மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார்

2332:
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்,
அவனே யணிமருதம் சாய்த்தான், – அவனே
கலங்காப் பொருநகரம் காட்டுவான் கண்டீர்,
இலங்கா புரமெரித்தான் எய்து. 51

2333:
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்,
எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய், – எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம்கைக் கொண்டான் முயன்று. 52

2334:
முயன்று தொழுநெஞ்சே. மூரிநீர் வேலை,
இயன்றமரத் தாலிலையின் மேலால், – பயின்றங்கோர்
மண்ணலங்கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்,
தண்ணலங்கல் மாலையான் தாள். 53

2335:
தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி,
கீளா மருதிடைபோய்க் கேழலாய், – மீளாது
மண்ணகலம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு,
பெண்ணகலம் காதல் பெரிது. 54

2336:
பெரிய வரைமார்வில் பேராரம் பூண்டு,
கரிய முகிலிடைமின் போல, – தெரியுங்கால்
பாணொடுங்க வண்டறையும் பங்கயமே, மற்றவன்றன்
நீணெடுங்கண் காட்டும் நிறம். 55

2337:
நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று,
இறையுருவம் யாமறியோ மெண்ணில், – நிறைவுடைய
நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே,
பூமங்கை கேள்வன் பொலிவு? 56

2338:
பொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,
மலிந்து திருவிருந்த மார்வன், – பொலிந்து
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே,
தெருடன்மேல் கண்டாய் தெளி. 57

2339:
தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி,
அளிந்த கடுவனையே நோக்கி, – விளங்கிய
வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே, மேலொருநாள்
மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு. 58

2340:
வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய்,
தாழும் அருவிபோல் தார்கிடப்ப, – சூழும்
திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள்
பெருமான் அடிசேரப் பெற்று. 59

2341:
பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம்,
முற்றக்காத் தூடுபோ யுண்டுதைத்து, – கற்றுக்
குணிலை விளங்கனிக்குக் கொண்டெறிந்தான், வெற்றிப்
பணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு. 60

Leave a Reply