5ஆம் பத்து 9ஆம் திருமொழி
1428
கையிலங் காழி சங்கன்
கருமுகில் திருநி றத்தன்,
பொய்யிலன் மெய்யன் தந்தாள்
அடைவரே லடிமை யாக்கும்,
செய்யலர் கமல மோங்கு
செறிபொழில் தென்தி ருப்பேர்
பையர வணையான் நாமம்
பரவிநா னுய்ந்த வாறே (5.9.1)
1429
வங்கமார் கடல்க ளேழும்
மலையும்வா னகமும் மற்றும்,
அங்கண்மா ஞால மெல்லாம்
அமுதுசெய் துமிழ்ந்த எந்தை,
திங்கள்மா முகில்அ ணவு
செறிபொழில் தெந்தி ருப்பேர்,
எங்கள்மா லிறைவன் நாமம்
ஏத்திநா னுய்ந்த வாறே (5.9.2)
1430
ஒருவனை யுந்திப் பூமேல்
ஓங்குவித் தாகந் தன்னால்,
ஒருவனைச் சாபம் நீக்கி
உம்பராள் , என்று விட்டான்,
பெருவரை மதிள்கள் சூழ்ந்த
பெருநகர் அரவ ணைமேல்
கருவரை வண்ணன் தென்பேர்
கருதிநா னுய்ந்த வாறே (5.9.3)
1431
ஊனமர் தலையொன் றேந்தி
உலகெலாம் திரியு மீசன்
ஈனமர் சாபம் நீக்காய்,
என்னவொண் புனலை யீந்தான்,
தேனமர் பொழில்கள் சூழ்ந்த
செறிவயல் தென்தி ருப்பேர்,
வானவர் தலைவன் நாமம்
வாழ்த்திநா னுய்ந்த வாறே (5.9.4)
1432
வக்கரன் வாய்முன் கீண்ட
மாயவனே என்று வானேர்
புக்கு, அரண் தந்த ருள்வாய்,
என்னப்பொன் னாகத் தானை,
நக்கரி யுருவ மாகி
நகங்கிளர்ந் திடந்து கந்த,
சக்கரச் செல்வன் தென்பேர்த்
தலைவன்தா ளடைந்துய்ந் தேனே (5.9.5)
1433
விலங்கலால் கடல டைத்து
விளங்கிழை பொருட்டு, வில்லால்,
இலங்கைமா நகர்க்கி றைவன்
இருபது புயம்து ணித்தான்,
நலங்கொள்நான் மறைவல் லார்கள்
ஒத்தொலி யேத்தக் கேட்டு
மலங்குபாய் வயல்தி ருப்பேர்
மருவிநான் வாழ்ந்த வாறே (5.9.6)
1434
வெண்ணெய்தா னமுது செய்ய
வெகுண்டுமத் தாய்ச்சி யோச்சி,
கண்ணியர் குறுங்க யிற்றால்
கட்டவெட் டென்றி ருந்தான்,
திண்ணமா மதிள்கள் சூழ்ந்த
தென்திருப் பேருள், வேலை
வண்ணனார் நாமம் நாளும்
வாய்மொழிந் துய்ந்த வாறே (5.9.7)
1435
அம்பொனா ருலக மேழும்
அறியஆய்ப் பாடி தன்னுள்,
கொம்பனார் பின்னை கோலம்
கூடுதற் கேறு கொன்றான்,
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த
தென்திருப் பேருள் மேவும்,
எம்பிரான் நாமம் நாளும்
ஏத்திநா னுய்ந்த வாறே (5.9.8)
1436
நால்வகை வேத மைந்து
வேள்வியா றங்கம் வல்லார்,
மேலைவா னவரின் மிக்க
வேதிய ராதி காலம்,
சேலுகள் வயல்தி ருப்பேர்ச்
செங்கண்மா லோடும் வாழ்வார்,
சீலமா தவத்தர் சிந்தை
யாளியென் சிந்தை யானே (5.9.9)
1437
வண்டறை பொழில்தி ருப்பேர்
வரியர வணையில் பள்ளி
கொண்டுறை கின்ற மாலைக்
கொடிமதிள் மாட மங்கை,
திண்டிறல் தோள்க லியன்
செஞ்சொலால் மொழிந்த மாலை,
கொண்டிவை பாடி யாடக்
கூடுவார் நீள்வி சும்பே (5.9.10)