பெரியாழ்வார் சரிதம்

பெரியாழ்வார்

விஷ்ணுசித்தர் உலா வரும் வீதிகள் யாவும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்த பட்டர்பிரான் வந்தார் என்னும் வாழ்த்தொலிகள் முழங்க, விட்டுசித்தர் வீதிகள்தோறும் உலாவந்த விழா சீரிய முறையில் நடைபெற்றது.

 

அங்ஙனம் உலாவரும் காலத்தே, பரமபதத்தின் தலைவனாக விளங்கும் திருமால், அயன், அரன், இந்திரன் முதலியோர் புடைசூழ கருடன் மீதேறி வந்து, விஷ்ணுசித்தருக்கும் அரசனுக்கும் காட்சியளித்தார்.

முதலும் ஈறும் இல்லாத முதற்பொருள் ஆகியவரும், அமரர்கள் அதிபதியும், பரமபதத்தில் சித்தரும் முத்தரும் சேவிக்க விளங்கும் பரம்பொருள் ஆனவரும் பீதாம்பரதாரியுமான பரந்தாமனது எழிலைக் கண்ணுற்ற விஷ்ணுசித்தர், அவனுடைய எழிலுக்கு கண்பட்டுவிடுமோ என்று கவலையுற்றார்.

அதனால் அவன் எழில் நிலை பெற்றிருக்கும் வகையில் பல்லாண்டு பாடி வாழ்த்தத் தொடங்கினார். அவர் அமர்ந்திருந்த யானையின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகளையே தாளமாக்கி, பல்லாண்டு பாடினார்.

(எப்படி ஒரு குழந்தைக்கு கண்பட்டுவிடுமோ என்று தாயார் அஞ்சுவாளோ அப்படியே, பெருமானையும் எண்ணிய ஆழ்வார்தான் பின்னாளில் தமிழிலக்கியத்தின் முதல் பிள்ளைத்தமிழை பெற்றவர் நிலையிலிருந்து, கண்ணனைக் குழந்தையாக்கிப் பாடினார்…) பிறகு அவர் அரசனிடமும் செல்வநம்பியிடமும் விடைபெற்றுக் கொண்டு, வில்லிபுத்தூரை அடைந்தார். விட்டுசித்தர் கிழியறுத்துக் கொணர்ந்த பொன்னைக் கொண்டு வடபெருங்கோயிலைப் புதுப்பித்து அதனை அங்குள்ள திருமாலுக்கே ஆக்கினார்.

விட்டுச்சித்தர் திருமாலைப் பல்லாண்டு பாடி வாழ்த்தினமையால், பெரியாழ்வார் என்று இவரை வைணவப் பெரியார்கள் கூறலாயினர். இவர், கண்ணனது திருவவதாரச் சிறப்பினை நாற்பத்து நான்கு திருமொழிகளாகப் பாடினார். இவற்றின் மொத்தப் பாசுரங்கள் நானூற்று அறுபத்தொன்று. திருப் பல்லாண்டின் பாசுரங்கள் பன்னிரண்டு. ஆக, பெரியாழ்வாரால் பாடப்பட்ட பாசுரங்களில் எண்ணிக்கை நானூற்று எழுபத்து மூன்று ஆகும். இவருடைய பாசுரங்கள் பெரியாழ்வார் திருமொழி என்று, திவ்விய பிரபந்தத்தில் முதலில் அமைக்கப்பட்டுள்ளது.

பெற்றோரால் விட்டுசித்தர் என்று வழங்கப்பட்ட இவருக்கு வழங்கும் வேறு பெயர்கள்: 1. பெரியாழ்வார், 2. பட்டர்பிரான், 3. ஸ்ரீவில்லிப்புத்தூர்கோன், 4. கிழியறுத்தான், 5. புதுவைக்கோன்…

பெரியாழ்வாரின் பாடல்கள் பெரும்பாலானவை மிக எளிதாகப் புரியக் கூடியவை. அன்பும், பாசமும், பரிவும், கவிதைத் திறமும், காதலும் கொண்டு கண்ணனின் குழந்தைப் பருவத்தை அனுபவித்துப் பாடியவை. பெரியாழ்வார் அனுபவித்து அருளிய பாசுரங்களின் சுவையை இங்கே நாம் கொஞ்சம் அனுபவிப்போம்.

பெரியாழ்வாரின் திருமொழிக்குத் தனியனாக பாண்டிய பட்டர் அருளியவை இந்த வெண்பாக்கள்.

மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒருகால்

சொன்னார் கழற்கமலம் சூடினோம் – முன்னாள்

கிழியறுத்தான் என்றுரைத்தோம், கீழ்மையினிற் சேரும்

வழியறுத்தோம் நெஞ்சமே வந்து

பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று

ஈண்டிய சங்கம் எடுத்தூத – வேண்டிய

வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்

பாதங்கள் யாம்உடைய பற்று.

முன்பு ஒரு நாள் வேதங்களின் விழுப்பொருள் கூறி, பரம்பொருள் யாரென பாண்டியர்க்கும் சபைக்கும் இந்த உலகுக்கும் உரைத்து, விரைந்து பொற்கிழியினை அறுத்த அந்தப் பெரியாழ்வார் என்றும், வில்லிபுத்தூர் என்றும் இந்தத் திருநாமங்களைச் சொல்வதனாலே கீழ்மையான நரகத்தை நாம் அடையும் வழியை, அந்தப் பாவத்தை நாம் அறுத்து விட்டோ மாவோம்.

 

Leave a Reply