3 ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் அருளிச் செய்த

பெரிய திருமொழி

3ஆம் பத்து 1ஆம் திருமொழி

1148

இருந்தண் மாநில மேனம தாய்வளை

மருப்பினி லகத்தொடுக்கி,

கருந்தண் மாகடல் கண்டுயின் றவனிடம்

கமலநன் மலர்த்தேறல்

அருந்தி, இன்னிசை முரன்றெழும் அளிகுலம்

பொதுளியம் பொழிலூடே,

செருந்தி நாண்மலர் சென்றணைந் துழிதரு

திருவயிந் திரபுரமே. (2) 3.1.1

 

1149

மின்னு மாழியங் கையவன் செய்யவள்

உறைதரு திருமார்பன்,

பன்னு நான்மறைப் பலபொரு ளாகிய

பரனிடம் வரைச்சாரல்,

பின்னு மாதவிப் பந்தலில் பெடைவரப்

பிணியவிழ் கமலத்து,

தென்ன வென்றுவண் டின்னிசை முரல்தரு

திருவயிந் திரபுரமே. 3.1.2

 

1150

வைய மேழுமுண் டாலிலை வைகிய

மாயவன், அடியவர்க்கு

மெய்ய னாகிய தெய்வநா யகனிடம்

மெய்தகு வரைச்சாரல்,

மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய

முல்லையங் கொடியாட,

செய்ய தாமரைச் செழும்பணை திகழ்தரு

திருவயிந் திரபுரமே. 3.1.3

 

1151

மாறு கொண்டுடன் றெதிர்ந்தவல் லவுணன்றன்

மார்பக மிருபிளவா,

கூறு கொண்டவன் குலமகற் கின்னருள்

கொடுத்தவ னிடம்,மிடைந்து

சாறு கொண்டமென் கரும்பிளங் கழைதகை

விசும்புற மணிநீழல்,

சேறு கொண்டதண் பழனம தெழில்திகழ்

திருவயிந் திரபுரமே. 3.1.4

 

1152

ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென்

றகலிட மளந்து ஆயர்,

பூங்கொ டிக்கின விடைபொரு தவனிடம்

பொன்மலர் திகழ்,வேங்கை

கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு

குரக்கினம் இரைத்தோடி

தேன்க லந்தண் பலங்கனி நுகர்த்தரு

திருவயிந் திரபுரமே. 3.1.5

 

1153

கூனு லாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின்

திறத்திளங் கொடியோடும்,

கானு லாவிய கருமுகில் திருநிறத்

தவனிடம் கவினாரும்,

வானு லாவிய மதிதவழ் மால்வரை

மாமதிள் புடைசூழ,

தேனு லாவிய செழும்பொழில் தழுவிய

திருவயிந் திரபுரமே. 3.1.6

 

1154

மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம்

விலங்கலின் மிசையிலங்கை

மன்னன், நீண்முடி பொடிசெய்த மைந்தன

திடம்மணி வரைநீழல்,

அன்ன மாமல ரரவிந்தத் தமளியில்

பெடையொடு மினிதமர,

செந்நெ லார்க்கவ ரிக்குலை வீசுதண்

திருவயிந் திரபுரமே. 3.1.7

 

1155

விரைக மழ்ந்தமென் கருங்குழல் காரணம்

வில்லிறுத்து அடல்மழைக்கு,

நிரைக லங்கிட வரைகுடை யெடுத்தவன்

நிலவிய இடம்தடமார்,

வரைவ ளந்திகழ் மதகரி மருப்பொடு

மலைவள ரகிலுந்தி,

திரைகொ ணர்ந்தணை செழுநதி வயல்புகு

திருவயிந் திரபுரமே. 3.1.8

 

1156

வேல்கொள் கைத்தலத் தரசர்வெம் போரினில்

விசயனுக் காய்,மணித்தேர்க்

கோல்கொள் கைத்தலத் தெந்தைபெம் மானிடம்

குலவுதண் வரைச்சாரல்,

கால்கொள் கண்கொடிக் கையெழக் கமுகிளம்

பாளைகள் கமழ்சாரல்,

சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு

திருவயிந் திரபுரமே. 3.1.9

 

1157

மூவ ராகிய வொருவனை மூவுல

குண்டுமிழ்ந் தளந்தானை,

தேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண்

திருவயிந் திரபுரத்து,

மேவு சோதியை வேல்வல வன்கலி

கன்றி விரித்துரைத்த,

பாவு தண்டமிழ் பத்திவை பாடிடப்

பாவங்கள் பயிலாவே. (2) 3.1.10

Leave a Reply