பெரியாழ்வார் சரிதம்

பெரியாழ்வார்

அக்காலத்தே மதுரையைம்பதியைத் தலைநகராகக் கொண்டு, பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான் வல்லபதேவன் என்னும் அரசன். அவன் பாண்டியர் குலத்துக்கு எழில் விளக்குப் போன்றவன். கலைகள் பல கற்றுத் தேர்ந்தவன். எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கினான்.

 

ஒருநாள் இரவு அவன் மாறுவேடம் பூண்டு நகரச் சோதனை மேற்கொண்டான். ஒரு வீட்டின் திண்ணையில் வயதான அந்தணர் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தார். மாறுவேடத்திருந்த மன்னன், அவரை எழுப்பி, ஐயா நீங்கள் யார்? ஏன் இங்கே படுத்து உறங்குகிறீர் என்று வினவினான். அதற்கு அப்பெரியவர், அந்தணனான தாம் வடதேச யாத்திரை செய்துவிட்டு, கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடி வந்திருப்பதாகவும், ராம சேது தரிசனத்துக்காகச் செல்ல இருப்பதால், இரவு கழிப்பதற்காக இந்தத் திண்ணையில் உறங்குவதாகவும் கூறினார். பிறகு, தாம் பல புனிதத் தலங்களுக்கும் சென்று வந்த விஷயத்தைக் கூறி, ஒரு ஸ்லோகம் சொல்கிறேன், அதைக் கேளுங்கள் என்றபடி அதைச் சொல்லத் தொடங்கினார்.

வர்ஷார்த்தம் அஷ்டௌ ப்ரயதேத மாஸான்

நிஷார்த்தம் அர்த்தம் திவஸம் யதேத |

வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந

பரத்ர ஹேதோரிஹ ஜன்ம நாச ||

– மழைக்காலத்துக்கு வேண்டிய பொருள்களை மற்ற எட்டு மாத காலங்களில் சேகரிக்க வேண்டும். இரவுக்கு வேண்டியவைகளை பகலிலேயே தேடி வைத்துக் கொள்ள வேண்டும். முதுமைக்கு வேண்டியவைகளை இளமையிலேயே தேடி வைத்துக் கொள்ள வேண்டும். மறுமைக்கு வேண்டியவற்றை இம்மையிலேயே தேடிக்கொள்ள வேண்டும்…

இப்படி பொருள் படும்படி இந்த ஸ்லோகத்தைச் சொன்ன அம்மாத்திரத்தில் மன்னனின் மனத்தில் வருத்தம் உண்டாகியது. தாம் மறுமையாகிய பரலோக சுகானுபவத்துக்கு இதுவரை ஒன்றும் செய்யாமலேயே காலம் கழித்துவிட்டோ மே என்று மனம் வருந்தினான். பின்பு அந்தப் பெரியவரை வணங்கி, தமக்கு நல்லதோர் சிந்தனையைத் தந்தமைக்காக அவரை சில நாட்கள் தன்னுடன் இருந்து வழிநடத்துமாறு கோரினான். அப்பெரியவரும் தாம் அறிந்த நல்லனவற்றை அவனுக்கு உபதேசித்து, பின் சேது தரிசனத்துக்காகப் புறப்பட்டுச் சென்றார்.

வல்லபதேவனுக்கு தமக்கு மறுமையில் பரமானுபவம் கிடைக்க வேண்டுமே என்ற கவலை மனத்தை அறுத்தது. அப்போது அவனது புரோகிதரும், பரம வைணவருமான செல்வ நம்பிகள் என்னும் பெரியவர் அங்கு எழுந்தருளினார். அவரிடம் வல்லப தேவன் தன் மனக்கிலேசத்தைக் கூறி, மறுமையில் பேரின்பம் அடைய வழி என்ன? என்று வினவினான். செல்வ நம்பிகளும் ஓநாடு முழுவதும் பறை அறிவித்து, வித்வான்களைத் திரட்டி, வேத அர்த்தங்களைக் கொண்டு, பரம்பொருளைப் பற்றி ஒரு நிர்ணயம் செய்வித்து, அவ்வழியாலேயே பெறவேண்டும்ஔ என்று யோசனை கூறினார். அதன்படி அரசனும், பெரும் தனத்தை ஒரு துணியிலே கட்டி, அப்பொற்கிழியை சபை மண்டபத்தின் நடுவே ஒரு கம்பத்தில் கட்டி வைக்க ஏற்பாடு செய்தான். பிறகு வித்வான்களைத் திரட்டுவதற்காக, பரதத்துவ நிர்ணயம் செய்பவர்கள் அப்பொற்கிழியைப் பரிசாகப் பெறலாம் என்று நாடெங்கும் பறை அடித்து அறிவிக்கச் செய்தான்.

