5ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் அருளிய

பெரிய திருமொழி

5ஆம் பத்து 1ஆம் திருமொழி

1348

அறிவ தரியா னனைத்துலகும்

உடையா னென்னை யாளுடையான்

குறிய மாணி யுருவாய

கூத்தன் மன்னி யமருமிடம்,

நறிய மலர்மேல் சுரும்பார்க்க

எழிலார் மஞ்ஞை நடமாட,

பொறிகொள் சிறைவண் டிசைபாடும்

புள்ளம் பூதங் குடிதானே (5.1.1)

 

1349

கள்ளக் குறளாய் மாவலியை

வஞ்சித்து உலகம் கைப்படுத்து,

பொள்ளைக் கரத்த போதகத்தின்

துன்பம் தவிர்த்த புனிதனிடம்,

பள்ளச் செறுவில் கயலுகளப்

பழனக் கழனி யதனுள்போய்,

புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும்

புள்ளம் பூதங் குடிதானே (5.1.2)

 

1350

மேவா வரக்கர் தென்னிலங்கை

வேந்தன் வீயச் சரம்துரந்து,

மாவாய் பிளந்து மல்லடர்த்து

மருதம் சாய்த்த மாலதிடம்,

காவார் தெங்கின் பழம்வீழக்

கயல்கள் பாயக் குருகிரியும்,

பூவார் கழனி யெழிலாரும்

புள்ளம் பூதங் குடிதானே (5.1.3)

 

1351

வெற்பால் மாரி பழுதாக்கி

விறல்வா ளரக்கர் தலைவன்றன்,

வற்பார் திரள்தோ ளைந்நான்கும்

துணித்த வல்வில் இராமனிடம்,

கற்பார் புரிசை செய்குன்றம்

கவினார் கூடம் மாளிகைகள்,

பொற்பார் மாட மெழிலாரும்

புள்ளம் பூதங் குடிதானே (5.1.4)

 

1352

மையார் தடங்கண் கருங்கூந்தல்

ஆய்ச்சி மறைய வைத்ததயிர்,

நெய்யார் பாலோ டமுதுசெய்த

நேமி யங்கை மாயனிடம்,

செய்யார் ஆரல் இரைகருதிச்

செங்கால் நாரை சென்றணையும்,

பொய்யா நாவில் மறையாளர்

புள்ளம் பூதங் குடிதானே (5.1.5)

 

1353

மின்னி னன்ன நுண்மருங்குல்

வேயேய் தடந்தோள் மெல்லியற்கா,

மன்னு சினத்த மழவிடைகள்

ஏழன் றடர்த்த மாலதிடம்,

மன்னு முதுநீ ரரவிந்த

மலர்மேல் வரிவண் டிசைபாட,

புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும்

புள்ளம் பூதங் குடிதானே (5.1.6)

 

1354

குடையா விலங்கல் கொண்டேந்தி

மாரி பழுதா நிரைகாத்து,

சடையா னோட அடல்வாணன்

தடந்தோள் துணித்த தலைவனிடம்,

குடியா வண்டு கள்ளுண்ணக்

கோல நீலம் மட்டுகுக்கும்,

புடையார் கழனி யெழிலாரும்

புள்ளம் பூதங் குடிதானே (5.1.7)

 

1355

கறையார் நெடுவேல் மறமன்னர்

வீய விசயன் தேர்கடவி,

இறையான் கையில் நிறையாத

முண்டம் நிறைத்த வெந்தையிடம்,

மறையால் மூத்தீ யவைவளர்க்கும்

மன்னு புகழால் வண்மையால்,

பொறையால் மிக்க அந்தணர்வாழ்

புள்ளம் பூதங் குடிதானே (5.1.8)

 

1356

துன்னி மண்ணும் விண்ணாடும்

தோன்றா திருளாய் மூடியநாள்,

அன்ன மாகி யருமறைகள்

அருளிச் செய்த அமலனிடம்,

மின்னு சோதி நவமணியும்

வேயின் முத்தும் சாமரையும்,

பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும்

புள்ளம் பூதங் குடிதானே (5.1.9)

 

1357

கற்றா மறித்து காளியன்றன்

சென்னி நடுங்க நடம்பயின்ற

பொற்றாமரையாள் தன்கேள்வன்

புள்ளம் பூதங்குடிதன்மேல்

கற்றார் பரவும் மங்கையர்க்கோன்

காரார் புயற்கைக் கலிகன்றி,

சொல்தானீரைந் திவைபாடச்

சோர நில்லா துயர்தாமே (5.1.10)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *