3 ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

3ஆம் பத்து 9ஆம் திருமொழி

1228

சலங்கொண்ட இரணியன

தகல்மார்வம் கீண்டு

தடங்கடலைக் கடைந்தமுதங்

கொண்டுகந்த காளை,

நலங்கொண்ட கருமுகில்போல்

திருமேனி யம்மான்

நாடோ றும் மகிழ்ந்தினிது

மருவியுறை கோயில்,

சலங்கொண்டு மலர்சொரியும்

மல்லிகையொண் செருந்தி

சண்பகங்கள் மணநாறும்

வண்பொழிலி னூடே,

வலங்கொண்டு கயலோடி

விளையாடு நாங்கூர்

வைகுந்த விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே. (2) 3.9.1

 

1229

திண்ணியதோ ரரியுருவாய்த்

திசையனைத்தும் நடுங்கத்

தேவரொடு தானவர்கள்

திசைப்ப,இரணியனை

நண்ணியவன் மார்வகலத்

துகிர்மடுத்த நாதன்

நாடோ றும் மகிழ்ந்தினிது

மருவியுறை கோயில்,

எண்ணில்மிகு பெருஞ்செல்வத்

தெழில்விளங்கு மறையும்

ஏழிசையும் கேள்விகளு

மியன்றபெருங் குணத்தோர்,

மண்ணில்மிகு மறையவர்கள்

மலிவெய்து நாங்கூர்

வைகுந்த விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே. 3.9.2

 

1230

அண்டமுமிவ் வலைகடலு

மவனிகளு மெல்லாம்

அமுதுசெய்த திருவயிற்றன்

அரன்கொண்டு திரியும்,

முண்டமது நிறைத்தவன்கண்

சாபமது நீக்கும்

முதல்வனவன் மகிழ்ந்தினிது

மருவியுறை கோயில்,

எண்டிசையும் பெருஞ்செந்ந

லிளந்தெங்கு கதலி

இலைக்கொடியொண் குலைக்கமுகொ

டிகலிவளம் சொரிய

வண்டுபல விசைபாட

மயிலாலு நாங்கூர்

வைகுந்த விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே. 3.9.3

 

1231

கலையிலங்கு மகலல்குல்

அரக்கர்க்குலக் கொடியைக்

காதொடுமூக் குடனரியக்

கதறியவ ளோடி,

தலையிலங்கை வைத்துமலை

யிலங்கைபுகச் செய்த

தடந்தோளன் மகிழ்ந்தினிது

மருவியுறை கோயில்,

சிலையிலங்கு மணிமாடத்

துச்சிமிசைச் சூலம்

செழுங்கொண்ட லகடிரியச்

சொரிந்தசெழு முத்தம்,

மலையிலங்கு மாளிகைமேல்

மலிவெய்து நாங்கூர்

வைகுந்த விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே. 3.9.4

 

1232

மின்னனைய _ண்மருங்குல்

மெல்லியற்கா யிலங்கை

வேந்தன்முடி யொருபதும்தோ

ளிருபதும்போ யுதிர

தன்நிகரில் சிலைவளைத்தன்

றிலங்கைபொடி செய்த

தடந்தோளன் மகிழ்ந்தினிது

மருவியுறை கோயில்,

செந்நெலொடு செங்கமலம்

சேல்கயல்கள் வாளை

செங்கழுநீ ரொடுமிடைந்து

கழனிதிகழ்ந் தெங்கும்,

மன்னுபுகழ் வேதியர்கள்

மலிவெய்து நாங்கூர்

வைகுந்த விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே. 3.9.5

 

1233

பெண்மைமிகு வடிவுகொடு

வந்தவளைப் பெரிய

பேயினது உருவுகொடு

மாளவுயி ருண்டு

திண்மைமிகு மருதொடுநற்

சகடமிறுத் தருளும்

தேவனவன் மகிழ்ந்தினிது

மருவியுறை கோயில்,

உண்மைமிகு மறையொடுநற்

கலைகள்நிறை பொறைகள்

உதவுகொடை யென்றிவற்றி

னொழிவில்லா, பெரிய

வண்மைமிகு மறையவர்கள்

மலிவெய்து நாங்கூர்

வைகுந்த விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே. 3.9.6

 

1234

விளங்கனியை யிளங்கன்று

கொண்டுதிர வெறிந்து

வேல்நெடுங்க ணாய்ச்சியர்கள்

வைத்ததயிர் வெண்ணெய்

உளங்குளிர அமுதுசெய்திவ்

வுலகுண்ட காளை

உகந்தினிது நாடோ றும்

மருவியுறை கோயில்,

இளம்படிநற் கமுகுகுலைத்

தெங்குகொடிச் செந்நெல்

ஈன்கரும்பு கண்வளரக்

கால்தடவும் புனலால்,

வளங்கொண்ட பெருஞ்செல்வம்

வளருமணி நாங்கூர்

வைகுந்த விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே. 3.9.7

 

1235

ஆறாத சினத்தின்மிகு

நரகனுர மழித்த

அடலாழித் தடக்கையன்

அலர்மகட்கும் அரற்கும்,

கூறாகக் கொடுத்தருளும்

திருவுடம்பன் இமையோர்

குலமுதல்வன் மகிழ்ந்தினிது

மருவியுறை கோயில்,

மாறாத மலர்க்கமலம்

செங்கழுநீர் ததும்பி

மதுவெள்ள மொழுகவய

லுழவர்மடை யடைப்ப,

மாறாத பெருஞ்செல்வம்

வளருமணி நாங்கூர்

வைகுந்த விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே. 3.9.8

 

1236

வங்கமலி தடங்கடலுள்

வானவர்க ளோடு

மாமுனிவர் பலர்கூடி

மாமலர்கள் தூவி,

எங்கள்தனி நாயகனே

எமக்கருளாய் என்னும்

ஈசனவன் மகிழ்ந்தினிது

மருவியுறை கோயில்,

செங்கயலும் வாளைகளும்

செந்நெலிடைக் குதிப்பச்

சேலுகளும் செழும்பணைசூழ்

வீதிதொறும் மிடைந்து,

மங்குல்மதி யகடுரிஞ்சு

மணிமாட நாங்கூர்

வைகுந்த விண்ணகரம்

வணங்குமட நெஞ்சே. 3.9.9

 

1237

சங்குமலி தண்டுமுதல்

சக்கரமுடனேந்தும்

தாமரைக்கண் நெடியபிரான்

தானமரும் கோயில்,

வங்கமலி கடலுலகில்

மலிவெய்து நாங்கூர்

வைகுந்த விண்ணகர்மேல்

வண்டறையும் பொழில்சூழ்,

மங்கையர்தம் தலைவன்மரு

வலர்தமுடல் துணிய

வாள்வீசும் பரகாலன்

கலிகன்றி சொன்ன,

சங்கமலி தமிழ்மாலை

பத்திவைவல்லார்கள்

தரணியொடு விசும்பாளும்

தன்மைபெறு வாரே. (2) 3.9.10

Leave a Reply