6ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

6ஆம் பத்து 9ஆம் திருமொழி

1528

பெடையடர்த்த மடவன்னம் பிரியாது, மலர்க்கமலம்

மடலெடுத்து மதுநுகரும் வயலுடுத்த திருநறையூர்

முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலிதிரிவோன்

இடர்கெடுத்த திருவாள னிணையடியே யடைநெஞ்சே. (6.9.1)

1529

கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி

வழியார முத்தீன்று வளங்கொடுக்கும் திருநறையூர்

பழியாரும் விறலரக்கன் பருமுடிக ளவைசிதற

அழலாறும் சரந்துரந்தான் அடியிணையே யடைநெஞ்சே. (6.9.2)

1530

சுளைகொண்ட பலங்கனிகள் தேன்பாய கதலிகளின்

திளைகொண்ட பழம்கெழுமு திகழ்சோலைத் திருநறையூர்

வளைகொண்ட வண்ணத்தன் பின்தோன்றல் மூவுலகோடு

அளைவெண்ணெ யுண்டான்தன் அடியிணையே யடைநெஞ்சே. (6.9.3)

1531

துன்றோளித் துகில்படலம் துன்னியெங்கும் மாளிகைமேல்

நின்றார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்

மன்றாரக் குடமாடி வரையெடுத்து மழைதடுத்த

குன்றாரும் திரடோளன் குரைகழலே யடைநெஞ்சே. (6.9.4)

1532

அகிற்குறடுஞ்சந்தனமும் அம்பொன்னும் மணிமுத்தும்

மிகக்கொணர்ந்து திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர்

பகற்fகரந்த சுடராழிப் படையான் இவ்வுலகேழும்

புகக்கரந்த திருவயிற்றன் பொன்னடியே யடைநெஞ்சே. (6.9.5)

1533

பொன்முத்தும் அரியுகிரும் புழைக்கைம்மா கரிக்கோடும்

மின்னத்தண் திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர்

மின்னொத்த நுண்மருங்குல் மெல்லியலை திருமார்வில்

மன்னத்தான் வைத்துகந்தான் மலரடியே யடைநெஞ்சே. (6.9.6)

1534

சீர்தழைத்த கதிர்ச்செந்நெல் செங்கமலத் திடையிடையின்

பார்தழைத்துக் கரும்போங்கிப் பயன்விளைக்கும் திருநறையூர்

கார்தழைத்த திருவுருவன் கண்ணபிரான் விண்ணவர்கோன்

தார்தழைத்த துழாய்முடியன் தளிரடியே யடைநெஞ்சே. (6.9.7)

1535

குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளைமுத்தும்

தலையார்ந்த விளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர்

மலையார்ந்த கோலஞ்சேர் மணிமாடம் மிகமன்னி

நிலையார நின்றான்றன் நீள்கழலே யடைநெஞ்சே. (6.9.8)

1536

மறையாரும் பெருவேள்விக் கொழும்புகைபோய் வளர்ந்து, எங்கும்

நிறையார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்

பிறையாரும் சடையானும் பிரமனுமுன் தொழுதேத்த

இறையாகி நின்றான்றன் இணையடியே யடைநெஞ்சே. (6.9.9)

1537

திண்கனக மதிள்புடைசூழ் திருநறையூர் நின்றானை

வண்களக நிலவெறிக்கும் வயல்மங்கை நகராளன்

பண்களகம் பயின்றசீர்ப் பாடலிவை பத்தும்வல்லார்

விண்களகத் திமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே (6.9.10)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *