5ஆம் பத்து 8ஆம் திருமொழி
1418
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா
திரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து
மாழை மான்மட நோக்கியுன் தோழி,
உம்பி யெம்பி யென் றொழிந்திலை, உகந்து
தோழ னீயெனக் கிங்கொழி என்ற
சொற்கள் வந்தடி யேன்மனத் திருந்திட,
ஆழி வண்ணநின்னடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.1)
1419
வாத மாமகன் மர்க்கடம் விலங்கு
மற்றோர் சாதியென் றொழிந்திலை, உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருகச்
செய்த தகவினுக் கில்லைகைம் மாறென்று
கோதில் வாய்மையி னாயொடு முடனே
உண்பன் நான் என்ற ஓண்பொருள் எனக்கும்
ஆதல் வேண்டுமென் றடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.2)
1420
கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை
வைகு தாமரை வாங்கிய வேழம்,
முடியும் வண்ணமோர் முழுவலி முதலை
பற்ற மற்றது நின்சரண் நினைப்ப
கொடிய வாய்விலங் கின்னுயிர்மலங்கக்
கொண்டசீற்றமொன் றுண்டுள தறிந்து,உன்
அடிய னேனும்வந் தடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.3)
1421
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம்
வெருவி வந்துநின் சரணெனச் சரணா
நெஞ்சிற் கொண்டுநின் னஞ்சிறைப் பறவைக்
கடைக்க லம்கொடுத் தருள்செய்த தறிந்து
வெஞ்சொ லாளர்கள் நமன்றமர் கடியர்
கொடிய செய்வன வுள,அதற் கடியேன்
அஞ்சி வந்துநின் னடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.4)
1422
மாக மாநிலம் முழுவதும்வந் திரைஞ்சும்
மலர டிகண்ட மாமறை யாளன்,
தோகை மாமயி லன்னவ ரின்பம்
துற்றி லாமையிலத்தவிங் கொழிந்து
போகம் நீயெய்திப் பின்னும்நம் மிடைக்கே
போது வாய், என்ற பொன்னருள், எனக்கும்
ஆக வேண்டுமென் றடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.5)
1423
மன்னு நான்மறை மாமுனி பெற்ற
மைந்த னைமதி யாதவெங் கூற்றந்
தன்னை யஞ்சிநின் சரணெனச் சரணாய்த்
தகவில் காலனை யுகமுனிந் தொழியா
பின்னை யென்றும்நின் திருவடி பிரியா
வண்ண மெண்ணிய பேரருள், எனக்கும்
அன்ன தாகுமென் றடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.6)
1424
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்
உனக்கு முன்தந்த அந்தண னொருவன்,
காத லென்மகன் புகலிடங் காணேன்,
கண்டு நீதரு வாயெனக் கென்று,
கோதில் வாய்மையி னானுனை வேண்டிய
குறைமு டித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்,
ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.7)
1425
வேத வாய்மொழி யந்தண னொருவன்
எந்தை நின்சர ணென்னுடை மனைவி,
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடிய தோர் தெய்வங்கொண் டொளிக்கும், என்றழைப்ப
ஏத லார்முன்னே யின்னரு ளவர்க்குச்
செய்துன் மக்கள்மற் றிவரென்று கொடுத்தாய்,
ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.8)
1426
துளங்கு நீண்முடி அரசர்தங்குரிசில்
தொண்டை மன்னவன் திண்டிற லொருவற்கு
உளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங்
கோடு நாழிகை யேழுடனிருப்ப,
வளங்கொள் மந்திரம் மற்றவற் கருளிச்
செய்த வாறடி யேனறிந்து, உலகம்
அளந்த பொன்னடி யேயடைந் துய்ந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.9)
1427
மாடமாளிகை சூழ்திரு மங்கை
மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்,
ஆடல் மாவல் வன்கலி கன்றி
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானை,
நீடு தொல்புக ழாழிவல் லானை
எந்தை யைநெடு மாலைநி னைந்த,
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்.
பாட நும்மிடைப் பாவம்நில் லாவே (5.8.10)