6ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

6ஆம் பத்து 10ஆம் திருமொழி

1538

கிடந்த நம்பி குடந்தை மேவிக்

கேழ லாயுலகை

இடந்த நம்பி, எங்கள் நம்பி

எறிஞர் அரணழிய

கடந்த நம்பி கடியா ரிலங்கை

உலகை யீரடியால்

நடந்த நம்பி நாமம் சொல்லில்

நமோநா ராயணமே (6.10.1)

1539

விடந்தா னுடைய அரவம் வெருவச்

செருவில் முனநாள்,முன்

தடந்தா மரைநீர்ப் பொய்கை புக்கு

மிக்க தாடாளன்

இடந்தான் வையம் கேழ லாகி

உலகை யீரடியால்

நடந்தா னுடைய நாமம் சொல்லில்

நமோநா ராயணமே (6.10.2)

1540

பூணா தனலும் தறுகண் வேழம்

மறுக வளைமருப்பைப்

பேணான் வாங்கி யமுதம் கொண்ட

பெருமான் திருமார்வன்

பாணா வண்டு முரலும் கூந்தல்

ஆய்ச்சி தயிர்வெண்ணெய்

நாணா துண்டான் நாமம் சொல்லில்

நமோநா ராயணமே (6.10.3)

1541

கல்லார் மதிள்சூழ் கச்சி நகருள்

நச்சிப் பாடகத்துள்,

எல்லா வுலகும் வணங்க விருந்த

அம்மான், இலங்கைக்கோன்

வல்லா ளாகம் வில்லால் முனிந்த

எந்தை, விபீடணற்கு

நல்லா னுடைய நாமம் சொல்லில்

நமோநா ராயணமே (6.10.4)

1542

குடையா வரையால் நிரைமுன் காத்த

பெருமான் மருவாத

விடைதா னேழும் வென்றான் கோவல்

நின்றான் தென்னிலங்கை

அடையா அரக்கர் வீயப் பொருது

மேவி வெங்கூற்றம்

நடையா வுண்ணக் கண்டான் நாமம்

நமோநா ராயணமே (6.10.5)

1543

கான எண்கும் குரங்கும் முசுவும்

படையா அடலரக்கர்

மான மழித்து நின்ற வென்றி

அம்மான் எனக்கென்றும்

தேனும் பாலும் அமுது மாய

திருமால் திருநாமம்

நானும் சொன்னேன் நமரு முரைமின்

நமோநா ராயணமே (6.10.6)

1544

நின்ற வரையும் கிடந்த கடலும்

திசையு மிருநிலனும்

ஒன்று மொழியா வண்ண மெண்ணி

நின்ற அம்மானார்

குன்று குடையா வெடுத்த அடிக

ளுடைய திருநாமம்

நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன்

நமோநா ராயணமே (6.10.7)

1545

கடுங்கால் மாரி கல்லே பொழிய

அல்லே யெமக்கென்று

படுங்கால் நீயே சரணென் றாயர்

அஞ்ச அஞ்சாமுன்

நெடுங்கால் குன்றம் குடையொன் றேந்தி

நிரையைச் சிரமத்தால்

நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்

நமோநா ராயணமே (6.10.8)

1546

பொங்கு புணரிக் கடல்சூ ழாடை

நிலமா மகள்மலர்மா

மங்கை பிரமன் சிவனிந் திரன்வா

னவர்நா யகராய்

எங்க ளடிக ளிமையோர் தலைவ

ருடைய திருநாமம்

நங்கள் வினைகள் தவிர வுரைமின்

நமோநா ராயணமே (6.10.9)

1547

வாவித் தடஞ்சூழ் மணிமுத் தாற்று

நறையூர் நெடுமாலை

நாவில் பரவி நெஞ்சில் கொண்டு

நம்பி நாமத்தை

காவித் தடங்கண் மடவார் கேள்வன்

கலிய னொலிமாலை

மேவிச் சொல்ல வல்லார் பாவம்

நில்லா வீயுமே (6.10.10)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *