8ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

 

 

8ஆம் பத்து 10ஆம் திருமொழி

1738

வண்டார்பூ மாமலர் மங்கை மணநோக்கம்

உண்டானே உன்னை யுகந்துகந் துன்றனக்கே

தொண்டானேற்கு என்செய்கின் றாய்சொல்லு நால்வேதம்

கண்டானே கண்ண புறத்துறை யம்மானே. (2) 8.10.1

1739

பெருநீரும் விண்ணும் மலையு முலகேழும்

ஒருதாரா நின்னு ளொடுக்கிய நின்னையல்லால்

வருதேவர் மற்றுளரென் றென்மனத் திறையும்

கருதேன்நான் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.2

1740

மற்றுமோர் தெய்வ முளதென் றிருப்பாரோ

டுற்றிலேன் உற்றது முன்னடி யார்க்கடிமை

மற்றெல்லம் பேசிலும் நின்திரு வெட்டெழுத்தும்

கற்று நான் கண்ண புரத்துறை யம்மானே. (2) 8.10.3

1741

பெண்ணானாள் பேரிளங் கொங்கையி னாரழல்போல்

உண்ணாநஞ் சுண்டுகந் தாயை யுகந்தேன்நான்

மண்ணாளா. வாள்நெடுங் கண்ணி மதுமலராள்

கண்ணாளா கண்ண புரத்துறை யம்மானே. 8.10.4

1742

பெற்றாரும் சுற்றமு மென்றிவை பேணேன்நான்

மற்றாரும் பற்றிலே னாதலால் நின்னடைந்தேன்

உற்றானென் றுள்ளத்து வைத்தருள் செய்கண்டாய்

கற்றார்ச்சேர் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.5

1743

ஏத்தியுன் சேவடி யெண்ணி யிருப்பாரை,

பார்த்திருந் தங்கு நமன்றமர் பற்றாது

சோத்தம்நாம் அஞ்சுது மென்று தொடாமை நீ

காத்திபோல் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.6

1744

வெள்ளைநீர் வெள்ளத் தணைந்த அரவணைமேல்

துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே

வள்ளலே உன்றமர்க் கென்றும் நமன்றமர்

கள்ளர்போல் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.7

1745

மாணாகி வைய மளந்ததுவும் வாளவுணன்

பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்திருந்தேன்

பேணாத வல்வினை யேனிட ரெத்தனையும்

காணேன்நான் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.8

1746

நாட்டினா யென்னை யுனக்குமுன் தொண்டாக

மாட்டினே னத்தனையே கொண்டென் வல்வினையை

பாட்டினா லுன்னையென் நெஞ்சத் திருந்தமை

காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.9

1747

கண்டசீர்க் கண்ண புரத்துறை யம்மானை

கொண்டசீர்த் தொண்டன் கலிய னொலிமாலை

பண்டமாய்ப் பாடு மடியவர்க் கெஞ்ஞான்றும்

அண்டம்போ யாட்சி யவர்க்க தறிந்தோமே. (2) 8.10.10

 

 

Leave a Reply