பெரியாழ்வார் சரிதம்

பெரியாழ்வார்

இப்படி பன்னிரண்டு பாசுரங்களால் பெரியாழ்வார் பல்லாண்டு பாடுகிறார். அதன் பிறகு வருபவை, தமிழின் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகப் போற்றப்படும் பிள்ளைத் தமிழின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் பெரியாழ்வார் திருமொழி பாசுரங்கள். இங்கே பாட்டுடைத் தலைவனாக கண்ணனைக் கொண்டு, பிள்ளைத் தமிழுக்கே உரிய இலக்கணங்கள் அமையப் பெற்று பாடியுள்ளார். ஆயின், பெரியாழ்வாரின் திருமொழிக்குப் பிறகே பிள்ளைத் தமிழ் வகையறா தமிழில் வந்தது என்பர்.

 

ஆழ்வாரின் இந்தப் பிள்ளைத் தமிழில் கண்ணன் பிறந்தது முதற்கொண்டு நிகழ்பவை அழகிய பாசுரங்களாக வடிவெடுத்துள்ளன. முதலில் இருப்பவை, கண்ணன் திரு அவதாரச் சிறப்பை உணர்த்தும் வண்ணமாடங்கள் பாசுரம். கண்ணன் பிறந்த வைபவத்தை நந்தகோபன் மாளிகையில் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்கிற மகிழ்சியை இந்தப் பாசுரத்தில் தெரிவிக்கிறார்…

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்

நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்

பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று

ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே. (2).

இங்கே கண்ணன் பிறந்ததால் உண்டான ஆய்ப்பாடியின் மகிழ்ச்சி வெளிப்படுகிறது. ஆய்ப்பாடி மக்கள் மகிழ்ச்சியால் ஓடுவார்கள், பின் வழுக்கி விழுவார்கள், ஆர்ப்பரிப்பார்கள், நம் தலைவன் கண்ணன் எங்கே என்று தேடுவார்கள், பறைகள் கொட்ட நின்று ஆடுவார்கள்… இப்படியாகக் கொண்டாட்டம் மிகுந்து ஆய்ப்பாடி விளங்கியது.

அடுத்து கண்ணனின் அடி முதல் முடி வரையான திருமேனி அழகு ஆழ்வாரால் அனுபவிக்கப்படுகிறது – சீதக் கடலுள் இருபது பாசுரங்கள் மூலம்! அதன் பின்னே குழந்தைக்கு தாலாட்டு. குழந்தையைத் துயில் கொள்ள வைத்தற்காக பெரியாழ்வார் பாடுபவை. அதற்கேற்ப ராகத்தோடு அழகுற அமையப் பெற்ற பாசுரங்கள். தாலப் பருவம் – கண்ணனைத் தொட்டிலிட்டுப் பாடுவது …

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி

ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்

பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்

மாணிக் குறளனே தாலேலோ

வையம் அளந்தானே. தாலேலோ…

– என்று கண்ணனுக்கு மிக உயர்ந்த அணிகளை அணிவித்து, தாலாட்டுப் பாடி உறங்க வைக்கும் வகையிலான பாசுரங்கள். பிறகு அம்புலிப் பருவம். இங்கே பெரியாழ்வார் தானே கண்ணனை வளர்த்தெடுக்கும் யசோதையாக மாறிப் போனார். கண்ணனை யசோதையாகிய தன் இடுப்பில் வைத்துக்கொள்கிறார். அப்போது, பேசும் பொற்சித்திரமாக வளர்ந்து விட்ட குழந்தை கண்ணன் வானத்து அம்புலியைக் கைநீட்டி அழைக்கிறான். அந்த மழலைச் சொல்லில் மனம் பறிகொடுத்து, அன்னை யசோதையாகிய பெரியாழ்வார் சந்திரனை வருமாறு அழைக்கிறார்…

சக்கரக் கையன் தடங் கண்ணால் மலர விழித்து

ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண்

தக்கது அறிதியேல் சந்திரா. சலம் செய்யாதே

மக்கட் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய்.

– என்று, சக்கரம் ஏந்திய கை கொண்ட கண்ணன் தன் அகன்ற விழிகளால் மலர விழித்து உன்னையே பார்க்கிறான். என் ஒக்கலை மேலிருந்து (இடுப்பில் அமர்ந்து கொண்டு – ஒக்கலை என்ற இந்தச் சொல்லை, இடுப்பு என்னும் பொருளில் எங்கள் நெல்லை வட்டாரச் சொல்லாக இப்போதும் கேட்டு வருகிறேன். நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ் பாடிய புலவர், வாராதிருந்தால் உன் வடிவேல் விழிக்கு மை எழுதேன்; தேரார் வீதி வளம் காட்டேன்… என்ற பாடலிலும், ஒக்கலை என்ற இந்தச் சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்.) உன்னைச் சுட்டிக்காட்டும் இக்குழந்தையின் விருப்பத்துக்காக நீ வா…. நீ என்ன பிள்ளை பெறாத மலடனா? இல்லையே! குழந்தையின் ஆசைதான் உனக்குத் தெரியுமே! தக்கது அறிந்தாயாகில் வா என்று அழைக்கிறார்.

அடுத்து செங்கீரைப் பருவம். கண்ணன் தன் தலையை நிமிர்த்தி, முகத்தை அங்கும் இங்கும் அசைத்து ஆடும் விளையாட்டு. கண்ணனின் சிறப்புகளைச் சொல்லி, கண்ணா என் மனம் மகிழ, உன் காதுக் குண்டலங்கள் அசைந்து ஆடும் வண்ணம் உன் திருமுகம் ஆட்டு. அந்த அழகினை அனுபவிக்க வேண்டும்.

கைகொட்டி விளையாடும் சப்பாணிப் பருவம் அடுத்து வருவது. இப்போது குழந்தைக் கண்ணன் சற்று வளர்ந்து முகம் பார்த்து சிரிக்கத் தொடங்கியிருக்கிறான். அவனிடம், மாணிக்கக் கிண்கிணி ஒலிக்க உன் கைகளைக் கொட்டி முகம் சிரித்து விளையாடும் அந்த விளையாட்டை நான் காண வேண்டும் என்று வேண்டுகிறார்.

இப்போது தளர் நடைப் பருவம். கண்ணன் தளர்நடையிட்டு வளரும் பருவத்தில் இருக்கிறான். கலகலவென்று சிரித்து மகிழ்ந்தபடி, என் முன்னே நின்று முத்தம் கொடுக்கும் கண்ணன் வாயிலிருந்து உமிழ்நீர் ஓடி வழிகிறது. திருமகள் மார்பன் மேக வண்ணனைப் பிள்ளையாகப் பெற்ற எனக்கு தன் வாயமுதம் தந்து என்னைத் தழையச் செய்கிறான். தன்னை எதிர்க்கும் பகைவர்களுடைய தலைகள் இவன் தளர் நடவானோ? என்று இந்தப் பருவத்தேயும், அவன் பெருமை சொல்கிறார்.

தளர்நடையிட்டு வந்த கண்ணன் தன் தளிர் பாதங்கள் மண்ணில் பதிய, கீழே விழுந்துவிடாதபடி வேகமாக ஓடி வருகிறான். இங்கே யசோதைத் தாய் அமர்ந்திருக்கிறாள். அவள் மேல் ஓடி வந்து விழுந்து அணைத்துக் கொள்ள வேண்டுமாகப் பிரார்த்திக்கிறார், அச்சோப் பருவத்தில்!

முன்னே ஓடிவந்து அணைத்துக் கொண்ட கண்ணன், இப்போது பின்னேயும் ஓடி விளையாடும் அளவுக்கு வளர்ந்து விட்டான். அவன் யசோதையின் முகம் திரும்பிப் பார்க்கும் முன்னரே குடுகுடுவென ஓடிச் சென்று பின்னே மறைகிறான். பின், தாயின் பின்புறத்தே வந்து, அவளைக் கட்டிக் கொள்கிறான். இது புறம் புல்கல் பருவத்தில் கண்ணனின் விளையாட்டு.

இப்படி புறம் வந்து நின்ற கண்ணன் சும்மாயிருந்தானோ! தன் தளிர்க்கரங்களால், ம்மா! யாரென்று சொல்லேன் என்று அன்னையின் கண் பொத்தி, பின் தன் கண்பொத்தி பூச்சி காட்டி விளையாடுதல் அடுத்த பருவம்.

குழந்தை அங்குமிங்கும் ஓடி, கண்ணைப் பொத்தி விளையாடிக் கொண்டே இருக்கிறான். இப்படி விளையாடும் அவனுக்கு பசிக்குமே. அன்னை தாய்ப்பால் உண்ண அந்தக் குழந்தைக் கண்ணனை அழைக்கிறாள். திரு உடைய வாய் மடுத்துத் திளைத்து உதைத்துப் பருகிடாயே என்றும், முத்து அனைய முறுவல் செய்து மூக்கு உறிஞ்சி முலை உணாயே என்றும் வேண்டிக்கொள்கிறாள் – தாய்ப்பால் அருந்த அழைக்கும் இந்தப் பருவத்தில்!

அடுத்து, காது குத்துதல். கேசவ நம்பீ, உன்னைக் காது குத்த ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்; அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்… – பெரியாழ்வார் அடைக்காய் என்றது வெற்றிலை பாக்கு. அதைத் தயாராக வைத்திருக்கிறேன். காதுகுத்த வேண்டும் அருகே வா என்று அழைக்கிறார். இந்தப் பாசுரங்களில் கண்ணனின் பன்னிரண்டு திருநாமங்களையும் ஒவ்வொரு பாடலிலும் சொல்லி மகிழ்கிறார்.

குழந்தையை நீராட அழைக்கும் நீராடல் பருவம் அடுத்தது. வெண்ணெய் அளைந்த குணுங்கும் என்ற இந்தப் பாசுரங்களில், குழந்தையின் மனநிலையை எடுத்துக்காட்டும் சொற்கள் நிறைய உண்டு. உதாரணத்துக்கு ஒன்று.

கறந்த நற்பாலும் தயிரும் கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்

பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன் எம்பிரானே.

சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே

மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சனமாட நீ வாராய்.

– என்று, கண்ணா, நீ பிறப்பதற்கு முன்புவரை கறந்து வைத்த பாலும் தயிரும் உறியில் அப்படியே இருக்கும். ஆனால் நீ பிறந்த பின் நான் அதை முழுதாக எடுத்து உபயோகித்ததில்லை. ஏனென்றால் அதை நீயே பதம் பார்த்துவிடுகிறாய். ஆனால் இதை நான் பிறர் முன் வெளியிட்டால் உன் மதிப்பு வெளியாரிடத்தே குறைந்துபோகும். இந்தப் பழிச் சொல் கேட்டால் உன் மனம் வேதனைப்படும். நான் யாரிடமாவது பேசிக்கொண்டிருந்தால்தானே இப்படிச் சொல்லப் போகிறேன். நான் மறந்தும்கூட யாரிடமும் பேசமாட்டேன், வருத்தமுறாமல் நீ நீராட வா என்று அழைக்கிறாள் அன்னை யசோதை.

கண்ணன் கேசத்தை வாருவதற்காக காக்கையை வா என்று அழைப்பதும், கன்றுகளின் பின்னே மேய்க்கப் போகும் கண்ணனுக்கு கோல் கொண்டு வா என்று காக்கையைக்கேட்டுக் கொள்வதும் தொடர்ந்து வரும் பாசுரங்களில்…

அடுத்து வாசமுள்ள பூக்களைச் சூட்டிக்கொண்டு மலர் மணம் வீசும் மேனியோடு வலம் வர அவனுக்கு விதவிதமான பூக்களைச் சூட அழைக்கிறார் யசோதை. ஆனிரை மேய்க்க நீ போதி பாசுரங்களில். இங்கே, ஆழ்வாரின் பாசுரங்களில் உவமைகள் பெருக்கெடுத்து வருகின்றன. கருவுடை மேகங்கள் கண்டால், உன் கண்ணைக் கண்டது போல் இருக்கும் என்பது அவற்றில் ஒன்று. இந்தப் பாசுரங்களில் வகைவகையான பூக்களைச் சுட்டிக்காட்டுகிறார், நந்தவனக் கைங்கர்யம் செய்து வந்த பெரியாழ்வார்.

கண்ணன் அழகினை ஊரார் எல்லாம் கண்டு கண் எச்சில் பட்டுவிட்டது; அதாவது கண்திருஷ்டி பட்டுவிட்டது. மேலும் பலரோடு அவன் சேர்ந்து விளையாடுவதால், அவர்கள் தீமைகள் அவனுக்கும் உண்டாகும். அதனால் திருஷ்டி சுற்றிப்போட (நல்ல தமிழில் சொன்னால், திருவந்திக் காப்பிட) கண்ணனை அழைக்கிறாள்.

