5ஆம் பத்து 5ஆம் திருமொழி
1388
வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே .
வேங்கடமே . எங்கின் றாளால்,
மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண்
துயில்மறந்தாள், வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர்த முயிராளன்
ஒலிதிரைநீர்ப் பௌவங் கொண்ட
திருவாளன் என்மகளைச் செய்தனகள்
எங்ஙனம்நான் சிந்திக் கேனே . (5.5.1)
1389
கலையாளா வகலல்குல் கனவளையும்
கையாளா என்செய் கேன்நான்,
விலையாளா வடியேனை வேண்டுதியோ
வேண்டாயோ? என்னும், மெய்ய
மலையாளன் வானவர்த்தம் தலையாளன்
மராமரமே ழெய்த வென்றிச்
சிலையாளன், என் மகளைச் செய்தனகள்
எங்ஙனம்நான் சிந்திக் கேனே . (5.5.2)
1390
மானாய மென்னோக்கி வாநெடுங்கண்
ணீர்மல்கும் வளையும் சோரும்,
தேனாய நறுந்துழா யலங்கலின்
திறம்பேசி யுறங்காள் காண்மின்,
கானாயன் கடிமனையில் தயிருண்டு
நெய்பருக நந்தன் பெற்ற
ஆனாயன், என் மகளைச் செய்தனகள்
அம்மனைமீரறிகி லேனே . (5.5.3)
1391
தாய்வாயில் சொற்கேளாள் தன்னாயத்
தோடணையாள் தடமென் கொங்கை-
யே,ஆரச் சாந்தணியாள், எம்பெருமான்
திருவரங்க மெங்கே? என்னும்,
பேய்மாய முலையுண்டிவ் வுலகுண்ட
பெருவயிற்றன் பேசில் நங்காய்,
மாமாய னென்மகளைச் செய்தனகள்
மங்கைமீர் . மதிக்கி லேனே . (5.5.4)
1392
பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயல்கண்
மையெழுதாள் பூவை பேணாள்,
ஏணறியா ளெத்தனையும் எம்பெருமான்
திருவரங்க மெங்கே என்னும்,
நாண்மலராள் நாயகனாய் நாமறிய
வாய்ப்பாடி வளர்ந்த நம்பி,
ஆண்மகனா யென்மகளைச் செய்தனகள்
அம்மனைமீரறிகி லேனே . (5.5.5)
1393
தாதாடு வனமாலை தாரானோ
வென்றென்றே தளர்ந்தாள் காண்மின்,
யாதானு மொன்றுரைக்கில் எம்பெருமான்
திருவரங்கம் என்னும், பூமேல்
மாதாளன் குடமாடி மதுசூதன்
மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன், என்மகளைச் செய்தனகள்
எங்ஙனம்நான் சொல்லு கேனே . (5.5.6)
1394
வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே
றாயினவா றெண்ணாள், எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாள் இப்
பெண்பெற்றே னென்செய் கேன்நான்,
தாராளன் தண்குடந்தை நகராளன்
ஐவர்க்கா யமரி லுய்த்த
தேராளன், என்மகளைச் செய்தனகள்
எங்ஙனம்நான் செப்பு கேனே . (5.5.7)
1395
உறவாது மிலளென்றென் றொழியாது
பலரேசும் அலரா யிற்றால்,
மறவாதே யெப்பொழுதும் மாயவனே.
மாதவனே. என்கின் றளால்,
பிறவாத பேராளன் பெண்ணாளன்
மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன், என்மகளைச் செய்தனகள்
அம்மனைமீரறிகி லேனே . (5.5.8)
1396
பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும்
பாலூட்டாள் பாவை பேணாள்,
வந்தானோ திருவரங்கன் வாரானோ
என்றென்றே வளையும் சோரும்,
சந்தோகன் பௌழியன் ஐந் தழலோம்பு
தைத்திரியன் சாம வேதி,
அந்தோ.வந் தென்மகளைச் செய்தனகள்
அம்மனைமீரறிகி லேனே . (5.5.9)
1397
சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்கத்
தம்மானைச் சிந்தை செய்த,
நீலமலர்க் கண்மடவாள் நிறையழிவைத்
தாய்மொழிந்த வதனை, நேரார்
காலவேல் பரகாலன் கலிகன்றி
ஒலிமாலை கற்று வல்லார்,
மாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவராய்ப்
பொன்னுலகில் வாழ்வர் தாமே (5.5.10)