5ஆம் பத்து 3ஆம் திருமொழி
1368
வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசை
மன்னரை மூவெழுகால்
கொன்ற தேவ,நின் குரைகழல் தொழுவதோர்
வகையெனக் கருள்புரியே,
மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை
மௌவலின் போதலர்த்தி,
தென்றல் மாமணம் கமழ்தர வருதிரு
வெள்ளறை நின்றானே (5.3.1)
1369
வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற்
கருளி,முன் பரிமுகமாய்,
இசைகொள் வேதநூ லென்றிவை பயந்தவ
னே எனக் கருள்புரியே,
உயர்கொள் மாதவிப் போதொடு லாவிய
மாருதம் வீதியின்வாய்,
திசையெல் லாம்கம ழும்பொழில் சூழ்திரு
வெள்ளறை நின்றானே (5.3.2)
1370
வெய்ய னாயுல கேழுடன் நலிந்தவன்
உடலக மிருபிளவா,
கையில் நீளுகிர்ப் படையது வாய்த்தவ னே
எனக் கருள்புரியே,
மையி னார்தரு வராலினம் பாயவண்
தடத்திடைக் கமலங்கள்,
தெய்வ நாறுமொண் பொய்கைகள் சூழ்திரு
வெள்ளறை நின்றானே (5.3.3)
1371
வாம்ப ரியுக மன்னர்த முயிர்செக
ஐவர்க்கட் கரசளித்த,
காம்பி னார்த்திரு வேங்கடப் பொருப்ப.நின்
காதலை யருளெனக்கு,
மாம்பொ ழில்தளிர் கோதிய மடக்குயில்
வாயது துவர்ப்பெய்த,
தீம்ப லங்கனித் தேனது _கர்திரு
வெள்ளறை நின்றானே (5.3.4)
1372
மான வேலொண்கண் மடவரல் மண்மகள்
அழுங்கமுந் நீர்ப்பரப்பில்,
ஏன மாகியன் றிருநில மிடந்தவ னே
எனக் கருள்புரியே,
கான மாமுல்லை கழைக்கரும் பேறிவெண்
முறுவல்செய் தலர்கின்ற,
தேனின் வாய்மலர் முருகுகுக் கும்திரு
வெள்ளறை நின்றானே (5.3.5)
1373
பொங்கு நீண்fமுடி யமரர்கள் தொழுதெழ
அமுதினைக் கொடுத்தளிப்பான்,
அங்கொ ராமைய தாகிய வாதி.நின்
னடிமையை யருளெனக்கு,
தங்கு பேடையொ டூடிய மதுகரம்
தையலார் குழலணைவான்,
திங்கள் தோய்சென்னி மாடம்சென் றணை
திரு வெள்ளறை நின்றானே (5.3.6)
1374
ஆறி னோடொரு நான்குடை நெடுமுடி
அரக்கன்றன் சிரமெல்லாம்,
வேறு வேறுக வில்லது வளைத்தவ னே
எனக் கருள்புரியே,
மாறில் சோதிய மரதகப் பாசடைத்
தாமரை மலர்வார்ந்த,
தேறல் மாந்திவண் டின்னிசை முரல
திரு வெள்ளறை நின்றானே (5.3.7)
1375
முன்னிவ் வேழுல குணர்வின்றி யிருள்மிக
உம்பர்கள் தொழுதேத்த,
அன்ன மாகியன் றருமறை பயந்தவ
னே.எனக் கருள்புரியே,
மன்னு கேதகை சூதக மென்றிவை
வனத்திடைச் சுரும்பினங்கள்,
தென்ன வென்னவண் டின்னிசை முரல்திரு
வெள்ளறை நின்றானே (5.3.8)
1376
ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென்
றகலிட முழுதினையும்,
பாங்கி னாற்கொண்ட பரம.நிற் பணிந்தெழு
வேனெனக் கருள்புரியே,
ஓங்கு பிண்டியின் செம்மல ரேறிவண்
டுழிதர, மாவேறித்
தீங்கு யில்மிழற் றும்படப் பைத்திரு
வெள்ளறை நின்றானே (5.3.9)
1377
மஞ்சு லாமணி மாடங்கள் சூழ்திரு
வெள்ளறை யதன்மேய,
அஞ்ச னம்புரை யும்திரு வுருவனை
ஆதியை யமுதத்தை,
நஞ்சு லாவிய வேல்வல வன்கலி
கன்றிசொல் ஐயிரண்டும்,
எஞ்ச லின்றிநின் றேத்தவல் லாரிமை
யோர்க்ர சாவார்க்களே (5.3.10)