6ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

6ஆம் பத்து 7ஆம் திருமொழி

1508

ஆளும் பணியு மடியேனைக்

கொண்டான் விண்ட நிசாசரரை

தோளும் தலையும் துணிவெய்தச்

சுடுவெஞ் சிலைவாய்ச் சரந்துரந்தான்

வேளும் சேயு மனையாரும்

வேற்க ணாரும் பயில்வீதி

நாளும் விழவி னொலியோவா

நறையூர் நின்ற நம்பியே (6.7.1)

1509

முனியாய் வந்து மூவெழுகால்

முடிசேர் மன்ன ருடல்துணிய

தனிவாய் மழுவின் படையாண்ட

தாரார் தோளான், வார்புறவில்

பனிசேர் முல்லை பல்லரும்பப்

பான லொருபால் கண்காட்ட

நனிசேர் கமலம் முகங்காட்டும்

நறையூர் நின்ற நம்பியே (6.7.2)

1510

தெள்ளார் கடல்வாய் விடவாய

சினவா ளரவில் துயிலமர்ந்து

துள்ளா வருமான் விழவாளி

துரந்தா னிரந்தான் மாவலிமண்

புள்ளார் புறவில் பூங்காவி

புலங்கொள் மாதர் கண்காட்ட

நள்ளார் கமலம் முகங்காட்டும்

நறையூர் நின்ற நம்பியே (6.7.3)

1511

ஓளியா வெண்ணெ யுண்டானென்

றுரலோ டாய்ச்சி யொண்கயிற்றால்

விளியா ஆர்க்க ஆப்புண்டு

விம்மி யழுதான் மென்மலர்மேல்

களியா வண்டு கள்ளுண்ணக்

காமர் தென்றல் அலர்தூற்ற

நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்

நறையூர் நின்ற நம்பியே (6.7.4)

1512

வில்லார் விழவில் வடமதுரை

விரும்பி விரும்பா மல்லடர்த்து

கல்லார் திரடோள் கஞ்சனைக்

காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல்

சொல்லார் சுருதி முறையோதிச்

சோமுச் செய்யும் தொழிலினோர்

நல்லார் மறையோர் பலர்வாழும்

நறையூர் நின்ற நம்பியே (6.7.5)

1513

வள்ளி கொழுநன் முதலாய

மக்க ளோடு முக்கண்ணான்

வெள்கி யோட விறல்வாணன்

வியன்தோள் வனத்தைத் துணித்துகந்தான்

பள்ளி கமலத் திடைப்பட்ட

பகுவா யலவன் முகம்நோக்கி

நள்ளியூடும் வயல்சூழ்ந்த

நறையூர் நின்ற நம்பியே (6.7.6)

1514

மிடையா வந்த வேல்மன்னர்

வீய விசயன் தேர்கடவி,

குடையா வரையொன் றெடுத்தாயர்

கோவாய் நின்றான் கூராழிப்

படையான் வேதம் நான்கைந்து

வேள்வி யங்க மாறிசையேழ்

நடையா வல்ல அந்தணர்வாழ்

நறையூர் நின்ற நம்பியே (6.7.7)

1515

பந்தார் விரலாள் பாஞ்சாலி

கூந்தல் முடிக்கப் பாரதத்து

கந்தார் களிற்றுக் கழல்மன்னர்

கலங்கச் சங்கம் வாய்வைத்தான்

செந்தா மரைமே லயனோடு

சிவனு மனைய பெருமையோர்

நந்தா வண்கை மறையோர் வாழ்

நறையூர் நின்ற நம்பியே (6.7.8)

1516

ஆறும் பிறையும் அரவமும்

அடம்பும் சடைமே லணிந்து,உடலம்

நீறும் பூசி யேறூரும்

இறையோன் சென்று குறையிரப்ப

மாறொன் றில்லா வாசநீர்

வரைமார் வகலத் தளித்துகந்தான்

நாறும் பொழில்சூழ்ந் தழகாய

நறையூர் நின்ற நம்பியே (6.7.9)

1517

நன்மை யுடைய மறையோர்வாழ்

நறையூர் நின்ற நம்பியை

கன்னி மதில்சூழ் வயல்மங்கைக்

கலிய னொலிசெய் தமிழ்மாலை

பன்னி யுலகில் பாடுவார்

பாடு சார பழவினைகள்

மன்னி யுலகம் ஆண்டுபோய்

வானோர் வணங்க வாழ்வாரே (6.7.10)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *