மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார்

2372:
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,
வெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி – கண்ணிக்
கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்,
வயிற்றினோ டாற்றா மகன். 91

2373:
மகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன்,
மகனா மவன்மகன்றன் காதல் – மகனை
சிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலே
நிறைசெய்தென் நெஞ்சே. நினை. 92

2374:
நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால்,
அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல், – கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை,
உள்ளத்தே வைநெஞ்சே. உய்த்து. 93

2375:
உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி,
வைத்தவனை நாடி வலைப்படுத்தேன், – மெத்தெனவே
நின்றா னிருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து,
பொன்றாமை மாயன் புகுந்து. 94

2376:
புகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய்
இகழ்ந்த இரணியன தாகம், சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் னெஞ்சமே. வாழ்த்து. 95

2377:
வாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே, – கேழ்த்த
அடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன்,
அடித்தா மரையாம் அலர். 96

2378:
அலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய,
மலரெடுத்த மாமேனி மாயன், – அலரெடுத்த
வண்ணத்தான் மாமலரான் வார்சடையா னென்றிவர்கட்
கெண்ணத்தா னாமோ இமை? 97

2379:
இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்,
அமஞ்சூழ்ந் தறவிளங்கித் தோன்றும், – நமஞ்சூழ்
நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்,
துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு. 98

2380:
தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்,
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, – குட்டத்துக்
கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு. (2) 99

2381:
சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்
தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், – காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,
தேனமரும் பூமேல் திரு. (2) 100

பேயாழ்வார் திருவடிகளே சரணம்

 

Leave a Reply