திருவாய்மொழி பத்தாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

10ஆம் பத்து 5ஆம் திருவாய்மொழி

பத்து வகை பக்தியும் பிரபத்தியும்

3827

கண்ணன் கழலிணை

நண்ணும் மனமுடையீர்

எண்ணும் திருநாமம்

திண்ணம் நாரணமே. (2) 10.5.1

 

3828

நாரணன் எம்மான்

பாரணங்காளன்

வாரணம் தொலைத்த

காரணன் தானே. 10.5.2

 

 

3829

தானே உலகெலாம்

தானே படைத்திடந்து

தானே உண்டுமிழ்ந்து

தானே யாள்வானே. 10.5.3

 

3830

ஆள்வான் ஆழிநீர்

கோள்வாய அரவணையான்

தாள்வாய் மலரிட்டு

நாள்வாய் நாடீரே. 10.5.4

 

3831

நாடீர் நாள்தோறும்

வாடா மலர்கொண்டு

பாடீர் அவன்நாமம்

வீடே பெறலாமே. 10.5.5

 

3832

மேயான் வேங்கடம்

காயா மலர்வண்ணன்

பேயார் முலையுண்ட

வாயான் மாதவனே. (2) 10.5.6

 

3833

மாதவன் என்றென்று

ஓத வல்லீரேல்

தீதொன்று மடையா

ஏதம் சாராவே. 10.5.7

 

3834

சாரா ஏதங்கள்

நீரார் முகில்வண்ணன்

பேர் ஆர் ஓதுவார்

ஆரார் அமரரே. 10.5.8

 

3835

அமரர்க்கு அரியானை

தமர்கட்கு எளியானை

அமரத் தொழுவார்கட்கு

அமரா வினைகளே. 10.5.9

 

3836

வினைவல் இருளென்னும்

முனைகள் வெருவிப்போம்

சுனை நன் மலரிட்டு

நினைமின் நெடியானே. 10.5.10.

 

3837

நெடியான் அருள் சூடும்

படியான் சடகோபன்

நொடி ஆயிரத்திப்பத்து

அடியார்க்கு அருள் பேறே. (2) 10.5.11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *