால் வரையெடுத்தான் பாதங்கள்

வாழியென் நெஞ்சே. மறவாது வாழ்கண்டாய். 10.4.8

 

3824

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே

விண்டே யொழிந்த வினையா யினவெல்லாம்

தொண்டேசெய் தென்றும் தொழுது வழியொழுக

பண்டே பரமன் பணித்த பணிவகையே. 10.4.9

 

3825

வகையால் மனமொன்றி மாதவனை நாளும்

புகையால் விளக்கால் புதுமலரால் நீரால்

திகைதோ றமரர்கள் சென்றிறைஞ்ச நின்ற

தகையான் சரணம் தமர்கடகோர் பற்றே. 10.4.10.

 

3826

பற்றென்று பற்றிப் பரம பரமபரனை

மற்றிண்டோள் மாலை வழுதி வளநாடன்

சொற்றொடையந் தாதியோ ராயிரத்து ளிப்பத்தும்

கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே. (2) 10.4.11

Leave a Reply