இந்தச் செய்தி வில்லிபுத்தூரையும் சேர்ந்தது. அப்போது, வடபெருங்கோயிலுடையான் விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றி, அவர் மூலம் உண்மைப் பொருளை உலகுக்கு உணர்த்த எண்ணம் கொண்டவனாய், ஓநீர் போய் பொற்கிழியை அறுத்துக் கொண்டு வாரும்ஔ என்று கட்டளையிட்டான். ஆனால் விஷ்ணுசித்தரோ, ஓஅது சகல சாத்திரங்களும் கற்ற பண்டிதர்கள் செய்யவேண்டியதன்றோ? நானோ அவ்வாறு சாத்திரம் முழுதும் கற்றவன் அல்லேன். உமக்கு நந்தவனக் கைங்கரியம் செய்வது மட்டுமே என் தொழிலாகக் கொண்டேன், ஆயின் எவ்வாறு நான் இப்பெரும் செயலைச் செய்யமுடியும்! சகலகலா வல்லவர்களான அந்த மாயாவாத பண்டிதர்கள் நிறைந்த சபையில் எப்படி நான் பரதத்துவ நிர்ணயம் செய்யப்போகிறேன்?ஔ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு வடபெருங்கோயிலுடையானும், ஓஅதைப்பற்றி உமக்கு என்ன கவலை? உம்மைக் கண்டு பரதத்துவ நிர்ணயம் செய்யப்போவது நாமேயன்றோ! நீர் அவசியம் மதுரைக்குச் செல்ல வேண்டும்!ஔ என்று ஆணையிட்டு மறைந்தான்.

விஷ்ணுசித்தரும் விடியற்காலையே எழுந்து, இதையே சிந்தித்தவராக மதுரைக்குச் செல்லத் தயாரானார். அப்போது வடபெருங்கோயிலுடையானின் கைங்கர்யபரர்கள், விஷ்ணுசித்தர் எழுந்தருள்வதற்காக, திருப்பல்லக்குடனும், திருச்சின்னம் முதலிய கோயில் மரியாதைகளுடனும் வந்து, தாங்களும் கூடல்நகருக்கு தங்களோடு செல்ல வேண்டுமாய் வடபெருங்கோயிலுடையான் கட்டளையிட்டிருப்பதாக அறிவித்தனர். விஷ்ணுசித்தரும் அவற்றை ஏற்று, கூடல்மாநகருக்குப் பயணமானார்.

இப்படி விஷ்ணுசித்தர் பாண்டியனின் சபைக்கு வரும் செய்தி மன்னனுக்குக் கிடைத்தது. அவனும் ஏற்கெனவே செல்வநம்பியின் மூலம் விஷ்ணுசித்தரின் பெருமைகளைக் கேட்டிருந்தான் ஆதலால், செல்வநம்பியோடு சேர்ந்து அவரை எதிர்கொண்டு அழைக்கச் சென்றான். விஷ்ணுசித்தரின் ஒளிபொருந்திய திருமுகம் கண்டு அவரை வணங்கி வரவேற்றான். என் பட்டர்பிரான் வந்தார் என்று கொண்டாடினான். ஆனால் அங்கிருந்த வேத சாத்திரங்களைக் கற்ற பண்டிதர்கள், எந்தவித வேதமும் கல்லாத இவரைக் கொண்டாடுவது தவறு என்று மறுத்துரைத்தனர். ஆனால் மன்னனோ அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. பின் செல்வநம்பிகள், விஷ்ணுசித்தரின் அடிபணிந்து, ஓவேதத்தின் விழுப்பொருளான பரதத்துவத்தை நிச்சயித்து அருளிச் செய்ய வேண்டும்ஔ என்று பிரார்த்தித்தார்.

விஷ்ணுசித்தரும் வடபெருங்கோயிலுடையான் அருளால், மடை திறந்த வெள்ளம் போல வேதத்தின் விழுப்பொருளை உரைக்கலானார். சர்வ ஞானமும் கைவரப்பெற்றவராக, வேத, இதிகாச, புராணாதிகளின் வாக்கியங்களைக் கொண்டு, ஓஇந்த உலகுக்குக் காரணமான வஸ்து எவனோ அவனே தியானத்துக்குரியவன்ஔ என்று அருளிச் செய்தார்.