அதன் பின் வரும் கண்ணன் பிள்ளை விளையாட்டை முறையிடுதல் என்ற இந்தப் பாசுரங்களில் கண்ணனின் பால லீலைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. கண்ணனின் குறும்பு விளையாட்டைத் தாங்கவொண்ணாத ஆய்ச்சிமார் எல்லோரும், தாய் யசோதையிடம் கண்ணனின் குறும்புகளைச் சொல்லி முறையிடுகிறார்கள். ஆய்ச்சிகள், கண்ணனின் தீம்புகளைக் கூறிக்கொண்டு யசோதையிடம் வருகிறார்கள். அவர்களுக்கு சமாதானம் சொன்ன அன்னை, அடுத்து அவனுக்கு முலைப் பால் கொடுக்க அஞ்சுகிறாள். அது, அவன் குழந்தையல்ல, தெய்வம் என்று அறிந்ததால் ஏற்பட்ட ஞானத்தால்.

கண்ணன் வளர்ந்துவிட்டான். அவனுக்கு கன்றினைக் காத்துவரும் தொழிலைப் பணிக்கிறாள் யசோதை. பின் அவனை அதற்கு அனுப்பியதற்காக வருந்துகிறாள்… அவனுக்கு என்ன துன்பம் நேருமோ என்று அஞ்சுகிறாள். ஆனால் மாலையில் அவன் கன்று மேய்த்து புண்சிரிப்புடன் வருவது கண்டு மனமகிழ்வு கொள்கிறாள். இப்படி கன்று மேய்த்து வரும் கண்ணன் அழகினைக் கண்டு கன்னியர் காமுறுகிறார்கள். – இவை தொடர்ந்து வரும் பாசுரங்களில் அனுபவிக்கப்படுகிறது.

கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்ததும், அவன் புல்லாங்குழல் ஊதுவதும் அதன் சிறப்பும் அதன்பின் வரும் பாசுரங்களில் பேசப்படுகிறது. இப்படி பெரியாழ்வாரால் பிள்ளைத் தமிழ் இலக்கியம் முதலில் வித்தூன்றியது.

தொடர்ந்து வரும் பாசுரங்களில் பெரியாழ்வார் தன்னை கண்ணனின் தாயான யசோதை நிலையிலிருந்து மாறி, கண்ணனின் மாமியார் நிலைக்குச் சென்றுவிடுகிறார். தன் மகள் கண்ணனின் நினைவாகவே இருப்பதையும், அவளின் இளமை கண்டு இரங்குவதையும், தொடர்ந்து ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று எம்பெருமானகளைப் பாடுவதாகவும் பாசுரங்கள் அமையப் பெற்றுள்ளன.

பெரியாழ்வார் சமூகத்துக்குச் சொல்லும் அறவுரைகளாக சில உள்ளன. அவற்றில் ஒன்று – எம்பெருமானின் பெயர்களையே குழந்தைகளுக்குச் சூட்டுங்கள் என்பது. அவற்றில் ஒரு பாசுரம்…

நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால்

நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுங்கிப் போம்

செம்பெருந் தாமரைக் கண்ணன் பேர் இட்டு அழைத்தக்கால்

நம்பிகாள்! நாரணன் தன் அன்னை நரகம் புகாள்

– என்பது. விளக்கமே தேவைப்படாததும் இந்த நூற்றாண்டிலும் நம்மால் புரிந்து கொள்ளக்கூடியதுமான தமிழ் இது. அதுதான் பெரியாழ்வார் பாசுரங்களின் பலம். சீர் இளமைத் தமிழின் சிறப்பு என்றும் சொல்வோமே!

பெரியாழ்வார் வாழி திருநாமம்

நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே

நானூற்று அறுபத்து ஒன்றும் நமக்கு உரைத்தான் வாழியே

சொல்லரிய வானிதனில் சோதிவந்தான் வாழியே

தொடை சூடிக் கொடுத்தாளைத் தொழுந்தமப்பன் வாழியே

செல்வ நம்பி தன்னைப் போல் சிறப்புற்றான் வாழியே

சென்று கிழியறுத்து மால் தெய்வம் என்றான் வாழியே

வில்லிபுத்தூர் நகரத்தை விளங்க வைத்தான் வாழியே

வேதியர் கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே{jcomments on}

 

 

Leave a Reply