10ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

 

10ஆம் பத்து 2ஆம் திருமொழி

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1858

இரக்க மின்றியெங் கோன்செய்த தீமை

இம்மை யேயெமக் கெய்திற்றுக் காணீர்

பரக்க யாமின் றுரைத்தென் இரவணன்

பட்ட னனினி யவர்க்கு ரைக்கோம்

குரக்கு நாயகர் காள்.இளங் கோவே

கோல வல்வி லிராம பிரானே

அரக்க ராடழைப் பாரில்லை நாங்கள்

அஞ்சி னோந்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.1

1859

பத்து நீள்முடி யுமவற் றிரட்டிப்

பாழித் தோளும் படைத்தவன் செல்வம்,

சித்தம் மங்கையர் பால்வைத்துக் கெட்டான்

செய்வ தொன்றறி யாவடி யோங்கள்

ஒத்த தோளிரண் டுமொரு முடியும்

ஒருவர் தம்திறத் தோமன்றி வாழ்ந்தோம்

அத்த. எம்பெரு மான்.எம்மைக் கொல்லேல்

அஞ்சி னேம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.2

1860

தண்ட காரணி யம்புகுந் தன்று

தைய லைத்தக விலியெங் கோமான்

கொண்டு போந்துகெட் டான்எமக் கிங்கோர்

குற்ற மில்லைகொல் லேல்குல வேந்தே

பெண்டி ரால்கெடு மிக்குடி தன்னைப்

பேசு கின்றதென்? தாசர தீ,உன்

அண்ட வணர் உகப்பதே செய்தாய்

அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.3

1861

எஞ்ச லில்இல்ங் கைக்கிறை யெங்கோன்

றன்னை முன்பணிந்து எங்கள்கண் முகப்பே

நஞ்சு தானரக் கர்குடிக் கென்று

நங்கை யையவன் தம்பியே சொன்னான்

விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம்

வேரி வார்பொழில் மாமயி லன்ன

அஞ்சி லோதியைக் கொண்டு நடமின்

அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.4

1862

செம்பொன் நீள்முடி எங்கள் இரவணன்

சீதை யென்பதோர் தெய்வம் கொணர்ந்து

வம்பு லாம்கடி காவில் சிறையா

வைத்த தேகுற்ற மாயிற்றுக் காணீர்

கும்ப னோடு நிகும்பனும் பட்டான்

கூற்றம் மனிட மாய்வந்து தோன்றி

அம்பி னாலெம்மைக் கொன்றிடு கின்றது

அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.5

1863

ஓத மாகட லைக்கடந் தேறி

உயர்க்கொள் மாக்கடி காவை யிறுத்து

காதல் மக்களும் சுற்றமுங் கொன்று

கடியி லங்கை மலங்க எரித்துத்

தூது வந்த குரங்குக்கே உங்கள்

தோன்றல் தேவியை விட்டு கொடாதே

ஆதர் நின்று படுகின்ற தந்தோ.

அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.6

1864

தழ மின்றிமுந் நீரையஞ் ஞான்று

தகைந்த தேகண்டு வஞ்சி_ண் மருங்குல்

மாழை மான்மட நோக்கியை விட்டு

வாழ்கி லாமதி யில்மனத் தானை

ஏழை யையிலங் கைக்கிறை தன்னை

எங்க ளையொழி யக்கொலை யவனை

சூழ மாநினை மாமணி வண்ணா.

சொல்லி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.7

1865

மனங்கொண் டேறும்மண் டோதரி முதலா

அங்க யற்கண்ணி னார்கள் இருப்ப

தனங்கொள் மென்முலை நோக்க மொழிந்து

தஞ்ச மேசில தாபத ரென்று

புனங்கொள் மென்மயி லைச்சிறை வைத்த

புன்மை யாளன் நெஞ் சில்புக எய்த

அனங்க னன்னதிண் டோளெம்மி ராமற்

கஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.8

1866

புரங்கள் மூன்றுமோர் மாத்திரைப் போதில்

பொங்கெ ரிக்கிரை கண்டவன் அம்பின்

சரங்க ளேகொடி தாயடு கின்ற

சாம்ப வானுடன் நிற்கத் தொழுதோம்

இரங்கு நீயெமக் கெந்தைபி ரானே.

இலங்கு வெங்கதி ரோன்றன் சிறுவா

குரங்கு கட்கர சே.எம்மைக் கொல்லேல்.

கூறி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.9

1867

அங்கவ் வானவர்க் காகுலம் தீர

அணியி லங்கை அழித்தவன் றன்னை

பொங்கு மாவல வன்கலி கன்றி

புகன்ற பொங்கத்தங் கொண்டு,இவ் வுலகில்

எங்கும் பாடிநின் றாடுமின் தொண்டீர்.

இம்மை யேயிட ரில்லை, இறந்தால்

தங்கு மூர்அண்ட மேகண்டு கொண்மின்

சாற்றி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ. 10.2.10

Leave a Reply