திருவாய்மொழி பத்தாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

10ஆம் பத்து 6ஆம் திருவாய்மொழி

3838

அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியான்

அருள்தருவான் அமைகின்றான் அதுநமது விதிவகையே

இருள்தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான்வேண்டேன்

மருளொழிநீ மடநெஞ்சே. வாட்டாற்றான் அடிவணங்கே. (2) 10.6.1

 

3839

வாட்டாற்றா னடிவணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான்

கேட்டாயே மடநெஞ்சே. கேசவனெம் பெருமானை

பாட்டாய பலபாடிப் பழவினைகள் பற்றறுத்து

நாட்டாரோ டியல்வொழிந்து நாரணனை நண்ணினமே. 10.6.2

 

3840

நண்ணினம் நாரணனை நாமங்கள் பலசொல்லி

மண்ணுலகில் வளம்மிக்க வாட்டாற்றான் வந்தின்று

விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே

எண்ணினவா றாகாவிக் கருமங்க ளென்னெஞ்சே. 10.6.3

 

3841

என்னெஞ்சத் துள்ளிருந்திங் கிருந்தமிழ்நூலிவைமொழிந்து

வன்னெஞ்சத் திரணியனை மார்விடந்த வாட்டாற்றான்

மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான்

நன்னெஞ்சே. நம்பெருமான் நமக்கருள்தான் செய்வானே. 10.6.4

 

3842

வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே

நானேறப் பெறுகின்றென் நரகத்தை நகுநெஞ்சே

தேனேறு மலர்த்துளவம் திகழ்பாதன் செழும்பறவை

தானேறித் திரிவான தாளிணையென் தலைமேலே. 10.6.5

 

3843

தலைமேல தாளிணைகள் தாமரைக்கண் என்னம்மான்

நிலைபேரான் என்நெஞ்சத் தெப்பொழுதும் எம்பெருமான்

மலைமாடத் தரவணைமேல் வாட்டாற்றான் மதமிக்க

கொலையானை மருப்பொசித்தான் குரைகழல்தள் குறுகினமே. 10.6.6

 

3844

குரைகழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான்

திரைகுழுவு கடல்புடைசூழ் தென்னாட்டுத் திலதமன்ன

வரைகுழுவும் மணிமாட வாட்டாற்றான் மலரடிமேல்

விரைகுழுவும் நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே. 10.6.7

 

3845

மெய்ந்நின்று கமழ்துளவ விரையேறு திருமுடியன்

கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருதுபுனல்

மைந்நின்ற வரைபோலும் திருவுருவ வாட்டாற்றாற்கு

எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழவதுவே? 10.6.8

 

3846

திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்

திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு

புகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம்கெடுத்தான்

இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே. 10.6.9

 

3847

பிரியாதாட் செய்யென்று பிறப்பறுத்தாள் அறக்கொண்டான்

அரியாகி இரணியனை ஆகங்கீண் டானன்று

பெரியார்க்காட் பட்டக்கால் பெறாதபயன் பெறுமாறு

வரிவாள்வாய் அரவணைமேல் வாட்டாற்றான் காட்டினனே. 10.6.10.

 

3848

காட்டித்தன் கனைகழல்கள் கடுநரகம் புகலொழித்த

வாட்டாற்றெம் பெருமானை வளங்குருகூர்ச் சடகோபன்

பாட்டாய தமிழ்மாலை யாயிரத்துள் இப்பத்தும்

கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே. (2) 10.6.11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *