2ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

2ஆம் பத்து 7ஆம் திருமொழி

1108

திவளும்வெண் மதிபோல் திருமுகத் தரிவை

செழுங்கட லமுதினிற் பிறந்த

அவளும்,நின் னாகத் திருப்பது மறிந்தும்

ஆகிலு மாசைவி டாளால்,

குவளையங் கண்ணி கொல்லியம் பாவை

சொல்லுநின் தாள்நயந் திருந்த

இவளை,உன் மனத்தா லென்னினைந் திருந்தாய்

இடவெந்தை யெந்தை பிரானே. (2) 2.7.1

 

1109

துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள்

துணைமுலை சாந்துகொண் டணியாள்,

குளம்படு குவளைக் கண்ணிணை யெழுதாள்

கோலநன் மலர்க்குழற் கணியாள்,

வளம்படு முந்நீர் வையமுன் னளந்த,

மாலென்னும் மாலின மொழியாள்,

இளம்படி யிவளுக் கென்னினைந் திருந்தாய்

இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.2

 

1110

சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்

தடமுலைக் கணியிலும் தழலாம்,

போந்தவெண் திங்கள் கதிர்சுட மெலியும்

பொருகடல் புலம்பிலும் புலம்பும்,

மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம்

வளைகளும் இறைநில்லா, என்தன்

ஏந்திழை யிவளுக் கென்னினைந் திருந்தாய்

இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.3

 

1111

ஊழியில் பெரிதால் நாழிகை. என்னும்

ஒண்சுடர் துயின்றதால் என்னும்,

ஆழியும் புலம்பும். அன்றிலு முறங்கா

தென்றலும் தீயினிற் கொடிதாம்,

தோழியோ. என்னும் துணைமுலை யரக்கும்

சொல்லுமி னென்செய்கேன் என்னும்,

ஏழையென் பொன்னுக் கென்னினைந் திருந்தாய்

இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.4

 

1112

ஓதிலும் உன்பே ரன்றிமற் றோதாள்

உருகும்நின் திருவுரு நினைந்து,

காதன்மை பெரிது கையற வுடையள்

கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்,

பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது

தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்,

ஏதலர் முன்னா என்னினைந் திருந்தாய்

இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.5

 

1113

தன்குடிக் கேதும் தக்கவா நினையாள்

தடங்கடல் நுடங்கெயி லிலங்கை,

வன்குடி மடங்க வாளமர் தொலைத்த

வார்த்தைகேட் டின்புறும் மயங்கும்,

மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி

மென்முலை பொன்பயந் திருந்த,

என்கொடி யிவளுக் கென்னினைந் திருந்தாய்

இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.6

 

1114

உளங்கனிந் திருக்கும் உன்னையே பிதற்றும்

உனக்கன்றி யெனக்கன்பொன் றிலளால்,

வளங்கனி பொழில்சூழ் மாலிருஞ் சோலை

மாயனே. என்றுவாய் வெருவும்,

களங்கனி முறுவல் காரிகை பெரிது

கவலையோ டவலம்சேர்ந் திருந்த,

இளங்கனி யிவளுக் கென்னினைந் திருந்தாய்

இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.7

 

1115

அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற்

கழியுமா லென்னுள்ளம். என்னும்,

புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்

போதுமோ நீர்மலைக் கெ ன்னும்,

குலங்கெழு கொல்லி கோமள வல்லிக்

கொடியிடை நெடுமழைக் கண்ணி,

இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய்

இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.8

 

1116

பொன்குலாம் பயலை பூத்தன மெந்தோள்

பொருகயல் கண்துயில் மறந்தாள்,

அன்பினா லுன்மே லாதரம் பெரிது இவ்வ

ணங்கினுக் குற்றநோ யறியேன்,

மின்குலா மருங்குல் சுருங்கமேல் நெருங்கி

வீங்கிய வனமுலை யாளுக்கு,

என்கொலாம் குறிப்பி லென்னினைந் திருந்தாய்

இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.9

 

1117

அன்னமும் மீனும் ஆமையும் அரியும்

ஆயஎம் மாயனே. அருளாய்,

என்னுமின் தொண்டர்க் கின்னருள் புரியும்

இடவெந்தை யெந்தை பிரானை,

மன்னுமா மாட மங்கையர் தலைவன்

மானவேல் கலியன்வா யொலிகள்,

பன்னிய பனுவல் பாடுவார் நாளும்

பழவினை பற்றறுப் பாரே. (2) 2.7.10

Leave a Reply