எவனிடத்திலிருந்து அனைத்துப் பொருளும் உண்டாகின்றனவோ, எவனால் இவை யாவையும் நிலைபெற்றிருக்கின்றனவோ, முடிவில் எவனிடத்தில் இவையனைத்தும் லயமாகின்றனவோ அவனே பரப்பிரும்மம் என்றும்,

– எது, வாக்கினாலும் மனத்தினாலும் துதிக்கவும் அறியவும் அருமையாக இருக்குமோ, அந்த பிரம்மத்தை அறிந்து கொண்டவர்கள் யமனுக்கும் அஞ்சார் என்றும்,

– சிலந்திப் பூச்சியானது எவ்வாறு நூலை உருவாக்கிக்கொண்டு, உணவாகிற பூச்சிகளைப் பிடித்துக் கொள்ளுமோ அவ்வாறே சகல உயிர்களையும், பொருள்களையும் அந்தப் பரன் படைத்தான் என்றும்,

– அந்தப் பரன் விஷ்ணு என்னும் பெயருடையவனாய், சாத்விகனாய், அனைவராலும் தொழப்படுகின்றவனாய் இருக்கிறான் என்றும்,

– அவனுடைய நாபிக் கமலத்திலிருந்து பிரம்மா பிறந்தான் என்றும், அந்தப் பிரம்மனுடைய புருவங்களின் மத்தியிலிருந்து ருத்ரன் பிறந்தான் என்றும்,

– ஓம்கார வடிவினனான அந்த விஷ்ணு ஒருவனே என்றும், வேத வசனங்களுக்கும் நாயகன் அவனே என்றும்,

– ஜீவர்கள் அந்த ஓம்காரத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே நலன் அடைகிறார்கள் என்றும்,

– அப்படிப்பட்ட ஓம்காரத்தில் முதல் ஸ்வரமான அகாரம் அந்தப் பரமனையே குறிப்பிடுகிறது என்றும்,

– அந்த நாராயணன் ஒருவனே பாபங்களைக் களைபவன் என்றும்,

– ஸ்ரீமந் நாராயணனிடத்திலிருந்து பிரம்மா, ருத்ரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும் பிறந்தார்கள் என்றும்,

– நாராயணனே பர ப்ரும்மம் என்றும்,

– தன்னுடைய நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவும், அவனுடைய புருவங்களின் இடையிலிருந்து ருத்ரனும், அவனிடத்திலிருந்து ஆறுமுகனும் பிறந்தான் என்று பகவானே கீதையில் அருளிச் செய்திருக்கிறார் என்றும்,

– பகவான் வியாசரும், எந்தக் காலங்களிலும் நாராயணனுக்கு மிஞ்சிய பர தெய்வமில்லை என்று வேதங்களும், புராணங்களும் சத்ய பூர்வமாகச் சொல்லி இருப்பதை ரிஷிகளாகிய உங்கள் மத்தியில் பிரமாண பூர்வமாகச் சொல்ல விழைகிறேன் என்று கையை மேலே உயர்த்தி சத்தியம் செய்து, வேதங்களுக்கு மிஞ்சின பரதெய்வமுமில்லை என்று சொல்லியிருக்கிறார் என்றும்,

– இவ்வாறு சமஸ்த தேவர்களில் நாராயணன் ஒருவனே பரனாயிருப்பது போல, சர்வ மந்திரங்களில் அஷ்டாட்சரம் ஒன்றே பரதத்வ நிர்ணயம் செய்யவும் உயர்ந்த மந்திரமாக இருக்கிறது என்றும் பெரியாழ்வார் அருளிச் செய்தார்.

பல்லாயிரக் கணக்கான வேத வாக்கியங்களைக் கொண்டும், ஸ்ம்ருதி, இதிகாசம், புராணம் முதலான பிரமாணங்களைக் கொண்டும் அனைத்து வித்வான்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் ஸ்ரீமந் நாராயணனே பரம்பொருள் என்று நிர்ணயம் செய்தார்.

உடனே, விஷ்ணுசித்தரின் வெற்றி, பரம்பொருளாலும் இசையப் பெற்றது என்பதைச் சொல்லும்படியாக, பொற்கிழி கட்டியிருந்த கம்பம், பொற்கிழி இவர் அருகே வரும்படி வளையலாயிற்று. விஷ்ணுசித்தரும் பொற்கிழியை அறுத்துக் கொண்டார். வேந்தனும், செல்வநம்பியும், ஏனையோரும் அவரை வணங்கிப் போற்றினர்.

பின்னர் அரசன் கட்டளையினால் ஏவலர்கள், அந்நகர மாடங்கள் தோறும் கொடிகளை ஏற்றி, தோரணக் கம்பங்கள் நாட்டி, மலர் மாலைகள் கட்டித் தொங்கவிட்டனர்.

வல்லபதேவனாகிய பாண்டிய மன்னன் விஷ்ணுசித்தருக்கு பட்டர்பிரான் என்னும் பட்டம் வழங்கி, பட்டத்து யானையின்மீது அவரை ஏற்றி, நகர் உலா வரச் செய்தான்…

 

Leave a Reply