5ஆம் பத்து 2ஆம் திருமொழி
1358
தாம்தம் பெருமை யறியார், தூது
வேந்தர்க் காய வேந்த ரூர்போல்,
காந்தள் விரல்மென் கலைநன் மடவார்,
கூந்தல் கமழும் கூட லூரே (5.2.1)
1359
செறும்திண் திமிலே றுடைய, பின்னை
பெறும்தண் கோலம் பெற்றா ரூர்ப்போல்,
நறுந்தண் தீந்தே னுண்ட வண்டு,
குறிஞ்சி பாடும் கூட லூரே (5.2.2)
1360
பிள்ளை யுருவாய்த் தயிருண்டு, அடியேன்
உள்ளம் புகுந்த வொருவ ரூர்போல்,
கள்ள நாரை வயலுள், கயல்மீன்
கொள்ளை கொள்ளும் கூட லூரே (5.2.3)
1361
கூற்றே ருருவின் குறளாய், நிலநீர்
ஏற்றா னெந்தை பெருமா னூர்போல்,
சேற்றே ருழுவர் கோதைப் போதூண்,
கோல்தேன் முரலும் கூட லூரே (5.2.4)
1362
தொண்டர் பரவச் சுடர்சென் றணவ,
அண்டத் தமரும் அடிக ளூர்போல்,
வண்ட லலையுள் கெண்டை மிளிர,
கொண்ட லதிரும் கூட லூரே (5.2.5)
1363
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்,
துக்கம் துடைத்த துணைவ ரூர்போல்,
எக்க லிடுநுண் மணல்மேல், எங்கும்
கொக்கின் பழம்வீழ் கூட லூரே (5.2.6)
1364
கருந்தண் கடலும் மலையு முலகும்,
அருந்தும் அடிகள் அமரு மூர்போல்,
பெருந்தண் முல்லைப் பிள்ளை யோடி,
குருந்தம் தழுவும் கூட லூரே (5.2.7)
1365
கலைவாழ் பிணையோ டணையும், திருநீர்
மலைவா ழெந்தை மருவு மூர்போல்,
இலைதாழ் தெங்கின் மேல்நின்று, இளநீர்க்
குலைதாழ் கிடங்கின் கூட லூரே (5.2.8)
1366
பெருகு காத லடியேன் உள்ளம்,
உருகப் புகுந்த வொருவ ரூர்போல்,
அருகு கைதை மலர, கெண்டை
குருகென் றஞ்சும் கூட லூரே (5.2.9)
1367
காவிப் பெருநீர் வண்ணன், கண்ணன்
மேவித் திகழும் கூட லூர்மேல்,
கோவைத் தமிழால் கலியன் சொன்ன,
பாவைப் பாடப் பாவம் போமே (5.2.10)