5ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

5ஆம் பத்து 4ஆம் திருமொழி

1378

உந்தி மேல்நான் முகனைப்

படைத்தான் உல குண்டவன்

எந்தை பெம்மான், இமையோர்கள்

தாதைக்கிட மென்பரால்,

சந்தி னோடு மணியும்

கொழிக்கும்புனல்f காவிரி,

அந்தி போலும் நிறத்தார்

வயல்சூழ்தென் னரங்கமே (5.4.1)

 

1379

வையமுண் டாலிலை மேவு

மாயன்மணி நீண்முடி,

பைகொள் நாகத் தணையான்

பயிலுமிட மென்பரால்,

தையல் நல்லார் குழல்மா

லையும்மற்றவர் தடமுலை,

செய்ய சாந்தும் கலந்திழி

புனல்சூழ்தென் னரங்கமே (5.4.2)

 

1380

பண்டிவ் வைய மளப்பான்

சென்றுமாவலி கையில்நீர்

கொண்ட ஆழித் தடக்கைக்

குறளனிட மென்பரால்,

வண்டு பாடும் மதுவார்

புனல்வந்திழி காவிரி

அண்ட நாறும் பொழில்சூழ்ந்து

அழகார்தென் னரங்கமே (5.4.3)

 

1381

விளைத்த வெம்போர் விறல்வா

ளரக்கன்நகர் பாழ்பட,

வளைத்த வல்வில் தடக்கை

யவனுக்கிட மென்பரால்,

துளைக்கை யானை மருப்பு

மகிலும்கொணர்ந் துந்தி,முன்

திளைக்கும் செல்வப் புனல்கா

விரிசூழ்தென் னரங்கமே (5.4.4)

 

1382

வம்புலாம் கூந்தல் மண்டோ தரி

காதலன் வான்புக,

அம்பு தன்னால் முனிந்த

அழகனிட மென்பரால்,

உம்பர் கோனு முலகேழும்

வந்தீண்டி வணங்கும், நல்

செம்பொ னாரும் மதிள்சூழ்ந்து

அழகார்தென் னரங்கமே (5.4.5)

 

1383

கலையு டுத்த அகலல்குல்

வன்பேய்மகள் தாயென,

முலைகொ டுத்தா ளுயிருண்

டவன்வாழுமிட மென்பரால்,

குலையெ டுத்த கதலிப்

பொழிலூடும் வந்துந்தி, முன்

அலையெ டுக்கும் புனற்கா

விரிசூழ்தென் னரங்கமே (5.4.6)

 

1384

கஞ்சன் நெஞ்சும் கடுமல்

லரும்சகடமுங்காலினால்,

துஞ்ச வென்ற சுடராழி

யான்வாழுமிட மென்பரால்,

மஞ்சு சேர்மா ளிகைநீ

டகில்புகையும், மறையோர்

செஞ்சொல் வேள்விப் புகையும்

கமழும்தென் னரங்கமே (5.4.7)

 

1385

ஏன மீனா மையோடு

அரியும்சிறு குறளுமாய்,

தானு மாயத் தரணித்

தலைவனிட மென்பரால்,

வானும் மண்ணும் நிறையப்

புகுந்தீண்டி வணங்கும்,நல்

தேனும் பாலும் கலந்தன்

னவர்சேர்த்தென் னரங்கமே (5.4.8)

 

1386

சேய னென்றும் மிகப்பெரியன்

நுண்ணேர்மையி னாய,இம்

மாயையை ஆரு மறியா

வகையானிட மென்பரால்,

வேயின் முத்தும் மணியும்

கொணர்ந்தார்ப்புனற் காவிரி,

ஆய பொன்மா மதிள்சூழ்ந்

தழகார்தென் னரங்கமே (5.4.9)

 

1387

அல்லி மாத ரமரும்

திருமார்வ னரங்கத்தை,

கல்லின் மன்னு மதிள்மங்

கையர்கோன்கலி கன்றிசொல்,

நல்லிசை மாலைகள் நாலி

ரண்டுமிரண் டுமுடன்,

வல்லவர் தாமுல காண்டு

பின்வானுல காள்வரே (5.4.10)

Leave a Reply